PUBLISHED ON : ஆக 10, 2016

அந்தப் பெண்ணின் பெயர் பிரேமா. வயது ௩௬. என்னிடம் வந்தபோது, தலை வலி, கழுத்து வலி, முதுகு வலி, ஜீரண கோளாறு, துாக்கமின்மை, படபடப்பு, சில சமயங்களில் தற்கொலை எண்ணங்கள் என்று, பல உடல் பிரச்னைகள் தனக்கு இருப்பதாகச் சொன்னார். பல டாக்டர்களைப் பார்த்து, எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து, உடலில் எந்த கோளாறும் இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆனால், எனக்குப் பிரச்னை இருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பிரச்னை இல்லாவிட்டால், இத்தனை வலிகள் ஏன் வருகிறது என்பது பிரேமாவின் வாதம். 'நல்லா என்கூடப் பேசற டாக்டர் வேணும்' என்று தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்ல, என்னிடம் போகச் சொல்லியிருக்கின்றனர் அவர்கள். 'சரி உங்களைப் பற்றி சொல்லுங்கள்' என்றேன். அமைதியாக இருந்தார். உங்கள் பெயர் என்ன, எப்போது திருமணம் ஆனது, எத்தனை குழந்தைகள் என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டேன். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க மொத்தமாக ஏழு, எட்டு செஷன்கள் தேவைப்பட்டன. திருமணமாகி வந்தவுடன் மாமியார், கணவருடன் வாழ்க்கை. சில ஆண்டுகளில் இவரையும் ௨ குழந்தைகளையும் விட்டுவிட்டு, கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். வீட்டில் மாமியார் சொல்வதுதான் வேதம். குழந்தைகள் இருவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதால், பாட்டி சொல்வதைத்தான் அவர்கள் கேட்கின்றனர். மாமியார் சொல்வதை மட்டுமே செய்து பழகியதில், தன் சுயத்தையே மொத்தமாக இழந்துவிட்டார். இரவு படுக்கையில் படுத்தவுடன், துாக்கம் கண்களை சுற்றும். ஆனால், பல நாட்கள் மாமியார் வந்து எழுப்பி உட்கார வைத்து எதையாவது பேசிக் கொண்டிருப்பார். இந்த தொல்லை தாங்க முடியாமல், அவரின் மற்ற மருமகள்கள் தனிக் குடித்தனம் போய்விட, இவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், தன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளியில் சொல்லாமல், மனதிலேயே வைத்து புழுங்கிய நிலையில், மாமியாரை எதிர்த்துப் பேசவும் முடியாமல், அவர்கள் சொல்வதை முழு மனதுடன் ஏற்கவும் இயலாமல், தவிப்பிலேயே நாட்கள் கழிந்தன. என் அட்வைஸ் தன் குடும்ப வழக்கத்தை மாற்றாமல், அப்படியே உங்களுக்கு பழக்க வேண்டும் என்று மாமியார் விரும்புகிறார். அதற்காக அவரால் செய்ய முடியாத காரியங்களை உங்களை வைத்து செய்கிறார். அவருக்கும் உங்களை விட்டால், பேசுவதற்கு யாரும் இல்லை. அவர் இடத்தில் இருந்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள். இது ஒரு பிரச்னையாகவே தோன்றாது. சிகிச்சை தொடர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்தால் (௨ வாரங்கள் முதல் ௨ மாதங்கள் வரை), ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிக்கும். மனஅழுத்தம்தான் அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் காரணம். மூச்சுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகளை கற்றுக் கொடுத்தோம். மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.
பி.இளையராஜா
மனோதத்துவ நிபுணர்
99623 46966
