உடலில் வைட்டமின் - டி அதிகமானால் குடல் புற்றுநோய் பாதிப்பு குறைவே
உடலில் வைட்டமின் - டி அதிகமானால் குடல் புற்றுநோய் பாதிப்பு குறைவே
PUBLISHED ON : ஆக 03, 2014

'குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் ரத்தத்தில், வைட்டமின் - டி சத்து அதிகமாக இருந்தால், நோய் பாதிப்பின் வேகம் குறைவாக இருக்கும்' என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மனித உடலுக்கு, சூரியஒளி மூலமும், உணவுகள் மூலமும் கிடைக்கும் சத்து, வைட்டமின் - டி. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள வைட்டமின் - டி அளவை இணைத்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: ரத்தத்தில் வைட்டமின் - டி அளவு அதிகமாக இருந்தால், நோயாளிகளுக்கு குடலில் தோன்றியுள்ள புற்றுநோய் கட்டி பெரிதாக இருந்தாலும், அது பரவுவதில்லை. இப்படிப்பட்டவர்கள், குடல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும், அதிக நாட்கள் வாழ்கின்றனர். அதே நேரம், ரத்தத்தில் வைட்டமின் - டி அளவு குறைவாக இருந்தால், இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் சீக்கிரமே நிகழ்ந்து விடுகிறது. இதிலிருந்து, புற்றுநோய் பாதித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கும், அவர்களின் ரத்தத்தில் உள்ள வைட்டமின் - டி சத்தின் அளவுக்கும் தொடர்பு உள்ளது உறுதியாகிறது.
அதனால், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கீமோதெரபி சிகிச்சையோடு, வைட்டமின் - டி மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளச் செய்தால், அவர்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியுமா என்பது தொடர்பாக, தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை, இளம் வெயிலில் நடைப் பயிற்சி மேற்கொண்டால், இயற்கையாகவே நம் உடலில், வைட்டமின் - டி சுரக்கும்.

