
எதையும் நிறைவாக, திருப்தியாக செய் என்று வலியுறுத்தினர் நம் முன்னோர். இன்றைய நெருக்கடியான, பரபரப்பான வாழ்க்கைச்சூழல் அதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். சாமி கும்பிடுவது தொடங்கி சாப்பிடுவது வரை எதையும் நம்மால் மனநிறைவோடு, ஒருமுகப்படுத்திய மனதோடு செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணங்களாகக் குடும்பம், வேலைச்சூழல், பரபரப்பு என நீள்கிறது பட்டியல். இப்படி எதையாவது சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நொடியையும் கடக்கிறோம். சாப்பிடும் நேரம்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது நாம் வருத்தப்பட வேண்டிய செய்தி.
யாராவது நம்மிடம் 'காலையில என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்டால், ஏதோ கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதுபோல் நம்மில் பலரும் விழிப்போம். சாப்பிட்டுவிட்டுத்தான் வந்திருப்போம். என்ன சாப்பிட்டோம் என்பது நினைவில் இருக்காது. எல்.கே.ஜி.,யில் படித்த ரைம்ஸ்கூட, கேட்டதும் நினைவுக்கு வந்துவிடும். காலையில் சாப்பிட்ட டிபன் என்ன என்பதை மறக்கிற அளவுக்கு நாம் வாழும் சூழல் நம்மை அப்படியே மாற்றியிருக்கிறது. சாப்பிடும்போது கவனத்தை உணவின் மீது குவிக்காமல், வேறு எதன்மீதோ செலுத்துவதுதான் அதற்குக் காரணம். இது சாதாரணப் பிரச்னை அல்ல.
உணவில் கவனமில்லாமல் ஏனோ தானோ என்று சாப்பிடுவதால்தான் இன்று பல்வேறு நோய்கள் உண்டாகின்றன என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். சாப்பிடும்போது நாம் கவனத்தில்கொள்ள வேண்டியவை:
தயாராகுதல்: சாப்பிடுவதற்கு முன்தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கிவைத்துவிட வேண்டும். செய்ய வேண்டிய வேலை அல்லது செய்து முடித்த வேலைகளைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது. சாப்பிடும்போது நம் கவனம் முழுக்க உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
உட்கார்ந்து சாப்பிடுதல்: உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். நின்றுகொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிட்டால், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற அளவு தெரியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறைவாகச் சாப்பிட வாய்ப்பு உண்டு. வேகவேகமாகச் சாப்பிடவும் தோன்றும். உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் நிதானமாக, முழுக் கவனத்துடன், தேவையான அளவு சாப்பிட முடியும்.
'டிவி', கம்ப்யூட்டர், மொபைல், புத்தகம் தவிர்த்தல்: 'டிவி', கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டோ, புத்தகங்களைப் படித்துக் கொண்டோ சாப்பிட்டால் நம் கவனம் முழுக்க அவற்றின் மீதுதான் இருக்கும். இதன் காரணமாக நமக்குத் தேவையான அளவில், ஆரோக்கியமான, சத்தான உணவுகளைச் சாப்பிட முடியாமல் போகும். உணவு வேளையில் தேவையற்ற இந்தப் பழக்கங்களை தவிர்த்துவிடுவது உடல் நலத்துக்கு நல்லது.
நமக்கு நாமே பரிமாறுதல்: நமக்கு வேண்டிய உணவை நாமே எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்யும்போதுதான் நாம் சாப்பிடும் அளவும் நமக்குத் தேவையான உணவும் சரியாகக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக உண்ணும்போது உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய தட்டில்தான் உணவைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். பெரிய தட்டில் உணவை எடுத்துக்கொண்டால் தேவைக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

