PUBLISHED ON : அக் 22, 2023

ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என்று அனைவரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னையாக சிறுநீரக கல் உள்ளது. மாறிப்போன உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான் பிரதான காரணம்.
தினமும் 3.5 லிட்டர் தண்ணீர் குடித்தால் தான், 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். கால்சியம் அதிக அளவில் தங்காது. சில வகை சிறுநீரக கோளாறுகளுக்கு, டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கலாம்.
அறிகுறிகள்
விலா எலும்பின் பின்பக்கம் அதீத வலி, வலியுடன் வாந்தி, சிறுநீரில் கருப்பாக ரத்தம் வருவது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எல்லா வயதினருக்கும் வரலாம். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனில் ஏற்படும் குறிப்பிட்ட மாறுதல்களால், ஆண்களை விடவும் பெண்களை அதிகளவில் பாதிக்கிறது என்ற கருத்து இருந்தாலும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உடலின் உள்செயல்பாட்டில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால், மூன்று மாத குழந்தைக்கும் கல் உருவாகலாம். சுற்றுச்சூழல் மாசுகளால் சிறுநீரகங்களின் உள்ளடுக்குகள் சேதமடைந்து, தழும்புகளை ஏற்படுத்துகின்றன. உடல் பருமனாலும் கல் உருவாகலாம்.
வலி இல்லாமல் கல் இருப்பது, சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல. கல்லை வெளியே தள்ள சிறுநீரகங்கள் செய்யும் முயற்சியில் அவை அயர்ச்சியாகி, அறிகுறியும் இல்லாமல் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
சில நேரங்களில பின்பக்கத்தில் ஏற்படும் வலியை முதுகு வலி என்று நினைத்து அலட்சியம் செய்வோம். 'எக்ஸ் ரே' எடுத்து பார்த்தால் சிறுநீரகங்களில் கல் இருக்கும். பின்பக்கத்தில் குறிப்பாக கீழ் முதுகு, விலா பகுதிகளில் என்ன வலியாக இருந்தாலும், சிறுநீரக கல் இருக்கிறதா என்பதை பரிசோதித்து அறிய வேண்டும்.
பரிசோதனை
அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்தால், 100ல், 90 பேருக்கு சிறிய மணல் துகள்கள் போன்ற கற்கள் இருப்பது தெரியும். சாப்பிடும் உணவு, நீரில் உள்ள கால்சியம், பாஸ்பேட் உட்பட தேவையற்ற வேதி பொருட்களை வடிகட்டி வெளியேற்றுவதால் தெரியும் துகள்கள் இவை. இவை குறித்து அச்சப்படத் தேவையில்லை. போதுமான அளவு நீர் குடிக்காவிட்டால், இந்த தாதுக்கள், உப்பளம் போல படிந்து கல்லாக உருவாகிவிடும். 7 மி.மீட்டருக்கு அதிகமாக இருக்கும் கல், சிறுநீர் குழாயை அடைத்திருந்தால் மருந்து, மாத்திரை வாயிலாக வெளியேற்றலாம்.
கல் கரையுமா?
சிறுநீரக கல் கரைகிறது என்பதெல்லாம் உண்மையில்லை; கரையவும் கரையாது. சிறுநீரகத்தை ஒட்டியிருக்கும் குழாயின் அகலம் 6 மி.மீ., கீழே செல்ல செல்ல 3 மி.மீ., என்ற அளவில் குழாய் குறுகலாகி விடும். மருந்து, மாத்திரைகளால் அந்த பாதையை விரிவடைய செய்யும் போது, கல் வெளியேறிவிடும். 2 செ.மீ.,க்கு மேல் இருக்கும் கல்லை உடைப்பது கடினம். மணல் போல இருக்கும் யூரிக் அமில கல் வேண்டுமானால் கரையலாம். கால்சியம் ஆக்சலேட், பாஸ்பேட் கற்கள் கரைவதற்கு வாய்ப்பே இல்லை.
லேசர்
எந்த அளவில் கல் இருந்தாலும் லேசர் சிகிச்சையில் உடைக்கலாம். திசுக்கள் சிதையாமல் கவனமாக செய்ய வேண்டியது முக்கியம். சிறுநீர் பாதை வழியாக குழாயை செலுத்தி, கல்லை உடைத்து வெளியே எடுக்கும் போது, கல் இருந்த இடம் புண்ணாகி விடும். உள்ளே ஸ்டென்ட் வைத்து அந்த இடத்தை விரித்துவிட்டால், அதிகபட்சம் நான்கு வாரங்களில் புண் ஆறிவிடும். மிகப்பெரிய கல்லாக இருந்தால், நுண்துளை அறுவை சிகிச்சையில் கல்லை உடைத்து எடுக்க வேண்டும்.
ஆய்வு
கடந்த 1995 - 2005, 10 ஆண்டுகள் நானும், என் நண்பரும் இணைந்து செய்த ஆய்வில், சிறுநீரகக் கல் வந்தவர்களில் 8 சதவீதம் பேருக்கு, ஓராண்டில் மீண்டும் வருவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை கண்டறிந்தோம். இதை தடுக்க நிறைய தண்ணீர் குடித்து, உணவில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டும். காரணம், சோடியத்தை சுற்றியே கால்சியம் படிமம் படியும். அசைவ உணவுகள், இயற்கையிலேயே கால்சியம் உள்ள கீரைகள், ஊறுகாய், பேரீச்சை, கொய்யா, ஆப்பிள், நட்ஸ் வகைகளை குறைத்து சாப்பிட வேண்டும்.
சிறுநீரக கல் மீண்டும் வராமல் தடுக்க, பல ஆய்வுகளை தொடர்ந்து செய்கிறேன். ஒரு நோயாளிக்கு தைராய்டு சுரப்பியின் மேல், கால்சியம் அதிகம் சுரக்க செய்யும் பாரா தைராய்டு சுரப்பியை அகற்றிய பின் தான், கல் உருவாவதை தடுக்க முடிந்தது.
டாக்டர் ஆர். சீனிவாசன்
சிறுநீரக கோளாறுகள் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
சென்னை 98844 22565
