தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?

புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?

புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?


PUBLISHED ON : பிப் 05, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என, மும்பை தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பாஷி அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், பெண்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிடும் இதழில், டாக்டர் பாஷி, இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

புடவைக்கு உள்ளாடையாக கட்டப்படும் பாவாடை நாடா அல்லது எலாஸ்டிக் பட்டை இறுக்கமாக இருந்தால், பெண்களின் இடுப்பு பகுதியில் சிறு, சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு, ஒரு சிலருக்கு, நாளடைவில் புண்ணாக மாறும். இந்த புண்ணுக்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால், அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இடுப்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்களுக்கு, எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 'பெட்டிகோட்' அல்லது 'இன்ஸ்கர்ட்' போன்ற ஆடைகளை இறுக்கமாக அணியும்போது நாடாவை ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப கட்டுவதால், நாளடைவில் புண் உருவாகி, புற்றுநோயாக மாறும். ஆண்களை பொறுத்தவரை ஜீன்ஸ், அல்லது பேன்ட் பெல்ட் இறுக்கமாக இருந்தாலும், அதிலிருந்து வெளியாகும் அழுத்தம், விரிந்து எல்லா இடத்துக்கும் பரவுவதால் அவர்களுக்கு புண் ஏற்படாது.

இவ்வாறு அந்த டாக்டர் கூறியுள்ளார்.

இந்த தகவல் பல பெண்களிடையே கலக்கத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னையை சேர்ந்த புற்றுநோய் டாக்டர்களிடம் கேட்டபோது, அவர்கள் இதை முற்றிலுமாக மறுக்கின்றனர். 'எங்கள் அனுபவத்தில் அதை போன்று புடவை புற்றுநோயை பார்த்ததில்லை. பாடத்திலும் படித்ததில்லை' என்கின்றனர்.

காஞ்சிபுரம், அரசு அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர், பாலு டேவிட் இதுகுறித்து கூறியதாவது: புடவை கட்டும் பெண்கள் உள்ளாடைகளை இறுக்கமாக கட்டுவதால் புற்றுநோய் வரும் என்பது, இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று. பொதுவாக தோல் புற்றுநோய், சூரிய கதிர்களால் தான் ஏற்படுகிறது. குறிப்பாக வெண் தோல் உள்ளவர்களுக்கு தான் ஏற்படும். அவர்களுக்கு தோலில், 'மெலானின்' என்ற பொருள், குறைவாக இருப்பதால், தோல் புற்றுநோய் வருகிறது.

ஆனால், இந்தியர்களுக்கு, இந்த குறை பெரும்பாலும் இருப்பதில்லை. உள்ளாடையை இறுக்கமாக கட்டுவதால் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த இடத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, அந்த இடத்தில் கிருமி தொற்று வரும். ஆனால், புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக நான் படிக்கவும் இல்லை. என் அனுபவத்தில் பார்த்ததும் இல்லை.

இவ்வாறு பாலு டேவிட் கூறினார்.

ராமச்சந்திரா மருத்துவமனை புற்றுநோய் துறை பேராசிரியர் அனிதா ரமேஷ் கூறியதாவது:

புடவை கட்டுபவர்கள், உள்ளாடையை இறுக்கமாக கட்டுவதால் இடுப்பில் புண் ஏற்பட்டு சிலருக்கு கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இடுப்பில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நாள்தோறும் ஒரே இடத்தில் நாடாவை இறுக்கமாக கட்டுவதால், வியர்த்து, ஈரமாகி அதனால் கிருமி தொற்று ஏற்படும். கர்ப்ப பை புற்று, சினைப் பை புற்று போன்றவை, பாபிலோனா வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இடுப்பில் ஏற்படும் புண்ணில், பாபிலோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.

காமாட்சி மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: நான் 1996ம் ஆண்டில் இருந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறேன். புடவை கட்டும் பெண்கள், உள்ளாடையை இறுக்கமாக அணிவதால், புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இறுக்கமாக கட்டுவதால், புண் ஏற்பட வாய்ப்புண்டு. உரிய சிகிச்சை எடுத்தால், அது சரியாகி விடும்.

ஆனால், ஒரு போதும் அந்த புண், புற்று புண்ணாக மாற வாய்ப்பில்லை. அந்த மும்பை டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு வேறு காரணத்தால் தோல் புற்றுநோய் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், உள்ளாடையை இறுக்கமாக அணிவதால் ஒருபோதும் புற்று நோய் வராது.

இவ்வாறு டாக்டர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us