தாமதமாக பழக்கப்படுத்தும் உணவுகளை குழந்தை விரும்பாது
தாமதமாக பழக்கப்படுத்தும் உணவுகளை குழந்தை விரும்பாது
PUBLISHED ON : அக் 22, 2019

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
இந்தியாவில், 20 சதவீதம் குழந்தைகள், குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர். இவர்களுக்கு, இயல்பாகவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.இதைத் தவிர்க்க, குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் போதே, அவசியமாக உள்ள சில தடுப்பூசிகளை, பெண்கள் போட்டுக் கொள்வதால், கர்ப்ப காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாது. கர்ப்பம் அடைவதற்கு முன், அம்மை, ரூபெல்லா உட்பட, தேவையான தடுப்பூசிகளை போட வேண்டும்.
கர்ப்பத்தில், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கால்சியம், இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக துாண்ட கூடிய, 'ஆன்டி பாடிஸ்' போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அனைத்தும், குழந்தை பிறப்பதற்கு, கடைசி, 10 வாரங்களில் தான், அம்மாவிடம் இருந்து, குழந்தைக்கு கிடைக்கும். அதனால், குறைப் பிரசவத்தில் குழந்தை பிறப்பதைத் தவிர்க்கவும், கர்ப்பிணியின் உடல் எடை சீராக இருக்கவும், ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட வேண்டும்.
மன அழுத்தத்தால் குறைப்பிரசவம் ஏற்படுமா?
கர்ப்பிணிக்கு, மன அழுத்தமே இருக்கக்கூடாது. தற்போது உள்ள பெண்களுக்கு, வீடு, அலுவலகம் இரண்டிலும், அதிக பொறுப்புகள் உள்ளன. பிறக்கப்போகும் குழந்தைக்கு, பொருளாதார ரீதியில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது என்பதற்காக, அதிக திட்டமிடுதல் போன்றவை தரும் மன அழுத்தம், குறைப் பிரசவத்திற்கு காரணமாகலாம்.
எதிர்ப்பு சக்திக்கு, தாய்ப்பாலின் பங்கு என்ன?
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும், 'கொலஸ்ட்ரம்' எனப்படும் சீம்பாலில், அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தற்போது, 'சிசேரியன்' மூலமே, பெரும்பாலான குழந்தைகள் பிறப்பதால், குழந்தை பெற்ற அரை மணி நேரத்திற்குள், சீம்பால் தருவதில் கவனம் செலுத்துவதில்லை.வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சீம்பாலில், பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மிகச் சிறந்த தடுப்பூசி இது தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் தந்தால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், வலி போன்றவற்றால், சீம்பாலை தராமல், புட்டிப் பாலை முதலில் கொடுத்து விடுகின்றனர்.முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, அதிகம் இருக்கும். கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பு தருவது மட்டுமல்ல, அலர்ஜி, ஆஸ்துமா, தோல் வியாதி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் வருவதும், மிகவும் குறையும். கேன்சர் பாதிப்பு வருவதில் இருந்தும் பாதுகாக்கும்.இக்குழந்தையின் அறிவாற்றல், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், 5 - 10 மடங்கு அதிகம் இருக்கும்.
குழந்தைக்கு தர வேண்டிய உணவு முறைகள்?
ஆறு மாதங்களிலேயே, காய்கறி, பழங்கள் சாப்பிடுவதைப் பழக்க வேண்டும். கீரை, தயிர், பழங்கள் கொடுத்தால், சளி பிடிக்கும் என்று, ஒரு வயது வரையிலும், பல உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். விதவிதமான உணவுகளைத் தர பயந்து, ஏதாவது ஒன்றிரண்டு உணவுகளை மட்டும் கொடுக்கின்றனர். காய்கறி, பழங்கள், புளிக்காத தயிர் இவையெல்லாம், எந்த பிரச்னையும் தராதவை.சீக்கிரமே, எல்லா உணவுகளையும் பழக்கினால் தான் நல்லது. தாமதமாகப் பழக்கப்படுத்தப்படும் உணவுகளை, குழந்தை விரும்பாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காது.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
இயக்குனர், பச்சிளம் குழந்தைகள் பிரிவு,
சூர்யா மருத்துவமனை, சென்னை.
9841071435

