PUBLISHED ON : மார் 27, 2021

சென்னை:''கொரோனா தொற்றை தடுக்க, பச்சை மிளகாய் குடிநீர், புதினா குடிநீருடன், கபசுர குடிநீர் அருந்தினால், நோய் தொற்றை தடுக்கலாம்,'' என, அரும்பாக்கம் அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் பாஸ்கர் கூறினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, அலோபதி டாக்டர்களுடன் இணைந்து பணியாற்றி, தொற்றை கட்டுப்படுத்தினோம். சென்னை தண்டையார்பேட்டை, மாதவரம் பகுதிகளில், பச்சை மிளகாய் குடிநீரை பொது மக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கினோம். மாநிலம் முழுதும் சித்தா டாக்டர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினர்.
தற்போது, மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதுடன், வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் குடிநீரை, மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். அடுத்த ஒரு வாரத்திற்கு, புதினா குடிநீர் பருக வேண்டும். பின், வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கபசுர குடிநீர் பருகலாம்.
இந்த பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்; கொரோனா தொற்றை தடுக்கும்.இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
குடிநீர் தயாரிப்பது எப்படி?
*பச்சை மிளகாய் ஒன்றை, சிறு துண்டுகளாக்கி, அத்துடன், சீரகம், மஞ்சள் துாள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்ந்து, 200 மில்லி நீரில், இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்
* இளஞ்சூட்டில், காலை, 50 மில்லி நீரை குடிக்க வேண்டும்; அடுத்த அரை மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. இதுபோல மூன்று நாட்கள் அருந்த வேண்டும். சிறுவர்கள், 10 மில்லி முதல், 30 மில்லி வரை அருந்தலாம்
* அடுத்த ஏழு நாட்களுக்கு, ஐந்து புதினா இலைகளை, 150 மில்லி நீரில், இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, தேவைப்படுவோர், சிறிது சர்க்கரை சேர்த்து, தேநீர் அருந்துவது போல அருந்த வேண்டும்.
