ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது கூட இத்தனை பிரச்னைகள் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், ஆங்கிலேய உணவுகள் நம்மை ஈர்க்கத் துவங்கியது முதல், நமக்குள் அத்தனை ரணங்கள். பெயர் தெரியாத நோய்கள், பலவகைப்பட்ட உடல் உபாதைகள் என, தற்போது நாம் ருசித்து வரும் உணவுமுறை, நம் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் பாழாக்கிக் கொண்டிருக்க, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திற்காக, களத்தில் இறங்கியுள்ள போராட்டக்காரர்களில் கேழ்வரகும் ஒன்று. அந்த கேழ்வரகில் தயார் செய்யப்படுவதுதான், கேழ்வரகு எள் அடை.
கேள்வரகு எள் அடை செய்வது எப்படி?
தேவையானவை
கேழ்வரகு மாவு -1 கப்
கருப்பு எள் -2 மேஜைக்கரண்டி
வெல்லம் 50 கிராம்
நெய் தேவையான அளவு
ஏலக்காய் -சிறிதளவு
சுக்குப்பொடி- சிறிதளவு
செய்முறை:
தனித்தனி வாணலியில் கேழ்வரகு மற்றும் எள்ளை வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில், வெல்லத்தை கரைசலாக்கி வைக்கவும். பின், வறுத்து வைத்திருக்கும் கேழ்வரகு மற்றும் எள்ளை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதனுடன், ஏலக்காய், சுக்குப்பொடியை கலந்து, வெல்லக் கரைசலை ஊற்றி, பதம் வரும் வரை பிசையவும். இப்போது, கலவையை தோசைக்கல்லில் ஊற்றி, நெய் இட்டு சுட்டெடுத்தால், கேழ்வரகு எள் அடை தயார்!
பலன்கள்:
கேழ்வரகு மற்றும் எள்ளில் உள்ள அதிகளவு கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதிய வலுவை தருகிறது. மேலும், இதிலுள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் குடல்புண், நீரிழிவு,
ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை சரி செய்கிறது. மேலும், உடல் எடையை குறைக்கும் பண்பு கேழ்வரகிற்கு உண்டு என்பதால், 'டயட்'டில் இருப்பவர்களுக்கு ஏற்றது இந்த கேழ்வரகு எள் அடை.
- அ.காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்

