இரட்டை குதிரை பயணத்தால் வீட்டு அம்மணிகள் படாதபாடு!
இரட்டை குதிரை பயணத்தால் வீட்டு அம்மணிகள் படாதபாடு!
PUBLISHED ON : ஜூன் 13, 2021
தீர்வுக்கு இதோ உளவியல் ஆலோசனை ஏற்பாடு
ஒரு ஆண்டுக்கும் மேலாக, வீட்டிலே அலுவலக பணிகள் மேற்கொள்ளும் பல பெண்கள் குடும்பத்தையும், பணியையும் சரியாக கையாள முடியாமல், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவரும் வீட்டிலே இருப்பது வரமா, சாபமா என தெரியாமல், அலுவலகம், வீடு பராமரிப்பை முறையாக கையாள முடியாமல் திணறுவதே, மன அழுத்தத்துக்கு காரணம்.
இதில் இருந்து விடுபடும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார் உளவியல் ஆலோசகர் அருள் வடிவு.
உங்களுக்கென ஒரு மணி நேரம்
தினசரி எழுந்ததும், அன்றைய பணிகள், அதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை திட்டமிடுவது அவசியம். வீட்டு வேலை, குழந்தைகள், பெரியவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றுதல், அலுவலக பணிகளுக்கு என, வீட்டு பட்டியல் ஆயிரம் இருந்தாலும், உங்களுக்கென குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.
மன அழுத்தம் குறைக்க யோகா
காலை, மாலை நேரங்களில், வீட்டில் இருந்தே செய்யக்கூடிய எளிய யோகாசனங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி, பயிற்சி பெறுவது அவசியம். உங்கள் மூச்சின் வேகத்தை கவனித்தாலே, மன அழுத்தமின்றி இருப்பதை உணரலாம்.
புத்தக உலகை காட்டுங்கள்
குழந்தைகள் வீட்டிலே இருப்பதால், தற்காலிக ஆசிரியராக பலரும் மாறிவிடுகி்னறனர். பாடத்திட்டத்தை மட்டும் படிக்க வலியுறுத்தாமல், பொது அறிவு சார்ந்த விஷயங்கள், சிறந்த புத்தகங்கள், சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை கற்று கொடுக்கலாம்.
நிறைய தண்ணீர்
அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்து வேலை செய்வோர், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அலாரம் வைத்து, அவ்விடத்தை விட்டு எழுந்து, ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். தண்ணீரை பாட்டிலில் நிரப்பி போதிய அளவு குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குப்பைத் தொட்டியல்ல வயிறு
விதவிதமாக சமைப்பதால், மீதமிருக்கும் உணவை உங்கள் வயிற்றில் நிரப்பி விட கூடாது. அரை வயிறு சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
எடை அதிரிப்பால் புறத்தோற்றம் மாறி விட்டதாக கவலைப்படாமல், ஊட்டச்சத்து நிபுணர்கள் உதவியோடு, எளிதில் பழைய நிலைக்கு திரும்பி விடலாம்.
பெட்ரூமில் போனுக்கு தடை
வீட்டிலே இருந்தாலும், அலுவலகம் செல்வதாக கருதி, தயாரான பிறகு, பணிகளை துவங்க வேண்டும். இரவு படுக்கையறையில் மொபைல் போன் வைத்துக் கொள்ள கூடாது. தூக்கம் வராமல், டிவிய விடிய சமூக வலை தளங்களில் இருப்பவர்களால், அடுத்த நாளை முறையாக திட்டமிட முடியாது. சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதும், மன அழுத்தத்திற்கு காரணம்.
இதுவும் கடந்து போகும்
இக்கட்டான சூழலிலும், இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையை, பெண்கள் வளர்த்து கொள்ளவது அவசியம். குறிப்பாக, இந்த நேர்மறை சிந்தனையை, குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூடுதல் ஆலோசனைகளுக்கு, 98941 24427 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
