PUBLISHED ON : ஆக 10, 2016

ஜூலை 31, -2016
'சைல்டு ஒபிசிடி' (child obesity) எனப்படும் குழந்தை பருவ உடல் பருமன், சமீப ஆண்டுகளில் ஒரு தொற்று நோய் போல உருவெடுத்து உள்ளது. உலக மக்கள் தொகையில், 5 சதவீத குழந்தைகள், உடல் பருமனோடு இருக்கின்றனர். இந்திய அளவில் பஞ்சாப் முதலிடத்திலும் தமிழ்நாடு ௪வது இடத்திலும் உள்ளன. உடல் பருமனான குழந்தைகளில் ஒருவன் தான் சதீஷ்.
சரியான உடல் எடையில் இருந்த சதீஷ், பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததும், துரித உணவு, ஸ்நாக்ஸ் என்று ஒரு கை பார்க்க ஆரம்பித்தான். சதீஷின் தாய் திவ்யா, பழத் துண்டுகளை கொடுத்தனுப்பினால், சாப்பிடாமல் அப்படியே திரும்ப கொண்டு வந்து விடுவான். ஆனால், எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ் வகைகள் என்றால், முழுவதையும் சாப்பிட்டு இருப்பான். இந்தப் பழக்கம் தொடர்ந்ததால், உடல் பருமனாகிக் கொண்டே போனது. குறட்டை விட ஆரம்பித்தான். மூச்சுவிட சிரமப்பட்டான். சிறிது துாரம்கூட நடக்க சிரமப்பட்டான். என்னிடம் அழைத்து வந்தபோது, அவனைப் பார்த்த உடனேயே,
பிரச்னை என்ன என்பது தெரிந்தது.மரபணுக் கோளாறு, நாளமில்லா சுரப்பிகளின் செயல்திறன் குறைவு, மெட்டபாலிக் சிண்ட்ரோம் எனப்படும் உடல்
உள் உறுப்புகளின் செயல்திறன் குறைபாடு, மன அழுத்தம், சுற்றுச்சூழல், கொழுப்பு சத்திலிருந்து உற்பத்தியாகும் 'லெப்டின்' எனும் ஹார்மோன் குறைபாடு, இந்த ஹார்மோன் உடலில் குறைந்தால், குழந்தைகள் உணவு உண்பது கட்டுப்பாடு இல்லாமல் போகும். மேற்சொன்னவையே உடல் பருமனுக்கான காரணிகள். அதோடு, துரித உணவு, குறைந்தஅளவு துாக்கம், உடற்பயிற்சி இல்லாததும் ஒபிசிடிக்கு காரணம். உடல்
பருமனால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், இன்சுலின் அளவு சீராக இருந்தாலும் அதன் செயல்திறன் சீராக இருக்காது. இதனால் நீரிழிவு வரும்.
பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பருவமடைவது, பித்தப்பையில் கற்கள், கல்லீரலில் கொழுப்பு படிவது, போன்ற
பிரச்னைகள் வரும். இதற்கு, பன்முறை மருத்துவத்தின் மூலம், சிகிச்சை அளிக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு, சீரான உடற்பயிற்சி செய்தும், எடை குறைய வில்லை என்றால், மருந்துகள் தர வேண்டும். அதிலும் எடை குறையவில்லையெனில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சதீஷ், தினமும் குறைந்தது ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சியோடு நீச்சல் பயிற்சியும் செய்தான். இதோடு உணவுக் கட்டுப்பாடும் சேர்ந்து, ஓராண்டில் ஆரோக்கியமாக உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக ஓடியாடி விளையாட ஆரம்பித்து விட்டான்.
எஸ்.எம். ராஜேந்திரன்
பொது மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்.
சென்னை.
98941 18899
