கனவு தவிர்... நிஜமாய் நில்!: அளவுக்கு மிஞ்சினால் சுகாதாரமும் நஞ்சு!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: அளவுக்கு மிஞ்சினால் சுகாதாரமும் நஞ்சு!
PUBLISHED ON : ஆக 26, 2018

சிறுநீர் பாதையில், கிருமிகள் தாக்கத்தால் ஏற்படும் சிறுநீர்த் தொற்று, ஆண்களை காட்டிலும், பெண்களையே அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
பிறப்புறுப்பும், சிறுநீர்ப் பாதையின் வெளிப்பகுதியும், இயற்கையிலேயே மலக்குழாயின் அருகில் இருப்பதே, இதற்கு காரணம். மேலும் மாதவிடாய், கர்ப்ப காலம், மகப்பேறு தருவாயில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், சிறுநீர்த் தொற்று அதிகம் ஏற்படுகிறது.
வயதுக்கு வராத பெண் குழந்தைகளுக்கும், ஹார்மோன் மாற்றத்தாலேயே சிறுநீர்த் தொற்று அதிகம் ஏற்படுகிறது. 'மெனோபாஸ்' அடையும் பெண்களுக்கும், இந்தப் பிரச்னை வரலாம். குடற்புழு தாக்கத்தால், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம்.
சிறுநீர் பாதையில் அரிப்பு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், புண்கள் ஏற்பட்டாலும் இது வரலாம். இது போன்ற பிரச்னை பெண் குழந்தைகளுக்கு இருந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற்று, பாலியல் வன்முறை நடந்துள்ளதா என்பதை, அம்மாக்கள் கவனிக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சுய சுகாதாரம் பேணுவதை பற்றி தெளிவாக கற்றுத் தருவதுடன், நல்ல தொடுதல் எது, தவறான நோக்கத்துடன் தொடுவது எது என்பதை, தெளிவாக உணரச் செய்வது மிகவும் அவசியம்.
சுய சுகாதாரம் என்ற பெயரில், அடிக்கடி, வெகு நேரம் நீரில் கழுவுவதால், கெட்ட பாக்டீரியாக்களுடன் சேர்ந்து, நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்படும். அளவுக்கு அதிகமான துாய்மையும் துன்பம் தான்.
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அரிப்பு, எரிச்சல், ரத்தம் கலந்து வருவது, விலாப் பகுதியில் வலி, அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம், குளிருடன் கூடிய காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
நோய் தொற்றைத் தடுக்க, ஒரு நாளைக்கு, மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்;
நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்; டாக்டரை ஆலோசிக்காமல், மருந்து சாப்பிடக் கூடாது; காபி, டீ தவிர்க்க வேண்டும்.
டாக்டர் மீரா ராகவன்
சிறுநீரக மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
dr.meeraragavan@gmail.com
