'30 வயதிற்குள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு!
'30 வயதிற்குள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு!
PUBLISHED ON : அக் 23, 2019

இந்தியர்களுக்கு, மாரடைப்பு அதிகரிக்க காரணம்?
பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைமுறைகளாக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம், ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மூன்றாவது தலைமுறை இந்தியர்களுக்கு, அமெரிக்கர்களைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, மாரடைப்பு வருவது தெரிகிறது. சர்வதேச அளவில், இந்த ஆய்வு மிகவும் பிரபலம். அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முறை, உணவு எல்லாம், அவர்களைப் போலவே மாறி விட்டாலும், மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள், முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, 10 சதவீதம் அதிகமாக இந்தியர்கள், மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
மரபணுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
மிகக் குறைவாக சாப்பிட்டு, அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள், நம் முன்னோர். நம் மரபணு, அதற்கேற்ப அமைந்துள்ளது. தாத்தா, பாட்டி, அவர்களின் பெற்றோர் அனைவரும், இப்படித்தான் இருந்தனர். கடந்த, 20 ஆண்டுகளில், நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முழுமையாக மாறிவிட்டது. மரபணுவுக்கு பழக்கம் இல்லாத உணவுகளை எல்லாம், சாப்பிடப் பழகி விட்டோம். மிகக் குறைவாக சாப்பிட்டதில் இருந்து, அளவிற்கு அதிகமாக சப்பிடுவதால், நம் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மாரடைப்பு வருவதற்கான காரணிகளில், இதுவும் ஒன்று.
உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்?
இந்தியர்களை பொறுத்தவரை, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வயிற்று பகுதியில் தான் தங்குகின்றன. இதை, 'மத்திய உடல் பருமன்' என்று சொல்வர். பொதுவாக, அதிக எடையுள்ள இந்தியர்களுக்கு, கை, கால் மெலிந்து இருக்கும்; இடுப்பு, அடிவயிற்றைச் சுற்றி சதை போட்டிருக்கும். அடிவயிற்று பகுதியில் மட்டும் கொழுப்பு சேருவது, இந்தியர்களுக்கே உள்ள உடல் அமைப்பு. இது, மிகவும் ஆபத்தானது. அரிசி அதிகளவில் சாப்பிடுவதால், வரும் பிரச்னை இது.
வாழ்க்கை முறை மாற்றம், மரபணு, உணவு, நல்ல கொழுப்பு குறைவாக இருப்பது போன்றவை, 50 வயதிற்கு முன்பே, மாரடைப்பு வருவதற்கான சில காரணங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட,30 வயதிற்கு உட்பட்ட மகன்களை, சிகிச்சைக்கு அழைத்து வரும் அப்பாக்களின் எண்ணிக்கை, சென்னையில் அதிகரிக்கிறது.
மாரடைப்பில், சர்க்கரை கோளாறின் பங்கு என்ன?
இமயமலை ஏறுபவர்களில், முழுமையான உடல் தகுதி இல்லாத, 20 சதவீதம் பேருக்கு, மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோலவே, சர்க்கரை வியாதியும். சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தாலே, கொழுப்பு உள்ள உணவை தவிர்த்து, முறையான உடற்பயிற்சி செய்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதும் முக்கியம்.
மாரடைப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட வயதிற்கு மேல், கவனமாக இருப்பதை விடவும், குழந்தை பருவத்தில் இருந்தே, இதற்கான அடித்தளம் வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள், தினமும் ஒரு மணி நேரம் ஓடியாடி விளையாடுவதை, கட்டாயப்படுத்த வேண்டும். உணவு பழக்கத்தையும், முறைப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி உணவகங்களில், துரித உணவுகளை தவிர்த்து, பழங்கள், நம் பாரம்பரிய உணவுகளை தர வேண்டும். அனைத்து பொது இடங்களிலும், நடைப்பயிற்சி செய்ய பூங்கா அமைப்பது, ஆரோக்கியமான உணவுகளை விற்பது போன்றவற்றில், அரசு கவனம் செலுத்தினால் நல்லது.
டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு,
இதய நோய் சிறப்பு மருத்துவர்,
சென்னை.
044 - 2834 6666, 94457 76666

