தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஆக 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

என் மகளுக்கு வயது 10. சமீபத்தில் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டாக்டரிடம் காட்டினேன். சில மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், அவளுக்கு, 'வைட்டமின் டி' குறைபாடு இருப்பதாக கூறினார். என் மகள் வீட்டிலேயே அடைந்து கிடைப்பவள் இல்லை. வெளியில் போய் நன்றாக விளையாடுவாள். அப்படியும் இந்தக் குறைபாடு ஏன் வந்தது?

எஸ்.சங்கீதா, சென்னை.


என்ன உடல் கோளாறுடன் டாக்டரிடம் சென்றாலும், 'வைட்டமின் டி' பரிசோதனை செய்யச் சொல்வது, தற்போது வழக்கமாகிவிட்டது. எனக்கும், என் உறவினர் சிலருக்கும், இந்த அனுபவம் உண்டு. விளம்பரங்களிலும் சில வகை சமையல் எண்ணெயில், 'வைட்டமின் டி' சேர்த்திருப்பதாக வருகிறது. இந்த குறிப்பிட்ட 'வைட்டமின் டி' எதில் உள்ளது? எப்படி பெறலாம்? என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

மகேஸ்வரி பாபு, கோவை.


நம்முடைய நாடு உஷ்ணமான வானிலை உள்ள நாடு. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், வெயில் இருக்கிறது. அப்படியும், 'வைட்டமின் டி' குறைபாடு அதிகரித்து இருப்பது, வருத்தமான விஷயம். இதற்கு காரணம், 20 ஆண்டுகளாக நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியதே. குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன் அலுவலகம் சென்று, சூரியன் மறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். சூரிய வெளிச்சம் என்பதே அவர்கள் மேல் படுவதில்லை. அடுத்தது, பள்ளி செல்லும் குழந்தைகளின் நேரம் மாறிவிட்டது. காலை 7:00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, மாலை 4:00 மணிக்கு பள்ளியைவிட்டு வெளியில் வருகின்றனர். பி.டி., வகுப்புகள் பெரும்பாலும் கிடையாது. பல பள்ளிகளில், மைதானங்களே இல்லை. முற்றிலும், 'ஏசி' செய்யப்பட்ட பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி, ஜன்னல்களைக் கூட திறப்பதில்லை.

இப்படி இருக்கும் சூழலில், சூரியஒளி எங்கிருந்து நம் மீது படும்? காலை 10:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, நம் மீது படும் சூரியனில் இருந்துதான், அன்றாடம் நம் உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி'யை உடல் உற்பத்தி செய்து கொள்ளும். இந்த குறிப்பிட்ட நேரத்தில், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள், 15 நிமிடங்கள் சூரியஒளி நேரடியாக படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது. தேவையான, 'வைட்டமின் டி' சத்தை உணவு மூலமாகப் பெற முடியுமா என்றால், மிக குறைந்த அளவே சாத்தியம். அதிலும் பால், முட்டை, மீன் இவற்றில் மட்டுமே உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகள் மேலும் வெயில் படுவதில்லை. நாட்டுக் கோழி முட்டையில், 'வைட்டமின் டி' உள்ளது. ஆனால், தற்போது நாட்டுக் கோழியே கிடையாது. சாலமன் உட்பட சில வகை மீன்களில் மட்டுமே 'வைட்டமின் டி' உண்டு. காலை 10:00 மணிக்கு மேல் வெளியில் செல்பவர்களும், சன் ஸ்கிரீன் உட்பட பல லோஷன்களை தடவிக் கொள்கின்றனர். இது நேரடியாக வெயில் தோலில் படுவதைத் தடுக்கிறது. நேரடியாக சூரியஒளி, நம் தோல் மீது படும்போது உற்பத்தியாகும் 'வைட்டமின் டி' மட்டுமே ஆரோக்கியமானது. அப்படி இல்லாத பட்சத்தில், மேலை நாடுகளைப் போல, உணவுப் பொருட்களில், 'வைட்டமின் டி' சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. உங்கள் குழந்தை வெளியில் போய் விளையாடும் குழந்தையாக இருக்கலாம். ஆனால், வெயில் படும்படியாக விளையாடுகின்றனரா என்பது தெரியவில்லை.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன், டயட்டீஷியன், சென்னை

dhar.krish@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us