'ரத்த பரிசோதனை வாயிலாக கல்லீரல் பாதிப்பை அறியலாம்'
'ரத்த பரிசோதனை வாயிலாக கல்லீரல் பாதிப்பை அறியலாம்'
PUBLISHED ON : மார் 11, 2022

''ரத்த பரிசோதனை மூலம் மஞ்சள் காமாலை கிருமி பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால், கல்லீரல் பாதிப்பை தடுக்கலாம்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர் பாரி விஜயராகவன்.
அவர் கூறியதாவது: மஞ்சள் காமாலை எனப்படும் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, இ என, பிரிவுகளை கொண்டது. அசுத்தமான உணவு, சுகாதாரமற்ற நீரை பருகுவதால், பெரும்பாலானோர் ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதில், காய்ச்சல், உடல் வலி இருக்கும். பாதிப்புக்குள்ளான 90 சதவீதம் பேருக்கு, தானாகவே பாதிப்பு சரியாகிவிடும்; திரும்ப வராது. இருப்பினும், 5 முதல் 10 சதவீதம் பேருக்கு ஏற்படும் தீவிர பாதிப்பு இருக்கும்.
இவர்களில், 2 முதல் 3 சதவீதம் பேர் ஆபத்தான நிலைக்கு செல்லும் நிலையும் உள்ளது. இந்நோய் தீவிரமடைந்தாலும், குணப்படுத்தும் சிகிச்சை உள்ளது. தடுப்பூசி மூலம் ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வராமல் தடுக்கலாம்.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி ரத்தத்தின் மூலம் பரவுகிறது. ரத்த பரிமாற்றத்தின்போதோ, உடலுறவின்போதோ, உடலில் ரத்தத்தின் மூலம் இக்கிருமி தொற்றுகிறது. கிருமி தொற்றி 10 முதல் 20 ஆண்டுகளுக்கு பின், கல்லீரல் முழுமையாக பாதித்து வயிற்றில் வலி மற்றும் நீர் கோர்த்தல், கல்லீரல் வீக்கம், ரத்த வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் நோய் தெரியவரும். இதில், வயிற்றில் நீர் கோர்த்தல் இருந்தால், அது 'சிரோசிஸ்' என்றழைக்கப்படுகிறது. மருந்து மூலம் குணப்படுத்த முடியாது.
மேலும் மோசமாகாமல் கட்டுப்படுத்த முடியும். சிரோசிஸ் நிலை புற்றுநோயாக மாறும் நிலையும் உள்ளது. கல்லீரல் பாதித்தாலும், கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டாலும் அதை அகற்றிவிட்டு, மாற்று கல்லீரல் பொருத்துவதே நிரந்தர தீர்வாகும்.
ரத்த பரிசோதனை மூலம், மஞ்சள் காமாலைக்கான கிருமி பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, தொற்று இருந்தால், மருந்து மூலம் குணப்படுத்தலாம். சிரோசிஸ் அறிகுறிகள் வருவதற்கு முன்பே கண்டறிந்தால், கல்லீரல் பாதிப்பை தடுக்கலாம். கல்லீரல் குறித்த அனைத்து விவரங்களுக்கும், 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
