PUBLISHED ON : செப் 23, 2012
* பிளஸ் 2 படித்து வரும் மாணவன் நான். என் உடல், மிகவும் பருமனாக உள்ளது. கொழுப்பு அதிகமாக இருந்தால், புற்றுநோய் அதிகம் வரும் என்கின்றனர். அது உண்மையா?
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு, மார்பகம் மற்றும் மலக்குடல் போன்ற பகுதிகளில், புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், உங்கள் வயதில் உடல் பருமனாவதற்கு, தைராய்டு போன்ற சுரப்பிகள், குறைவாக வேலை செய்வதால் இருக்கலாம். நீங்கள் புற்றுநோய் பற்றிய கவலையை மறந்துவிட்டு, தைராய்டு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ளவும்.
*நான், 25 வயது நிரம்பிய ஓர் ஆசிரியர். எனக்கு, 'ஹெபடைடிஸ் பி' நோய் பாதிப்பு உள்ளது. இப்போது நான், 'ஹெபடைடிஸ் பி' நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
தடுப்பூசி என்பது, நோய் வரும் முன் போடக் கூடியது. நோய் வந்தபின், அதை தடுப்பூசியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், 'ஹெபடைடிஸ் பி' வந்ததில் இருந்து, முன்னெச்சரிக்கையுடன் நீங்கள் இருந்தால், அதுவே போதுமானது.
* நான் ஒரு பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில், 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். எனக்கு புற்றுநோய் வருமா?
பிளாஸ்டிக் கழிவுகளாலும், பிளாஸ்டிக்கை எரிப்பதால் உண்டாகும் ரசாயன பொருட்களாலும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே, நீங்கள் உங்களது வேலை முடிந்து வந்தவுடன், கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு, சாப்பிடுவது நல்லது.
டாக்டர் மோகன்பிரசாத், மதுரை.
98430-50822