PUBLISHED ON : ஆக 26, 2012

எனக்கு 6 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சமீபகாலமாக சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத் திணறல் உள்ளது. நெஞ்சுவலி இல்லை. இது எதனால்?
வி. சங்கரநாராயணன், திருப்பரங்குன்றம்.
சர்க்கரை நோயாளிகள் நடக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் இருதய நோயாக இருக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். உடனடியாக நீங்கள் டாக்டரிடம் சென்று, உங்கள் ரத்தத்தில் ஹீமோ குளோபின் (Hb) அளவு, யூரியா, கிரியாட்டினின் மற்றும் கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதுதவிர எக்கோ, டிரெட்மில் பரிசோதனையும் அவசியம் தேவை. இம்முடிவுகளில் மாறுபாடு இருந்தால் அவசியம் ஆஞ்சியோகிராம் தேவைப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு நடக்கும்போது மூச்சுத் திணறலாகவோ அல்லது அறிகுறியே இன்றி இருதய நோய் உள்ளே ஒளிந்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம். எனவே அதை உணர்ந்து உடனடியாக நீங்கள் பரிசோதனை செய்து, ஒளிந்து உள்ள வியாதியை கண்டறிய வேண்டும்.
எனது வயது 40. மூன்று ஆண்டுகளாக எனக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது. சமீப காலமாக எந்நேரமும் தலை பாரமாகவும், தலைச் சுற்றுவது போலவும் உள்ளது. நான் என்ன செய்வது? எஸ். முத்துராமன், உத்தமபாளையம்.
ரத்தக்கொதிப்பு உள்ளவருக்கு தலைச்சுற்றுவது, பாரமாக இருக்கிறது என்றால், ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லை என்பதன் அறிகுறியாகும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். அப்போதுதான் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும். இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின்படி, ரத்தக்கொதிப்பு உள்ள பெரும்பாலோருக்கு, ரத்தக்கொதிப்பு உள்ளது என்பதே தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு அது கட்டுப்பாட்டில் இருப்பதுமில்லை. ஆகவே ரத்தக்கொதிப்பு உள்ளது என்பதை கண்டறிவதும், அதை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியமானதாகும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, தினசரி நடைப்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, மருந்து எடுத்துக் கொள்வது உதவும். உங்கள் டாக்டரிடம் சென்று, ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதா என கண்டறியுங்கள். ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தும், தலை பாரமாக இருந்தால், நரம்பு தொடர்பான சில பரிசோதனைகள் தேவைப்படும்.
சர்க்கரை நோயாளிகள் ஸ்டேட்டின் வகை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா?
கே. குணசீலன், நத்தம்
ஸ்டேட்டின் (குtச்tடிண) வகை மாத்திரைகள் இன்றைய இருதய மருத்துவத்தில் மிகஅற்புதமான கண்டுபிடிப்பு ஆகும். இவை ரத்தத்தில் கெட்ட கொழுப்பை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், மிகமுக்கியமாக மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கின்றன. மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக்கொதிப்பு மற்றும் இதர ரத்தக்குழாய் நோய் உள்ள அனைவரும் ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தாக வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு நார்மலாக இருந்தாலும், ஸ்டேட்டின் மாத்திரை அவசியம். இம் மாத்திரைகளால் ரத்தக்குழாய்கள் பல வழிகளில் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்டேட்டின் மாத்திரை மிகக்குறைந்த பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை சற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இதைக் கண்டு அஞ்சத் தேவைஇல்லை. இம்மருந்தால் கிடைக்கும் பலன், அதனால் ஏற்படும் பக்கவிளைவைவிட பலமடங்கு அதிகம். ஆகவே அனைத்து சர்க்கரை நோயாளிகளும் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும், இம்மாத்திரையை எடுப்பது அவசியம்.
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஒரு மாதமாகிறது. நான் தற்போதைய நிலையில் விமான பயணம் மேற்கொள்ளலாமா?
பி.ஜேக்கப் தங்கராஜ், அருப்புக்கோட்டை
பைபாஸ் சர்ஜரி செய்த பிறகு, முதல் 2 வாரங்களுக்கு விமான பயணத்தை தவிர்ப்பது நல்லது. இரண்டு வாரங்கள் கழித்து, உங்கள் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்தபின், தாராளமாக விமான பயணம் செய்யலாம். அதற்கு தடை ஏதும் இல்லை.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.