PUBLISHED ON : ஆக 20, 2017

மனிதனுக்கு முக்கியமான ஓய்வில், தூக்கம் இன்றியமையாதது. தூக்கமின்மையால் பலரும் படும் மனவேதனை அதிகம். தூக்கமின்மை ஏற்படும்போது, ஜாதிக்காய் கொடுத்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதுகாப்பான உறக்கம் கிடைக்கும்.
வாந்தி பேதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தண்ணீர் தாகம் அதிகமாக எடுக்கும். இதற்கு, ஜாதிக்காயை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலியை போக்க, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, சித்திரமூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து, குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும்போது ஜீரணசக்தியை அதிகரிக்க செய்ய, ஜாதிக்காயை பொடி செய்து, தண்ணீரில் கலந்து அருந்தலாம்.
வயிற்றுப் பிரச்னை சீரகம்: அகத்தை சீர் செய்வதாலே யே, சீரகம் என பெயர் பெற்றது. சீரகத்தை மணத்துக்காகவும், செரிமானத்துக்காகவும் உணவில் சேர்ப்பது ஒவ்வொரு வீட்டிலும் வழக்கம். வெந்நீரில் சீரகத்தை போட்டு சிறிது நேரத்துக்கு பின், அருந்துவது வழக்கம். பித்த சம்பந்தமான நோய்களை தீர்ப்பதில், இது சிறந்து விளங்குகிறது. மேலும் வயிறு சம்பந்தமான நோய்களிலும், இதை அதிகம் உபயோகப்படுத்துவர். சீரகம் மூலம் உடல் வெப்பம் குறையும். வயிற்றுவலி, ஈரல்நோய், கல்லடைப்பு, ரத்த போக்கு, இளைப்பு, தொண்டை வரட்சி, மூக்கில் நீர்பாய்தல் மற்றும் வாத நோய்களை விலக்கும்.
உடலுக்கு வலிமையை தந்து கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வயிறு பிரச்னைகளை போக்கி பசியை உண்டாக்கி உணவை நன்கு செரிக்க செய்யும் சக்தி கொண்டது.
வயிற்று கிருமிக்கு திப்பிலி: திப்பிலி, சுக்கு இரண்டையும், சம அளவில் எடுத்து பொடி செய்து, கடுகு எண்ணையுடன் கலந்து காய்ச்சி தடவினால், இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்துடன், திப்பிலி, சுக்கு, மிளகு, திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய்விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை வறுத்து, நன்கு பொடி செய்து, அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.
சின்ன வெங்காயம்: நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து, அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட, பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலை சாற்றை கலந்து காதில் விட காதுவலி, குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட, எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

