PUBLISHED ON : அக் 29, 2019

'டிப்தீரியா' பாதிப்புக்கு குழந்தைகள் உள்ளாவது எதனால்?
குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா வயதினரையும், இந்த தொற்று பாதிக்கும். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.இது, மிகவும் ஆபத்தானது. முறையான சிகிச்சை, சரியான நேரத்தில் தராவிட்டால், பாதித்தவர்களில், 10 சதவீதத்தினர், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
டிப்தீரியா பரவுவது எப்படி?
பாக்டீரியா தொற்றால், டிப்தீரியா பாதிப்பு ஏற்படுகிறது. எந்த அறிகுறிகளையும் வெளியில் காட்டாமல், மனிதர்களின் சுவாசப் பாதையில் வாழக் கூடியது, இந்த குறிப்பிட்ட வகை பாக்டீரியா கிருமி. எனவே, கிருமி பாதித்தவர் இருமும்போது, தும்மும்போது, காற்றில் இந்த கிருமி பரவுகிறது. அருகில் இருப்பவர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராக இருந்தால், அவரை எளிதில் தொற்றுகிறது.நான்கு நாட்கள் தொடர்ச்சியாக, 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிட்டால், நோய் பாதித்தவரிடம் இருந்து கிருமி, மற்றவர்களுக்கு பரவாமல், வீரியம் இழந்து விடும்.
நோய் தொற்றின் அறிகுறிகள் எவை?
சளி, ஜலதோஷம் போன்ற சுவாசப் பிரச்னைகளுடன், முதலில் ஆரம்பிக்கும். அத்துடன், காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், கரகரப்பான குரல் போன்ற அறிகுறிகளும் வரலாம். அறிகுறிகள் திவீரமானால், விழுங்குவதற்கும் சுவாசிப்பதற்கும் சிரமமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு, உடல் சோர்வு, தலைவலியும் இருக்கலாம். வெள்ளை கலந்த சாம்பல் நிற படிமம், தொண்டையில் அடிக்கடி ஏற்படும். கடைசி நிலையில், இதயம், சிறுநீரகங்களும் பாதிக்கப்படலாம்.மிகவும் அரிதாக, தோலில் புண்கள் ஏற்படலாம். ஆனால், இது டிப்தீரியாவால் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்வது கடினம்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
டிப்தீரியாவிற்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக குழந்தையை, மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். தொண்டையில் படிந்துள்ள அடுக்கிலிருந்து திரவத்தை எடுத்து, பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்ய வேண்டும். இந்த முறையில், டிப்தீரியா பாக்டீரியா தொற்று தானா என்பதை உறுதி செய்வதும் சற்று கடினம். காரணம், சோதனைக் கூடத்தில், கிருமியை வளரச் செய்வது இயலாது.உடனடியாக, 'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தர வேண்டும். பாக்டீரியா உற்பத்தி செய்யும் நஞ்சு திரவத்தை சமன் செய்யும் வகையில், அதற்கான மருந்தையும் தர வேண்டும். இந்த திரவம், பல சிக்கலான பக்க விளைவுகளை ஏற்படுத்தலம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். தொண்டையில், படியும் அடுக்கினால், சுவாசப் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற சமயங்களில், செயற்கை சுவாசம் தர வேண்டியிருக்கலாம். இப்படி செய்ய முடியாத நிலையில், சுவாச குழாயில் அறுவை சிகிச்சை செய்து, 'டிரக்யோஸ்டமி' குழாய் பொருத்த வேண்டும்.நெருங்கிய உறவினர்கள், வகுப்பு மாணவர்களுக்கு நோய் கிருமி பாதிப்பை தடுக்க, பாதுகாப்பு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
டிப்தீரியா வராமல் தடுப்பது எப்படி?
இதற்கான தடுப்பு மருந்து, வலிமையுடன் நோயை எதிர்க்கக் கூடியது. குழந்தை பருவத்தில் போடும் மற்ற தடுப்பூசிகளோடு, அவசியம் இதையும் போட வேண்டும். 'டிபிடி' என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியில், டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகியவை வராமல் தடுக்க முடியும். குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்குள், மூன்று முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். ஆறு வயது முடிவதற்குள், இரண்டு முறை, 'பூஸ்டர் டோஸ்' கொடுக்க வேண்டும்.இந்த நோய் பாதித்தவரின் நெருங்கிய உறவினர்கள், குறிப்பாக பெற்றோர், சிறு வயதில் தடுப்பூசி போட்டிருந்தாலும், மீண்டும் போட வேண்டியது முக்கியம்.முற்றிலும் தடுக்கக் கூடிய நோய் இது. இதுவரையிலும், தடுப்பூசி போடாவிட்டால், இனிமேலாவது போட்டுக் கொள்ள வேண்டும்.
டாக்டர் பால ராமசந்திரன்
தலைவர், அவசர சிகிச்சை பிரிவு,
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை,
சென்னை
044 - 4200 1800
