தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பற்களையும் கொஞ்சம் பாருங்க....!

பற்களையும் கொஞ்சம் பாருங்க....!

பற்களையும் கொஞ்சம் பாருங்க....!


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் குழந்தை வயது 5 அவளுக்கு விரல் சப்பும் பழக்கள் உள்ளது. அவளது முன் பற்கள் வெளியே தள்ளி உள்ளன. பல் வரிசையும் சீராக இல்லை. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

விரல் சப்புவது குழந்தைகளுக்கு இயற்கையாக வரும் பழக்கங்களுள் ஒன்று. இது அவர்களுக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை கொடுக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இப்பழக்கம் தொடர்வது நல்லதல்ல. இதனால் தெற்றுப்பல், கோணலான பல் வரிசை போன்றவை வரக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பால் பற்களையும் அதற்கு பிறகு விழுந்து முளைக்கும் நிரந்தரமான பற்களையும் பாதிக்கும்.

இப்பழக்கத்தை தவிர்க்க சிறிய கம்பி போன்ற கருவியை பற்களில் பொருத்த வேண்டும். இது வாயினுள் விரல்களை வைக்க விடாமல் தடுக்கும். இதனை பொருத்துவதால் பேசுவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த இடைஞ்சலும் இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சிகிச்சையை மேற்கொண்டால் இப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி அழகான பல்வரிசையை பெறலாம்.

எனக்கு சில முன்பற்கள் ஆடுகின்றன. சில நேரங்களில் லேசான வலி உள்ளது. இப்பற்களை எடுக்காமல் ஏதாவது சிகிச்சை செய்ய முடியுமா?

பற்கள் ஆடுவதற்கு காரணம் அதனை சுற்றி உள்ள ஈறுகளும் எலும்பும் தேய்ந்து பற்களுக்கு பிடிமானம் இல்லாமல் போவது. பெரும்பான்மையான ஈறு நோய்களாலும் சில நேரங்களில் கோணலான பல் வரிசையினாலும் இது போன்று தேய்மானம் ஏற்படும். அப்போது இருவகை சிகிச்சை முறைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.

ஒன்று பற்களின் உட்புறத்தில் இருந்து அழுக்கு மற்றும் கிருமிகளை சுத்தம் செய்யவேண்டும். மற்றொன்று பற்களின் வெளிப்புறத்தில் ஸ்ப்லின்டிங் எனப்படும் சிகிச்சை செய்ய வேண்டும். இம்முறையில் ஆடும் பற்களை அதற்கு இருபுறமும் உள்ள பற்களுடன் இணைத்து விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது பற்கள் நிலையாக இருக்கும். கிருமிகளை நீக்கி விட்ட நிலையில் மீ்டும் எலும்பும் ஈறுகளும் பலம் பெற்று நாளடைவில் ஆடும் பற்கள் குணமடையும்.

எனக்கு பற்களின் இடையே சாப்பிடும் உணவு மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளில் வீக்கமும் வலியும் வருகிறது. பல் குச்சியால் உணவுத் துகள்களை அகற்றுகிறேன். இதனை எவ்வாளு சரி செய்யலாம்?

பற்களுக்கு இடையில் இயற்கையிலேயே இடைவெளிகள் இருக்கும் ஆனால் சில நேரங்களில் பல் வரிசை சீராக இல்லை என்றாலோ பக்கத்துக்கு பற்களின் அமைப்பினாலோ இவ்விடைவெளி அதிகமாகும். அந்த இடத்தில் உணவு துகள்கள் மாட்டிக் கொள்ளும். இதனால் கிருமிகள் சேர்ந்து ஈறுகளில் வலியும் வீக்கமும் ஏற்படும். பல்குச்சி அல்லது பின் பயன்படுத்துவதால் இந்த இடைவெளி அதிகமாகும்.

கண்டிப்பாக இவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக டென்டல் பிளாஸ் பயன்படுத்தலாம். இது நூல் போன்று இருக்கும். இந்த இடைவெளிக்கு பிரத்தியேகமான பிரஷ்களும் உள்ளன இவற்றை பயன்படுத்தி இவ்விடங்களை சுத்தம் செய்யலாம். இதிலும் சரியாகவில்லை என்றால் இடைவெளிக்கு பக்கத்தில் உள்ள பல்லை அடைத்தோ அதில் கேப் போட்டோ இந்த இடைவெளியை சரி செய்யலாம்.

எனக்கு கீழ் கடவாய் பற்களில் சிலவற்றை சொத்தை காரணமாக எடுத்து 10 வருடங்கள் ஆகின்றன. இப்போது மேலே பற்கள் கீழே இறங்கி உள்ளன. எடுத்த பற்களை இப்பொழுது கட்ட முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பற்கள் ஒரே இடத்தில் இருப்பது பார்பதற்கு சாதாரணமாக தெரிககின்றது. ஆனால் பல விசைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் தான் பற்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. நாக்கு, கன்னம், உதடு, பக்கத்துப் பற்கள், எதிரே உள்ள பற்கள் என பல திசைகளில் இருந்து இந்த விசைகள் பற்களின் மேல் அழுத்தம் கொடுத்து அவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றன.

இதில் ஏதாவது ஒன்று மாறும் போதோ, குறையும் போதோ பற்கள் நகரத்துவங்கும். பற்களை எடுத்த பின்னர் அதன் எதிரே உள்ள பற்கள் மெதுவாக கீழே இறங்கும். இதனை தடுப்பதே சரியான மற்றும் எளிய வழியாகும். அதற்கு பல் எடுத்த ஒரு வருட காலத்திற்குள் எடுத்த இடத்தில் பல் கட்டி விட வேண்டும். அப்படி இல்லை என்றாலும் கீழே இறங்கி உள்ள பற்களை சில சிகிச்சை முறைகள் மூலம் சரி செய்யலாம். வேர் சிகிச்சை செய்து கேப் போடுவது அல்லது பற்களில் கம்பி போட்டு அவற்றை உரிய இடத்திற்கு நகர்த்தலாம்.

அதே நேரத்தில் பல் எடுத்த இடத்தில் பற்களை கட்டி விட வேண்டும். சில நேரங்களில் ஈறு நோய் காரணமாகக் கூட பற்கள் கீழே இறங்கியது போல் தெரியும். அப்படியானால் ஈறு நோயை சரி செய்து பற்களை பழைய நிலைக்கு கொண்டு வந்து நிலையாக வைக்க வேண்டும். விழுந்த அல்லது எடுத்த பற்களை உரிய நேரத்தில் கட்டுவது பின்னாளில் பல பிரச்னைகளை தவிர்க்கும்.

டாக்டர் ஜெ. கண்ணபெருமாள்

மதுரை

94441 54551


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us