PUBLISHED ON : நவ 22, 2019

இருதய நோய் யாருக்கு, எதனால் வருகிறது?
முன்பு இருதய நோய் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்தது. தற்போது 28 முதல் 40 வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது. உடல் உழைப்பு குறைவு, வாழ்க்கை மாற்றம், உணவு பழக்கம், ரெடிமேட் உணவு வகைகள், மன அழுத்தம், வேலைப்பளு தான் காரணம்.
சமச்சீர் உணவு எது?
நமது கலாசாரத்தில் காலையில் இட்லி, சட்னி, சாம்பார், மதியம் சாப்பாடு, காய்கறி, சாம்பார், ரசம், மோர், இரவு இட்லி, சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இது நமது உடலுக்கு தேவையான சக்தி கொடுக்கும்.
சமச்சீரற்ற உணவு வகைகள்?
பரோட்டா, தந்துாரி, பர்கர், பீசா, சாப்ட் ட்ரிங்ஸ், சிக்கன் 65, எண்ணெய்யில் தயாரிக்கப்படும் உணவு வகைகள். கண்ட நேரங்களில் சாப்பிடுவது உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது.
தென் இந்தியாவில் அதிகம் மாரடைப்பு ஏற்பட காரணம்?
பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் 5 முதல் 6 அடி வரை திடகாத்திரமான உடலை பெற்றுள்ளனர். இவர்களின் ரத்த நாளங்கள் பெரிதாக இருக்கும். தென் இந்தியர்களுக்கு ரத்த நாளங்கள் சிறிய அளவில் தான் இருக்கும். அப்படி இருக்கும் போது ரத்த நாளங்களை விரைவில் கொழுப்பு அடைத்து விடுகிறது.
மாரடைப்பில் இருந்து பாதுகாக்க?
உடற்பயிற்சிகள் அவசியம். அதில் யோகா மட்டும் செய்தால் போதுமானதல்ல, எரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், நீச்சலடித்தல் போன்ற உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் அவசியம். எதற்கெடுத்தாலும் கார், இருசக்கர வாகனங்களில் தான் பயணிக்கிறோம். நடப்பது மிகவும் குறைந்து விட்டது.
நோயிலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
மாரடைப்பு, சர்க்கரை நோய்க்கு அரசு பல ஆயிரம் கோடி செலவிடுகிறது. ஆயுஸ்மான் பாரத், முதல்வர் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நோய்கள் வரும் முன் காக்க அனைத்து மருத்துவமனைகளிலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அரசுப்பணியாளர்களுக்கு 8 மணி நேரம் பணி நேரம் என்றால், 30 நிமிடம் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை விளையாட செய்யலாம். இதன் மூலம் மாரடைப்பை கட்டுப்படுத்த முடியும்.
இணையதளங்களில் வரும் சிகிச்சை முறைகள் சரிதானா?
கூகுள், டாக்டர் ஆகிவிட முடியாது. பெரும்பாலும் டாக்டர்களை தேர்வு செய்யும் போது குடும்ப டாக்டர்களிடம் தான் செல்ல வேண்டும். சிறப்பு டாக்டர்களை அணுகலாம். அவர்கள் உடனடியாக உங்கள் உடலில் உள்ள நோய்களை எளிதில் கணித்து விட முடியும்.
ஒவ்வொருவரும் 40 வயது எட்டியவுடன் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனை முடிவுகளின் படி டாக்டர்களை அணுகி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறைகள்?
ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க ஆஞ்சியோ செய்து கொள்ளலாம். அது முடியாத பட்சத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாம்.
உடல் நலன் ஏன் முக்கியம்?
பாரதியார் 'விசையுறும் பந்தினை போல் உள்ளம் வேண்டிய உடல் கேட்டேன் பராசக்தி' என்கிறார். 50 வயதிற்கு மேல் மனம் இளமையாக இருந்தாலும், அதற்கேற்ற உடல் வேண்டும். விளையாட வேண்டும், என்று நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. பாரதியார் கேட்ட அந்த உடல் அனைவருக்கும் வேண்டும். உணவு கட்டுப்பாடுடன் முறையான உடற்பயிற்சியோடு இருந்தால் உடலும் இளமையாக இருக்கும்.
டாக்டர் கே.ஜோசப்ராஜன்
இருதய நோய் சிகிச்சை நிபுணர்
ராமநாதபுரம்
94433 21225
