PUBLISHED ON : மார் 15, 2015
நித்தம் நித்தம் நெல்லு சோறு...
நெய் மணக்கும் கத்திரிக்கா...
நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் இழுக்குதய்யா...
இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே பலருக்கும், நாக்கில் எச்சில் ஊறிவிடுகிறது. அந்தளவுக்கு மீன் குழம்பின் ருசிக்கு பெரும்பாலானோர் அடிமை. அதே சமயம், நாள் கடந்து பழைய மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுவதுண்டு. எந்த உணவையும் சமைத்த உடனே சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.
ஆனால் இன்று கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் பிரிட்ஜ் உணவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. எந்த வகை உணவாக இருந்தாலும், அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள், சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால், சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும்.
உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால், அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்; சுவையும் இருக்காது. பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள் விட்டு சாப்பிட்டால், சில நேரங்களில் 'புட் பாய்சன் ஆகவும் மாறலாம்.
இதனால் உடலில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதே போல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்.

