'மெனோபாஸ் முடிந்த பின் எலும்புகள் பலவீனமாவதை உடற்பயிற்சி தடுக்கும்'
'மெனோபாஸ் முடிந்த பின் எலும்புகள் பலவீனமாவதை உடற்பயிற்சி தடுக்கும்'
PUBLISHED ON : நவ 23, 2019

'ஜிம்' செல்வதை நிறுத்தினால், உடல் எடை அதிகரிக்குமா?
நிச்சயம் அப்படி ஆகாது. காரணம், தசைகளை வலுப்படுத்தும் ஹார்மோன் வேறு; கொழுப்பு உடலில் சேருவதற்கான, ஹார்மோன் வேறு. ஜிம்மில் போய் உடற்பயிற்சி செய்யும் போது, 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் அதிகமாவதால், கொழுப்பு குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஜிம் உடற்பயிற்சியை நிறுத்தினால், ஏற்கனவே உடலில் இருக்கும் கொழுப்பு தான் அதிகமாகுமே தவிர, தசைகளில் உள்ள திசுக்கள், கொழுப்பாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ஆனால், இதை காரணம் காட்டி, உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டாம்.
ஜிம் என்பது ஆண்களுக்கானதா?
பெண்கள், 'வெயிட் லிப்டிங்' செய்தால், ஆண்களைப் போலவே ஆகி விடுவர் என்று நினைப்பது தவறு. ஆண்களின் உடல் அமைப்பு, ஹார்மோன்களுக்கும், பெண்களின் உடல் அமைப்பு, ஹார்மோன்களுக்கும், வேறுபாடு உள்ளன. ஆண்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். ஆண்களைப் போலவே, பெண்களுக்கு தசைகள் மாற வேண்டும் என்றால், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமானால் மட்டுமே சாத்தியம்.
பெண்கள், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. காரணம், 40 வயதிற்கு மேல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், 'ஆஸ்ட்ரியோபோரோசிஸ்' எனப்படும், எலும்புகள் உடைவதை கட்டுப்படுத்தும். எலும்புகள் வலுவாவதற்கு, ஜிம் பயிற்சிகள் உதவும்.மெனோபாஸ் எனப்படும், மாதவிடாய் முடிந்த பின், எலும்புகள் பலவீனமாவதை, உடற்பயிற்சிகள் தடுக்கும். ஜிம் உடற்பயிற்சியால், பெண்களுக்கு அதிக நன்மைகள் உள்ளன.
வளர் இளம் பருவத்தில் ஜிம் செல்வதால், வளர்ச்சி பாதிக்கப்படுமா?
பதினெட்டு வயது வரையிலும், இரு பாலருக்கும் இயற்கையான வளர்ச்சி இருக்கும். ஜிம் போவதால், இது குறையாது. ஜிம் என்று இல்லை, எந்த விதமான உடற்பயிற்சியானாலும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஜிம் பயிற்சியால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளதா?
பலவிதமான மக்கள் வரும் இடம்; ஒருவர் பயன்படுத்திய கருவியை, பலரும் பயன்படுத்துவது; அதிக வியர்வை வெளியேறும் இடமாக ஜிம் இருப்பதால், தொற்று நோய்கள் ஏற்படாமல், நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என்று, பலவிதமான கிருமிகள் பாதிப்பால், சளி, இருமல், புளூ காய்ச்சல் போன்ற கிருமி பாதிப்புகளால் வரக்கூடிய தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம்.'கார்டியோ' கருவிகளில், அதிகம் வியர்வை படும். யோகா போன்று, தரையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் செய்யும் இடங்களில், ஈரப்பதம் அதிகம் இருப்பதால், மற்ற இடங்களை காட்டிலும், 10 மடங்கு பாக்டீரியா தொற்று அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
எப்படி இதைத் தவிர்க்கலாம்?
ஜிம் பயிற்சிக்கு என்று தனியாக, ஷூக்கள் வைத்துக் கொள்ளலாம். வீட்டிலிருந்து, சுத்தமான துண்டுகளை, நம் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஒருவர் உடற்பயிற்சி செய்து முடித்த இடத்தில், நாம் செய்ய துவங்கும் முன், ஜிம் ஊழியர்கள் இருந்தால், அவர்களை சுத்தம் செய்யச் சொல்லலாம். இல்லாத பட்சத்தில், துணியை வைத்து நாமே, நன்கு துடைத்த பின் பயன்படுத்தலாம். தரையில் படுத்து உடற்பயிற்சி செய்யும் போது, சுத்தமான துணியை விரித்து, அதன் மேல் படுத்து செய்யலாம். இது, நமக்கும் நல்லது; அடுத்து பயன்படுத்த இருப்பவருக்கும் நல்லது. கையுறை பயன்படுத்தினால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை, அதை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்து முடித்த பின், கைகளை சோப் பயன்படுத்தி, சுத்தமாக கழுவுவது, காயங்கள் இருந்தால் அதை, 'பிளாஸ்டர்' போட்டு மூடிய பின் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது. உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சுத்தமாக இருப்பதும் முக்கியம்.
டாக்டர் பி.ஆர். அஸ்வின் விஜய்
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்,
ஸ்ட்ரென்த் இந்தியா மூவ்மென்ட், சென்னை.
90943 20777
