sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

உறவினர்கள் கிண்டலடிப்பர் என கவலை வேண்டாம்!

/

உறவினர்கள் கிண்டலடிப்பர் என கவலை வேண்டாம்!

உறவினர்கள் கிண்டலடிப்பர் என கவலை வேண்டாம்!

உறவினர்கள் கிண்டலடிப்பர் என கவலை வேண்டாம்!


PUBLISHED ON : செப் 05, 2010

Google News

PUBLISHED ON : செப் 05, 2010


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த ஞாயிறன்று நீங்கள் அனைவரும் காலை எழுந்திருப்பதற்கு முன், என்னுடன், கிட்டத்தட்ட 8,000 பேர் சென்னையில் மாரத்தான் போட்டியில் ஓடிக் கொண்டிருந்தோம்! எனக்கு 58 வயதாகிறது. பேரன், பேத்தி எடுக்கும் வயது! ஆனால், ஓட்டத்திற்கு ஆண், பெண் தடை இல்லையே! எங்களை உற்று நோக்கி, 'கமென்ட்' அடித்து, கிண்டலடித்தவர்களைத் தவிர, வேறு எந்தப் பிரச்னையும் இன்றி, நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டோம்.

குழந்தைகள், சந்தோஷத்திற்காக ஓடுகின்றனர். அதுவே, வயதானவர்கள் ஓடும் போது, அவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. ஓட்டப் பயிற்சியின் மிகப்பெரிய சவுகரியம், செலவே இல்லாத பயிற்சி என்பது தான். ஒரு ஜோடி ஷூ, ஒரு ஜோடி சாக்ஸ் மட்டும் போதும்; வேறு செலவுகள் ஏதும் கிடையாது.

உடல் எடை குறைய, ஓட்டப் பயிற்சி தான் மிக எளிதான பயிற்சி. ஒரு மணி நேர ஓட்டப் பயிற்சி 500 கலோரி சக்தியை எடுத்துக் கொள்கிறது. உடலில் 3,500 கலோரி சக்தி குறைந்தால், அரை கிலோ எடை குறையும். ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், உடலில் வளர்சிதை மாற்றம் நல்ல முறையில் ஏற்பட்டு, உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அறிவுப்பூர்வமான உணவுக் கட்டுப்பாட்டுடன், ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், ஒரே மாதத்தில், உடல் எடை சீராகும்; கட்டுக்கோப்பான உடல் கிடைக்கும். ஓடும் போது, உடலில் ரத்த நாளங்கள் விரிவடைந்து சுருங்கும் செயல்பாடு மும்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் நோய் தவிர்க்கப்படுகிறது. பக்கவாதம், இதய அடைப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன.

வயதான தோற்றம் ஏற்பட யாருமே விரும்புவதில்லை. ஓடும் போது, தசையும், எலும்பும் நல்ல நிலையில் இயக்கம் பெறுகின்றன. அவற்றின் பலம் அதிகரிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் உருவாவது தவிர்க்கப்படுகிறது. ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், முகச் சுருக்கங்களை நீக்கச் செய்து கொள்ளப்படும் போடோக்ஸ் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி ஆகியவை தேவையே இல்லை. அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம். மனதை குஷிப்படுத்த போதை  மருந்து பயன்படுத்துவது சட்ட விரோதமானது. ஆல்கஹால் பருகுவது, நல்லதல்ல. ஆனால், ஓட்டப் பயிற்சியின் மூலம், சந்தோஷம் அடையலாம்.  ஓடும் போது, மனதை மகிழ்ச்சியாக வைக்கும், 'எண்டார்பின்'கள் அதிகம் சுரக்கின்றன. 45 நிமிட ஓட்டப் பயிற்சி, நாள் முழுவதும் நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது.

சாலையில் ஓடும் போது, கவனம் முழுவதும் சாலையில் தான் இருக்க வேண்டும். வீட்டுப் பிரச்னை, அலுவலகப் பிரச்னைகளை யோசிக்கக் கூடாது. மன அழுத்தத்தை விரட்ட, இது சிறந்த வழி. மாணவர்கள் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், பாடத்தில் கவனம் அதிகரித்து, எந்த நாளும் இனிய நாள் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. மனதையும், உடலையும் பலம் மிக்கதாக ஆக்குகிறது. ஓட்டப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட, நீண்ட நேரம் கண் விழித்து படிக்கும் திறனைப் பெறுகின்றனர். ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில், சாலைகள் சீராக இருப்பதில்லை. குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. இந்தத் தடைகளைக் கடக்கும் போது, மனதில் கவனம் ஒருங்கிணைப்பு, சீரான சிந்தனை ஆகியவை அதிகரிக்கின்றன. உடலும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.

ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் அதிக ரத்த ஓட்டம் கிடைப்பதால், தொற்று, நோய் ஆகியவை அதிகம் அண்டாது. நோய் ஏற்பட்டாலும், விரைவில் குணமாகி விடும். உழைக்கும் நேரம் வீணாகாது.

ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், இடுப்பு, முட்டி எலும்பில் பாதிப்பு ஏற்படுமென பொதுவாக கருதப்படுகிறது; ஆனால் அது மூட நம்பிக்கையே. எலும்பு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஓட்டப் பயிற்சிக்கு முன்னால், உடலை வளைத்து, நிமிர்த்தி, கை, கால்களை நீட்டி, மடக்கி, தசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஓடத் துவங்காமல் 5 நிமிடம் நடைபயின்ற பின், ஓடலாம். ஓட்டப் பயிற்சியுடன், உடலுக்கு வலு சேர்க்க, 'புஷ் அப்ஸ்' மேற்கொள்ளலாம். இதுவரை ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், தற்போது துவங்க, சில நடைமுறைகள் உள்ளன. 10 அடி நடத்தல், 10 அடி ஓடுதல் எனத் துவங்க வேண்டும். ஒரு வாரம் சென்ற பின், 10 அடி நடத்தல், 20 அடி ஓடுதல் என அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஓட்டப் பயிற்சிக்கு உடல் ஈடு கொடுக்கத் துவங்கிய பிறகு, தொடர்ந்து ஓடலாம். காலை வேளையில் தம்பதியர் பலரும், நடைபயிற்சி மேற்கொள்வதை பார்க்கிறோம். ஆண்கள், 'டிராக் சூட்' போட்டு, காலில் ஷூ அணிந்து செல்கின்றனர். ஆனால் பெண்கள், புடவையைக் கட்டிக் கொண்டு திண்டாட்டத்துடன் நடக்கின்றனர். சல்வார் கமீஸ் அல்லது டிராக் பேன்ட் போடலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் கிண்டல் அடிப்பார்களோ என கருத வேண்டாம்; வெட்கப்பட வேண்டாம்.

உங்கள் ஆரோக்கியம் சீராகி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்  ஆகியவை காணாமல் போய், மன அழுத்தமும், 'டாட்டா' சொல்லும் போது, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கிண்டல், கேலிப் பேச்சுகளை நீங்கள் 'சட்டை' செய்யாத நிலைக்குச் செல்வீர்கள் என்பது நிச்சயம்! காலில் ஷூ அணியும் போது கவனிக்க வேண்டி முக்கிய விஷயம், கால் அதில் நன்கு பதிய வேண்டும் என்பது தான். சாக்ஸ் அணிவதும் அவசியம். அதிக எடையுள்ளவர்கள், கடினமான செருப்போ, ஷூவோ அணிந்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், பாதம் வலிக்கத் துவங்கி விடும். நடக்கும் போது, செருப்பு அணிவதைத் தவிர்க்கவும். வேகமாக நடைபயிலும் போது, செருப்பிலிருந்து கால் வெளியே வந்து விடும். குதிகாலில் செருப்பு மோதிக் கொண்டே வருவது நல்லதல்ல. ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதற்கு, வயது தடையாக உள்ளது என்று கருதுவது தவறு. பவுஜா சிங் என்ற மாரத்தான் ஓட்டப் பந்தய வீரருக்கு, வயது 99. அவர், 63 வயதில் தான் ஓடத் துவங்கினார். இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்.  பெண்களில்,  இடா மின்ட்ஸ் என்பவர் சிறந்த  ஓட்டப் பந்தய வீராங்கனையாக  உள்ளார். அவருக்கு வயது 85.  தன் 73 வயதில் தான் அவர் ஓடத் துவங்கினார்!  எனவே, நாளை காலையிலிருந்து நீங்களும் ஓடத் துவங்குவீர்கள் தானே?








      Dinamalar
      Follow us