PUBLISHED ON : ஏப் 27, 2016

குறைமாத பிரசவம் என்பது என்ன?
முழுமையான கர்ப்ப காலம் என்பது, 40 வார காலம். ஆனால், 37 வாரங்களுக்கு முன் நடக்கும் பிரசவம், குறைமாத பிரசவம்.
37 வாரங்களுக்கு முன் குழந்தைகள் பிறக்க காரணம்?
குழந்தை பாதுகாப்பாக இருக்க உதவும் பனிக்குடம் உடைவது. ஆரோக்கியமற்ற உணவு முறை.
மேற்சொன்ன காரணங்கள் தவிர, மற்ற மருத்துவ காரணங்கள் என்னென்ன?
நோய்த் தொற்று, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், கர்ப்ப கால நீரிழிவு, மன உளைச்சல், கர்ப்பப்பை வாய் சிறியதாக இருப்பது, கருவில் இரட்டைக் குழந்தைகள் உண்டாவது இதற்கான காரணங்கள்.
முதல் பிரசவம் குறைமாத பிரசவமாக இருப்பின், அடுத்ததும் அவ்வாறே இருக்க வாய்ப்புண்டா?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கர்ப்பப்பை வாய் சிறியதாக இருப்பது, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை, அடுத்தடுத்து குறைமாத பிரசவம் நிகழ வாய்ப்புண்டு.
குறை மாத குழந்தைகளை, 'இன்குபேட்டரில்' வைத்து பாதுகாக்க என்ன காரணம்?
குறை மாதக் குழந்தைகளின் சீரான உடல் வெப்ப நிலைக்காகவும், எளிதில் நோய் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கவும், இன்குபேட்டரில் வைத்து பராமரிப்பது அவசியம்.
குறை மாத குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை குளிப்பாட்டக் கூடாது என்கின்றனரே?
உடல் வெப்பம் குறைய வாய்ப்புகள் அதிகம் என்பதால், குழந்தை சராசரி உடல் எடையான, இரண்டரை கிலோ வரும் வரை, குளிக்க வைக்க கூடாது. அதோடு நோய்த் தொற்று ஏற்படவும், காது மற்றும் மூக்கில் தண்ணீர் போகவும் வாய்ப்புகள் உள்ளன. தினமும், தூய்மையான துணியை சுடுதண்ணீரில் நனைத்து துடைக்கலாம்.
குறை மாதத்தில் பிறந்தால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன?
மூச்சுத்திணறல் இருக்கும். காரணம், நுரையீரல் வளர்ச்சி முழுமையடைந்திருக்காது. தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் இருக்கும். மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
குறை மாதத்தில் குழந்தையை பிரசவிக்கும் தாய்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு இருக்குமா?
குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க குடிக்கத்தான், தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஆனால், குறைமாத குழந்தைகளுக்கு உறிஞ்சிக் குடிக்கத் தெரியாது என்பதால், தாய்தான் பாலை பீய்ச்சி எடுத்து, பாலாடையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்பிகள் செயல்படாத தாய்மார்களுக்கு, மருந்து, உணவு முறையில் மாற்றத்தின் மூலம் பிரச்னையை சரி செய்யலாம்.
கோடை காலத்தில் பிறக்கும் குறைமாத குழந்தைகளை, 'ஏசி' அறையில் வைக்கலாமா?
கட்டாயம் வைக்கலாம். குழந்தைக்கு துணி அணிவதோடு, கைகால்களுக்கு சாக்ஸ் அணிவித்து, 'ஏசி' யை, 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைக்கலாம்.
குறைமாத பிரசவங்களை தடுப்பது எப்படி?
கர்ப்பம் உறுதியான நாளிலிருந்து முறையான மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவது பாதுகாப்பானது.
- ச.மணிகண்டன்
பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர்.
க்ளவுட்நைன் மருத்துவமனை தி.நகர் சென்னை.
