sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"சம்மரை' சமாளிப்பது எப்படி?

/

"சம்மரை' சமாளிப்பது எப்படி?

"சம்மரை' சமாளிப்பது எப்படி?

"சம்மரை' சமாளிப்பது எப்படி?


PUBLISHED ON : மே 22, 2010

Google News

PUBLISHED ON : மே 22, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு ஆண்டும், வெயில் 41 டிகிரி செல்ஷியஸ் அடிக்கும்போது, நம்மால் தாங்க முடிவதில்லை. இந்தாண்டு இன்னும் வெயில் காலம் முடியவில்லை. அதற்குள், "லைலா' புயல் வந்து ஓரளவு வெயிலை குறைத்தாலும், இந்த புயல் கரையை கடந்தவுடன் மீண்டும், வெயில் நம்மை பதம் பார்க்கவுள்ளது.

வெயில் தாக்கத்தை தாங்கி கொள்ள, மின்விசிறி, ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவற்றின் உதவியை நாடுகிறோம். ஆனால், இவற்றை இயக்க மின்சாரம் தேவை. அது இல்லாமல் போகும்போது, எந்த கருவியும் நமக்கு பயன் தராது.

நம் உடல் இயங்க, 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹீட் சூடு தேவை. நம் சருமத்திலுள்ள 40 லட்சம் வியர்வைத் துளைகளுடன், சீரான ரத்த ஓட்டத்துடன் நம் உடல் இயங்குகிறது. சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரித்தால், நம் உடல் சூடாகிறது. இதனால், உடலில் ரத்தத்தின் திரவத்தன்மை அதிகரித்து, வெளிசூட்டுடன் உடல் வெப்பம் சமன் செய்யப்படுகிறது. வெளிச்சூடு அதிகமானால், உடலின் இந்த மாற்று ஏற்பாடு, வேலை செய்யாமல் போகும்.

பருத்தி ஆடை தவிர்த்து மற்றவை அணியும்போது, உடல் சூடு வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால் அதிகம் வியர்க்கிறது. வியர்வை ஆவியாகும்போது, உடல் சூடு தணிகிறது. இயற்கையாவே நம் உடலில் அமைந்துள்ள ஏர் கண்டிஷனர் இது. அதிக வெப்ப நாட்களில், இந்த மாற்று ஏற்பாடு சரியாக வேலை செய்யவில்லையெனில், பிரச்னை ஏற்படும். காற்றிலுள்ள ஈரப்பதம், உடலின், "ஏர் கண்டிஷனர்' வேலை செய்யாமல் தடுக்கும். அடிக்கடி நீர் குடித்தால், வியர்வை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படாது.

காற்றூட்டப்பட்ட பானங்கள், ஆல்கஹால், டீ, காபி பருகினால், உடல் சூடு குறையும் என்று கணக்கிடக் கூடாது. இளநீர், சிறிதளவு உப்பு சேர்த்த நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை குடித்தால், வியர்வை வெளியேறுவது சீராக இருக்கும்.

நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கும் வியர்வை அதிகம் வெளியேறாது. இந்த இருபிரிவினரும், அதிக வெப்பத்தால் எளிதில் பாதிப்படைவர். தசை அதிகமுள்ள கால்பகுதி முதலில் பாதிக்கப்படும். கவனிக்காமல் விட்டால், அதிக உடல் சோர்வு, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் ஏற்படும். உடல் சூடு 40 டிகிரி செல்ஷியசுக்கு அதிகரித்தால், கடும் விளைவுகள் ஏற்படும். தோலில் சூடு ஏறி, வறண்டு விடும். இதனால் மூளை பாதிப்பு, குழப்பம், கோமா ஆகியவை ஏற்பட்டு, சிலருக்கு மரணம் சம்பவிக்கலாம்.

உடல் சூடு அதிகமாகி விட்டால்

* இருட்டான, "ஜில்' அறையில் அவர்களை அமர வைக்க வேண்டும்.

* அவர்களின் கடின ஆடைகளை களைந்து, மெல்லிய பருத்தி ஆடை அணிவிக்க வேண்டும்.

* மின் விசிறி, "ஏசி' யையும், அவர்கள் மீது நன்கு காற்றுபடும்படி இயக்கலாம்.

