PUBLISHED ON : ஆக 20, 2017

சிறு உபாதைகள் என்றால், மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே மருத்துவ முறைகளை கையாளலாம். நம் முன்னோர் மேற்கொண்ட நடைமுறையை, நாமும் பின்பற்றலாம். வேப்பம் பூவை பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். மிளகை பாலுடன் சேர்த்து அரைத்து, கொட்டை பாக்கு அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை, 40 கிராம் சேர்த்து காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். வாழைக்காயை, வாரத்தில், ஒரு நாள் சமைத்து உண்டால் வந்தால், வயிற்றுப்புண் வராது. பூண்டுடன் குப்பைமேனி கீரை சேர்ந்து அரைத்து சாறு எடுத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், குடல்புண் மற்றும் சருமநோயை குணப்படுத்தும்.
தினமும், ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் செரிக்கும் திறன் அதிகரிக்கும். சுரைக்காயை வாரம் இரு முறை உணவோடு சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். மருதோன்றி இலையை அரைத்து நீரில் கலக்கி, கழுவி வந்தால், உடலில் உள்ள சிறுகாயம், புண் சிராய்ப்புகள் குணமாகும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி, கட்டி வந்தால், மூட்டு வீக்கம் குணமாகும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால், பருக்கள் குணமாகும். சந்தன கட்டை யை, எலுமிச்சை சாறு விட்டு கல்லில் உரசி, அதை, உடலில் நீர் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் குணமாகும். உடலில் தோல் பூஞ்சை போன்று உருவாக்கி அரிப்பு ஏற்பட்டால், கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயை பூசி வந்தால், குணமாகும். இதை எல்லாம் கடைபிடித்தாலும், தினமும் உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
உணவு அதிகமாக உண்டாலும், பல்வேறு பிரச்னைகளை கொண்டு வரும். அளவான உணவே ஆரோக்கியத்தை தரும். தினமும் யோகா செய்யும் பழக்கம் இருந்தால், உடலுக்கு மிகவும் நல்லது. காலை நேரத்தில், பிரணாயாமம் செய்தால், எக்காலத்திலும் சுவாசப் பிரச்னை வராது.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட, தொண்டை கரகரப்பு குணமாகும்.
நெல்லிக்காய் இடித்து, சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க, அஜீரணம் சரியாகும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் ஆறும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.
ஒரு துண்டு சுக்கு தோல் நீக்கி, அரை லிட்டர் நீரில் போட்டு, சுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். வயிற்று கடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த நீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணையும் கலந்து குடித்தால், சிறிது நேரத்திலேயே குணம் பெறலாம். கொப்பரைத்தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகும் அல்லது கடுக்காயை வாயில் வைத்திருந்தால், வாய்ப்புண் குணமாகும்.

