PUBLISHED ON : மார் 28, 2021

ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு, 12 - 14 கிராம் இருக்க வேண்டும்; ஆனால், 80 சதவீதம் பெண் களுக்கு இந்த அளவு இருப்பதில்லை.என் அனுபவத்தில், 11 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும் பெண்களை பார்ப்பதே அபூர்வம் என்றால், எந்த அளவிற்கு ரத்த சோகையால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வளவிற்கும், நான் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செய்கிறேன்.ரத்தசோகைக்கு மிக முக்கிய காரணம், தவறான உணவு பழக்கம்; அடுத்தது, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல்.
கிராமப்புறங்களில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. கழிவுகளில் கொக்கிப் புழுக்கள் உருவாகும். அம்மண்ணை கையால் அள்ளி, வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் போது, அதில் உள்ள கொக்கிப் புழுக்கள் வயிற்றுக்குள் சென்று தங்கி விடும். இவை சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்து உட்பட நுண்ணுாட்ட சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும்; இதனால், போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காது. பல்வேறு காரணங்களால், பெண்களுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு இருக்கும் போது, இது சாதாரண விஷயம் என்று நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர்.
மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில், குறிப்பிட்ட அளவு இரும்புச் சத்தும் வீணாகும். ரத்தசோகையை தடுக்க, 12 வயது முதல், 12 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, '12 - 12 இனிசிஷியேடிவ்' என்ற திட்டத்தை ஆரம்பித்து உள்ளோம்.
உணவு
இளம் வயதில் இருந்தே இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள், கேழ்வரகு, அசைவ உணவு பழக்கம் இருந்தால், கல்லீரல், மண்ணீரல் உணவில் இடம் பெற வேண்டும்.
உணவில் புரதம் பிரதான ஊட்டச்சத்து என்பதால் பருப்பு, பால் பொருட்கள், மீன், முட்டை, சிக்கன், சிறுதானியங்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். இரும்பும், புரதமும் சேர்ந்தது தான் ஹீமோகுளோபின்.
உணவு தயாரிப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். நீரில் கரையக் கூடிய வைட்டமின், போலிக் அமிலம். இது சமைத்த உணவில் போதுமான அளவு இருந்தால் மட்டுமே, இரும்புச் சத்தை உடல் கிரகிக்க இயலும். தேவைக்கு அதிகமாக நீண்ட நேரம் வேக வைப்பது, மூடாமல் சமைப்பது, போலிக் அமிலம் வீணாக வழி செய்யும்.
முடிந்த வரை மண்பாண்டங்களிலும், இரும்பு வாணலியிலும் சமைத்தால், உணவில் இரும்புச் சத்து வீணாகாமல் இருக்கும்; உடலும் அதை நன்கு கிரகிக்கும்.உணவு பற்றிய விழிப்புணர்வே இல்லாத போது, நுண்ணுாட்ட சத்து பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும்?