* அடர்த்தியான துணியை தண்ணீரில் நனைத்து, அவர்களை துடைத்து விட வேண்டும்.

* ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் உப்பு கலந்து அவர்கள் குடிக்க கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கையாண்டால், அவர்கள் உயிரை காப்பாற்றலாம். வெயிலில் உடலில் அரிப்பும், அதை சொறியும்போது சிவப்புக் கோடுகளும் ஏற்பட்டு, உடல் முழுதும் பாவற்காயாகி விடும். வியர்வை நாளங்களில், அழுக்கு அடையும்போது, அரிப்பு ஏற்படுகிறது. "டிவி'க்களில், அரிப்பை தவிர்க்க, "கூல்' டால்கம் பவுடர் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த பவுடரை பூசிக் கொண்டால், நீங்கள் இமயமலையிலிருப்பது போல் உணர்வீர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவை விற்பனையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் யுக்தியே தவிர, உண்மையில், உங்கள் உடலுக்கு இந்த பவுடர்கள் கேடு விளைவிப்பவை.

சிங்க் ஸ்டிரேட் மற்றும் சிலிகேட் பவுடர்களை கொண்டு, தயாரிக்கப்படும் இந்த வகை டால்கம் பவுடர்கள், உங்கள் உடல் அரிப்பை இன்னும் அதிகரித்து விடும். இந்த பவுடர்கள் உடல் வியர்வையுடன் சேரும்போது, வெள்ளை நிறத்தில் நீர் வழிந்து,

உங்கள் வியர்வை நாளங்கள் மேலும் அடைத்து போகும்.

தொடை மற்றும் பிறப்பு உறுப்புகளில் இந்த பவுடர்களை போட்டால், அவை கருப்பை பாதை, கருப்பை, பெலோப்பியன் குழாய் வழியே, சினைப்பையை அடைந்து விடும். அங்கு புற்றுநோயை உருவாக்கும்.

மிக நுண்ணிய பவுடராக தயாரிக்கப்படும் இவை, காற்றில் பறந்து நம் மூக்கில் நுழைந்து, நுரையீரலின் மிக நுண்ணிய பகுதியை அடைகின்றன. இதனால் நிமோனியா, நுரையீரல் வீக்கம், காற்று பாதை வீக்கம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. மிகச் சிறிய குழந்தைகளுக்கு, இதுவே நச்சாக அமைந்து, குழந்தையின் உயிரையே பறிக்கும்.

உடல் சூடு, அரிப்பை தவிர்க்க மிகச் சிறந்த வழி, தினமும் இரண்டு முறை குளிப்பது தான். சோப்பை உடலில் நேரடியாக தேய்க்காமல், உடல் தேய்ப்பானில் தோய்த்துத் தேய்த்து கொள்வது நலம்.

தெருவோரங்களில் விற்கப்படும், துண்டாக்கப்பட்ட தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் மற்ற ஜூஸ் வகைகள், சுகாதாரமற்றவையாக உள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீர், ஐஸ் கட்டிகள் சுத்தமானவையாக இருப்பதில்லை; பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...

* டைபாய்டு நோய் தடுப்பு ஊசி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* "ஹெப்பாடைட்டிஸ் ஏ' நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு ஊசிகள் என இரண்டு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* காலராவை தவிர்க்க, வாய்வழி மருந்துகள் வந்துவிட்டன.

வெளியில் எங்கு சென்றாலும், வீட்டிலிருந்து குடிநீர் எடுத்து செல்வதே நல்லது. காற்றூட்டப்பட்ட பானங்கள், பார்க்க கவர்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை அனைத்திலும் காபின் பொருளோ, ரசாயனமோ அதிகம் கலக்கப்பட்டிருக்கும். தாகத்தை தணிப்பதற்காக நீங்கள் இதை குடித்தாலும், உண்மையில் இவை, உங்கள் தாகத்தை அதிகரிக்க செய்யும்.

வெயில் நேரங்களில், வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெளியில் செல்ல தீர்மானித்தால், "சன்ஸ்கிரீன் லோஷன்' போட்டு கொள்ளலாம். குடை எடுத்து செல்வதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.  yourhealthgm@yahoo.co.in

- டாக்டர் கீதா மத்தாய்,வேலூர்








      Dinamalar
      Follow us