தினமும் காபி, டீ குடித்தா ஞாபகசக்தி அதிகரிக்குமாம்!
தினமும் காபி, டீ குடித்தா ஞாபகசக்தி அதிகரிக்குமாம்!
PUBLISHED ON : ஆக 03, 2014

ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க; நம்புங்க: காபி, டீ , குளிர் பானங்கள் மற்றும் சத்து பானங்களில் உள்ள, கபைன் என்ற மூலப்பொருளானது, உடலுக்கு நல்ல பல பலன்களைத் தருவதாக ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனால் தான், காபி, டீ உட்பட, இந்த வகை பானங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்றளவும் குறையாமல் உள்ளது.
நம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு, சோர்வைப் போக்கி, புத்துணர்ச்சி பெற வைப்பதில், கபைனின் பங்கு அதிகம். அதனால், வட அமெரிக்காவில், மத்திய தர வயதினரில் பெரும் பகுதியினர், கபைன் கலந்த பானங்களை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால், இப்போது, காபி, டீ உட்பட கபைன் மூலப்பொருள் உள்ள பானங்களை குடிப்பதால், ஞாபகசக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது: எங்களின் ஆய்வுக்கு, 18 முதல், 30 வயதுடைய சிலரை தேர்வு செய்தோம். அவர்களிடம், பல விதமான படங்களை காண்பித்தோம். இந்த படங்களைப் பார்த்ததும், அவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு, கபைன் கலந்த மாத்திரை கொடுத்தோம். மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.
மறுநாள் அனைத்து நபர்களையும் அழைத்து, முதல் நாள் காண்பித்த படங்களையும், புதிதாக சில படங்களையும் காண்பித்தோம். எந்தெந்த படங்கள் புதியவை, எவை எவை பழையவை என, கேட்டோம். அப்போது, முதல்நாள் கபைன் கலந்த மாத்திரை சாப்பிட்டவர்கள், பழைய மற்றும் புதிய படங்களை கண்டறிவதில் திறமையாக செயல்பட்டனர். அவர்களிடம் ஞாபகசக்தி அதிகமாக இருந்ததையும் காண முடிந்தது.
இவ்வாறு, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம், கபைன் கலந்த பானங்களை தினமும், 200 மில்லி கிராம் அருந்தினால், நீண்ட காலத்தில் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது தெளிவானது. அதனால், அளவாக காபி, டீ குடிங்க. உங்களின் ஞாபகசக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

