PUBLISHED ON : ஜூன் 20, 2010

எனக்கு 60 வயதாகிறது. கடந்த ஒரு ஆண்டாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக, "NEBIVOLOL, ATORVA STATIN' என்ற மாத்திரைகளை எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு உதடு, நாக்கு பகுதிகளில் புண் ஏற்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
-கே.ஆர்.தேவதாஸ், மதுரை
நீங்கள் எடுக்கும் இரு மாத்திரைகளுமே மிகநல்ல மாத்திரைகள். "NEBIVOLOL' மாத்திரை ரத்தக் கொதிப்பை நன்கு கட்டுப்படுத்தும். ATORVA STATIN என்ற மாத்திரை ரத்தத்தில் கொழுப்பை நன்கு கட்டுப்படுத்தும். ஆனால் ஒரு சிலருக்கு ஒரு சில மாத்திரைகளை எடுக்கும்போது, அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கும் மேற்கண்ட மாத்திரைகளில் ஏதோ ஒன்று சேரவில்லை. எனவே உங்கள் இருதய டாக்டரிடம் சென்று ஆலோசனை செய்து இரு மாத்திரைகளையுமே நிறுத்திவிட்டு, வேறு வகை மாத்திரைகளை எடுப்பது நல்லது.
70 வயதாகும் எனக்கு பல ஆண்டுகளாக அடிக்கடி இருமல், சளி இருந்து வருகிறது. இது இருதய சளிதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
- அ.வேந்தன், மதுரை
இருதய சளி என்பது, இருதய கோளாறுகளால் நுரையீரலில் ரத்த அழுத்தம் கூடி அதனால் ஏற்படும் பாதிப்பாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதாவது ரத்தக்கொதிப்பு, இருதய வால்வுகளில் கோளாறு, இருதய தசையில் கோளாறு, ரத்தக்குழாய் நோய்கள், இருதயத்தில் ஓட்டை ஆகியவை முக்கியமானவை. இருதய கோளாறாக இருந்தால் நடக்கும்போது இளைப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு படுத்து உறங்கும்போது மூச்சு திணறல் அதிகரிக்கும். உட்கார்ந்தால் குறைந்துவிடும். இதற்கு ரத்தப் பரிசோதனைகள், இ.சி.ஜி., பரிசோதனை தவிர, எக்கோ கார்டியோ கிராம் மற்றும் மார்பு பகுதி எக்ஸ்ரே அவசியம் தேவை. குறிப்பாக எக்கோ கார்டியோ கிராம்-ல் இது இருதய கோளாறா என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதன் முக்கியத்துவம் என்னவென்றால், நுரையீரல் நோய்களால் ஏற்படும் இளைப்பு, சளிக்கும், இருதயத்தால் ஏற்படும் இளைப்பு, சளிக்கும் சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. எனவே அதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது அவசியம்.
எனது தந்தைக்கு 78 வயதாகிறது. அடிக்கடி மயக்கம் வருகிறது. எக்கோ பரிசோதனை செய்ததில், "CALCIFIC SEVERE AORTC STENOSIS' என்ற வியாதி உள்ளதாக வந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?
-கே.சங்கரராமன், கோவை
AORTIC STENOSIS' என்பது இருதயத்தில் உள்ள மிகமுக்கிய வால்வான AORTIC வால்வில் சுண்ணாம்பு படிந்து அடைப்பு ஏற்படுவதாகும். இதற்கு அறுவை சிகிச்சை செய்து, செயற்கை வால்வை பொறுத்துவதே சரியான சிகிச்சை முறை. இப்போதுள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் இந்த சிகிச்சை எளிதில் செய்யப்படுகிறது.
65 வயதான எனக்கு 2000வது ஆண்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. நான் ரத்தத்தில் கொழுப்பை குறைக்க மாத்திரை எடுக்க வேண்டுமா?
-டி.எம்.முருகன், மதுரை
பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தவர்கள், இருதய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பை குறைக்கும் மாத்திரைகளான "STATIN' வகை மாத்திரைகளை அவசியம் எடுத்தாக வேண்டும். இந்த மாத்திரைகள் மிகவும் அற்புதமானவைதான். இவை ரத்தத்தில் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாது, பல்வேறு வகையில் இருதயம், ரத்தக்குழாயை பாதுகாக்கிறது. அதாவது ரத்தகுழாயில் அடைப்பு கூடாமல், மாரடைப்பு வராமல் இருப்பதற்கும், வேறு புதிய வகை அடைப்புகள் ஏற்படாமலும் நன்கு பாதுகாக்கிறது. எனவே சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகள், இருதய நோயாளிகள், பக்கவாதம் உள்ளவர்கள் அவசியம் "STATIN' வகை மாத்திரைகளை எடுப்பது நல்லது.
டாக்டர் விவேக்போஸ், மதுரை
இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி :
இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16

