PUBLISHED ON : பிப் 24, 2019

* தாய்ப்பால் குடிக்கும் குழந்தை அழ காரணம் என்ன?
குழந்தை அழ முதல் காரணம் வயிற்று வலி தான். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கும் அஜீரணத்தால் மலக்குடன் சுருங்கி விரியும் போது வயிற்று வலி ஏற்பட்டு குழந்தை அழத் தொடங்கும்.
* வயிற்று வலியால் அழும் குழந்தையை எவ்வாறு கண்டறிவது?
வயிற்று வலியால் அழும் குழந்தை விட்டு, விட்டு அழுகும். கீழே படுக்க வைத்தாலும் அழும், தோளில் போட்டு தட்டிக் கொடுக்கும் போது சமாதானம் ஆகிவிடும். இது போன்றவற்றை வைத்து வயிற்று வலியால் தான் குழந்தை அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை வயிற்று வலியால் அழுவது பொதுவாக மாலை நேரத்தில் அதிகம் இருக்கும்.
* குழந்தைக்கு வயிற்று வலி வராமல் தடுக்க வழியுண்டா?
வயிற்று வலியை குறைக்க தாய்மார் தாம் உண்ணும் உணவில் புரதம், வாயுத்தன்மை, உஷ்ணத்தன்மை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தட்டப்பயறு, பீட்ரூட், மொச்சைப்பயறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, புளி சேர்த்த உணவுகள், சிக்கன், முட்டை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிறுநீர், மலம் கழிக்கும் போது குழந்தை அழுவது ஏன்?
குழந்தை பிறந்து முதல் ஆறு மாதத்தில் சிறுங்குடல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் சிறுநீர்ப்பை பக்குவப்பட்டிருக்காது.
எனவே, சிறுநீரானது சிறுநீர்ப்பையில் விழுந்து சுருங்கி விரிந்து வெளியேறும்போது வலி இருக்கும். மேலும் அஜீரணத்தால் குழந்தையின் சிறுங்குடல், பெருங்குடல் சுருங்கி விரியும் போது வலி இருக்கும். எனவே, குழந்தை சிறுநீர், மலம் கழிக்கும் போது அழுவது இயற்கை தான். இது குழந்தை வளர வளர ஆறு முதல் எட்டு மாதத்திற்குள் சரியாகி விடும்.
* குழந்தையின் காது ஜவ்வில் நீர்க் கோர்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என்ன
குழந்தை பருவத்தில் காது, மூக்கு, தொண்டை இந்த மூன்று உறுப்புகளின் துவாரங்களும் அருகில் அருகில் இருக்கும். இதை இணைக்கக்கூடிய உறுப்பிற்கு பெயர் 'ஈஸ்டேசியன் டியூப்'. குழந்தைகளுக்கு படுத்துக் கொண்டே பால் கொடுக்கும் போது தொட்டிலில் போட்டு ஆட்டும் போதும், வெளியில் குளிர்ந்த காற்றில் செல்லும் போதும் காதில் உட்புறத்தின் அழுத்தம் ஏற்பட்டு குழந்தைக்கு காது வலி ஏற்படுகிறது.
இதை கண்டறிய குழந்தை தலையை ஆட்டிக் கொண்டே இருக்கும். காது ஓரத்தில் முடியை இழுத்தல், பசி இருந்தும் பால் சரியாக குடிக்காமல் இருக்கும். தூக்கத்தில் குப்புறப்படுத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். பொதுவாக குழந்தை பசி மற்றும் தாகம் எடுக்கும்போது அழுகும். அப்போது தாய்ப்பால் கொடுத்து பசி நின்றவுடன் அழுகையும் நின்று விடும்.
- டாக்டர் பிரசன்ன கார்த்தி
குழந்தை நல நிபுணர்,
மதுரை
அலைபேசி 96299 02323
