PUBLISHED ON : ஜூன் 18, 2023

'பெரயோபிட்டல் ஹைப்பர் பிக்மென்டேஷன்' எனும் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையத்திற்கு சிகிச்சை அளிப்பது, தோல் டாக்டர்களுக்கு சவாலாக இருக்கும் பிரச்னை. ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடு, சமச்சீரின்மை போன்றவற்றால், ஆண்களைக் விட, பெண்களையே அதிகம் பாதிக்கிறது.
போதுமான நேரம் துாங்காவிட்டால், கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும் என்று பொதுவாக நினைக்கலாம், மரபியல் காரணிகள், ஒவ்வாமையில் நிறமிகள் பாதிப்பதால், கண்களின் கீழ் இமைகள் பெரும்பாலும் பாதிக்கப்படும். இதுதவிர, துாக்கமின்மை, தரமற்ற, அதிக வேதிப் பொருட்கள் உள்ள 'ஐ - லைனர், மஸ்காரா' போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன் படுத்துவது, ஆஸ்துமா உட்பட உடல் கோளாறுகளால் உடலில் ஏற்படும் தாக்கம், அழற்சி காரணமாக கண்களின் கீழ் பகுதியில் கருவளையம் வரலாம்.
அடிக்கடி கண்களைத் தேய்ப்பது, கிட்டப் பார்வை, துாரப் பார்வைக்கு சரியான 'பவர்' லென்ஸ் அல்லது கண்ணாடி அணியாமல் இருப்பது, மன அழுத்தம், மொபைல் போன், போன்றவற்றின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது, குறிப்பிட்ட வயதிற்கு முன் தோல் சுருங்குவது. விட்டமின், இரும்பு சத்து குறைபாடு, நீர்க்கட்டி, தைராய்டு, கேன்சர் உட்பட ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும் நோய்கள், கண்களைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் மாறுபாடுகளால் கண் இமைகளில் வீங்கியிருப்பது போன்ற பல காரணங்கள் கருவளையம் ஏற்படக் காரணம்.
காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை ஆரம்பத்திலேயே தந்தால் தான் தீர்வு கிடைக்கும்.
டாக்டர் ஜெயலட்சுமி போஸ்,
தோல் நோய் மருத்துவர்
மதுரை

