PUBLISHED ON : ஏப் 27, 2016

ஒருவருக்கு என்ன உடல் பிரச்னை வந்திருக்கிறது என்பதைக் காட்டிலும் முக்கியம், அந்த பிரச்னையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான். பிரச்னையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து, ஒரே விதமான உடல் பிரச்னை வெளிப்படுத்தும் அறிகுறிகளும், உணர்ச்சிகளும் நபருக்கு நபர் மாறுபடும். இதை, மூன்று வகைகளாக பிரித்துப் பார்க்க வேண்டும். சைக்கோ சோமாடிக் டிஸ்சார்டர். 'அதாவது, மனதில் ஏற்படும் பிரச்னைகளைத் தொடர்ந்து, அதனால் உடலில் வரும் பிரச்னைகள். உதாரணமாக, 'இர்ரிடபில் பவுல் சிண்ட்ரோம்' இருந்தால், காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஆகும்போது, டாய்லெட்டிற்கு தான் ஓடுவர். இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் பெரும்பாலான மக்களுக்கு, 'பெப்டிக் அல்சர்' எனப்படும், வயிற்றுப் புண் இருந்தது. வான்வழித் தாக்குதல் நடக்கும்போது ஏற்பட்ட பீதியும், அடிக்கடி கேட்கும் குண்டு வெடிப்பு சத்தமும் தான் காரணம்.
அதேபோல ஆஸ்துமா நோயாளிகள், ரோஜாப் பூக்களின் வாசனையை முகர்ந்தவுடன், ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆஸ்துமாவை அதிகரிக்கிறது என்பது தெரியவந்தது. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டால், காகித ரோஜாவின் பக்கத்தில் சென்றாலும், அது அவர்களின் ஆஸ்துமா பிரச்னையை அதிகப்படுத்தும். 'பெப்டிக்' அல்லது 'கேஸ்ட்ரிக் அல்சர்' இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் இருந்தால், வயிற்றில் பிரச்னை லேசாக வரும்போதே, அதை முந்திக் கொண்டு பய உணர்ச்சி, படபடப்பு, வியர்வை, நமக்கு ஏதோ நடக்கப் போகிறது என்ற பதற்றம் எல்லாம் சேர்ந்து, சூழ்நிலையையே பரபரப்பாக்கி விடுவர். சொரியாசிஸ் எனப்படும் தோல் பிரச்னை, மன அழுத்தம் இருக்கும் சமயங்களில், மிக அதிகமாக தெரியும். சமீபத்திய ஆய்வில் புற்றுநோய் இருந்தால், அதை நம்பிக்கையோடு எதிர் கொள்பவர்கள், புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைவதாகவும், அதே சமயத்தில், முதற்கட்ட கேன்சராக இருந்தாலும், 'அவ்வளவு தான் என் வாழ்க்கை' என்று, கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் சிகிச்சை, எதிர்பார்த்த அளவிற்கு பலன் தருவதில்லை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சிலர் இருக்கின்றனர். வெளிக் காரணியால், லேசான தலைவலி என்றாலும், 'ஏன் எனக்கு அடிக்கடி தலைவலி வருகிறது? மைக்ரேன் இருக்குமோ? மூளையில் ஏதாவது பிரச்னையோ?' என்று, அது தொடர்பான கற்பனைக்கு எட்டாத சிந்தனை செய்து, சிறிய பிரச்னைனைய பெரிதாக்கி கொள்வர்.
சில உடல் பிரச்னைகளுக்கும், மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. உதாரணத்திற்கு, சர்க்கரை நோய். சர்க்கரை பெரும்பாலும் மன அழுத்தத்துடன் சேர்ந்தே இருக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களை பரிசோதித்தால், அவர்களுக்கு மன அழுத்தமும் கூடவே இருக்கிறது.
சரி, இதற்கு என்னதான் தீர்வு? உடலும், மனமும் வேறு வேறில்லை என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனதை எப்போதும் ரிலாக்ஸ்சாக வைத்துக் கொள்ள வேண்டும். முறையாக தியானம், யோகா அல்லது எந்த விஷயத்தில், உங்களுக்கு முழு ஈடுபாடு உள்ளதோ, அதை செய்யலாம். மனதை அக்கறையோடு கவனித்துக் கொண்டால், எந்த பிரச்னை வந்தாலும் எளிதாக கையாளலாம்.
டாக்டர் லட்சுமி விஜயகுமார்
மனநல சிறப்பு மருத்துவர்
