PUBLISHED ON : ஜன 08, 2017

எலுமிச்சை பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இது, உடலில் ஜீரண மண்டலத்தை சீராக்குவதோடு, இருதய நலனையும் பாதுகாக்கிறது. வெந்நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள, வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தின் இளமையை மீட்டெடுக்கிறது.
அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரண மண்டலத்தை சீராக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்துக்கு உள்ளது. தினமும், வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.
தவிர, ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது. எலுமிச்சை சாறு பானம் இருதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இருதயத்தை பலமாக்குகிறது.
காலையில் வெதுவெதுப்பான நீருடன் தேன், எலுமிச்சை கலந்து குடிப்பது, ஆரோக்கியத்துக்கு நல்லது. இது செரிமானத்துக்கு ஊக்கமூட்டுகிறது. எலுமிச்சை கூறுகள், பித்த நீர் தயாரிக்கும் கல்லீரலைத் தூண்டுகிறது. தேவையற்ற நச்சுகள் வெளியேற்றுவதிலும் உதவுகிறது. தேன் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக வேலை செய்து, உடலில் இருக்கக் கூடிய தொற்றுகளைப் போக்குகிறது.
எலுமிச்சையின் அமிலத் தன்மை, தேன் மற்றும் நீரின் பண்புகளுடன் இணைந்து, கெட்ட மூச்சை உடனடியாகப் போக்க உதவும். எலுமிச்சை, பாக்டீரியாக்களை அழித்து, உமிழ்நீர் சுரப்பிகளை செயல்படுத்தி வாயை சுத்தமாக்குகிறது.

