PUBLISHED ON : ஆக 19, 2012
எனது மகனுக்கு டான்சில் பிரச்னை உண்டு. இரவில் வாயை திறந்து தூங்குகிறான். வாய் துர்நாற்றமாக உள்ளது. என்ன செய்வது?
டான்சில் என்பது வாயின் உள்ளே இருபக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. அடிக்கடி பாக்டீரியாவால் 'இன்பெக்ஷன்' ஏற்பட்டால் இவை வீங்கிவிடும். இந்த வீக்கம் மற்றும் மூக்கடைப்பால் இயற்கையான சுவாசம், தடைபட்டு வாய் வழியே மூச்சுவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. வாய் வழியே மூச்சுவிடும்போது உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்கிறது.
உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குகின்றன. டான்சில் மற்றும் வாயில் உள்ள கிருமிகளால் வாய் துர்நாற்றம் உருவாகிறது. இதற்கு முதலில் நீங்கள் காது, மூக்கு, தொண்டை நிபுணரை ஆலோசித்து பின், பல் டாக்டரை அணுகினால் வாயில் உள்ள குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
எனது மகளுக்கு வயது 26. மேல் பற்கள் முன்தூக்கி உள்ளது. தற்போது திருமணம் பேசத் துவங்கி உள்ளோம். இந்த வயதில் கிளிப் போட்டு விரைவில் சரிசெய்ய இயலுமா?
சீரற்ற பற்களில் சிறு பிராக்கெட்டுகள் ஒட்டி நடுவில் கம்பி மூலமாக சீரான அழுத்தம் கொடுத்து பற்களை வேருடன் தாடை எலும்பினுள் வரிசைக்கு நகர்த்துவது பல் சீரமைப்பு ஆகும். பொதுவாக 12 வயதுக்குள் அனைத்து பால் பற்களும் விழுந்து நிரந்த பற்கள் முளைத்துவிடும்.
இந்நிலையில் பற்சீரமைப்பு சிகிச்சையை துவக்கலாம். இந்த வயதில் தாடை எலும்பு மிருதுவாக இருப்பதால் பற்சீரமைப்பு சிகிச்சை எளிதாக அமையும். சில குழந்தைகளுக்கு பற்கள் மட்டுமின்றி, மேல், கீழ் தாடை அமைப்பிலும் குறைபாடுகள் இருக்கலாம். இவர்களுக்கு 12 வயதுக்கு முன்பே தாடை சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ஏழுவயதில் பல் சீரமைப்பு நிபுணரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. 26 வயதில் கண்டிப்பாக பல் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
தற்போது 40 வயதிலும்கூட தாடை எலும்பு ஈறுகள் நலம் மற்றும் பற்களின் உறுதியை பொறுத்து பல்சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ளலாம். வயது கூடும்போது தாடை எலும்பு முதிர்வதால், பற்கள் நகர கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும். பல்சீரமைப்பு சிகிச்சையை குறைந்தது ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் தொடர வேண்டும். இந்த அவகாசம் மிகமுக்கியம். இல்லையெனில் கிளிப் கழற்றிய பின், பற்கள் பழையநிலைக்கு திரும்பக் கூடிய வாய்ப்புகள் அதிகம். திருமணத்தின்போது கிளிப்பை கழற்ற விரும்பினால் மறுபடியும் சிகிச்சையை தொடர வேண்டும். அல்லது பற்களில் ஒட்டுகிற கிளிப்பை தவிர்க்க வேண்டுமானால் தற்போது உள்ள புதிய சிகிச்சை முறை குறித்து பல்சீரமைப்பு நிபணரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை தொடங்கலாம்.
- டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை. 94430-61160