தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே மனசே குழப்பம் என்ன!: மரணத்தின் விளிம்பு கற்று தந்த பாடம்!

மனசே மனசே குழப்பம் என்ன!: மரணத்தின் விளிம்பு கற்று தந்த பாடம்!

மனசே மனசே குழப்பம் என்ன!: மரணத்தின் விளிம்பு கற்று தந்த பாடம்!


PUBLISHED ON : ஜன 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹீல்டு' என்ற புத்தகத்திலிருந்து... (கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த, தன் அனுபவத்தை எழுதியுள்ளார்)

மது, போதைக்கு அடிமை, கேளிக்கை, நண்பர்களுடன் இரவு பார்ட்டி, உறவுகளைக் கையாள்வதில் குழப்பம், செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சி, காதல் தோல்வி, திரு மண முறிவு, அனாதையாகி விடுவேனோ என்ற பயம்...

இப்படி பலவிதங்களிலும், கடந்த ஆண்டுகளில் என் உடலை சீரழித்து இருக்கிறேன். விளைவு, கருப்பை கேன்சர்.

கிண்ணத்தில் வைத்த, அரிசி சாதம் சிதறிக் கிடப்பதைப் போல, கேன்சர் செல்கள் பரவி இருந்தது, கடைசி கட்டத்திலேயே தெரிந்தது.

கடந்த, 2012ம் ஆண்டு, கேன்சர் உறுதி செய்யப்பட்டவுடன், சிகிச்சைக்காக, அமெரிக்காவில் உள்ள, 'மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில்' சேர்ந்தேன். அடுத்து வந்த ஆண்டுகள், வலியும் வேதனையுமாக கழிந்தன.

டாக்டர்களால் எந்த உத்தரவாதத்தையும், நம்பிக்கையையும் தர முடியாத நிலையில், 11 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

அடுத்த ஆறு மாதங்கள், 18 சுற்றுகள் கீமோதெரபி சிகிச்சை. உடலிலும், மனதிலும் துளியும் சக்தியற்றவளாக கிடந்தேன்.

சிகிச்சை பலனளிக்குமா என்று தெரியாத நிலையிலும், தினமும் நடந்தவற்றை குறிப்புகள் எழுதி வைத்தேன். வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், என்னுள் இருந்த ஏதோ ஒன்று, நம்பிக்கை இல்லாமலேயே இருந்தது.

இனி பயம் இல்லை; உயிர் பிழைத்து விட்டேன் என்ற வினாடிகளில், நான் செய்த தவறுகளை மறைக்காமல் சொல்ல விரும்பினேன்.

சிகிச்சை முடிந்து ஊர் திரும்பியதும், என் பார்ட்டி நண்பர்களில், 80 சதவீதம் பேர், என்னை திரும்பியே பார்க்கவில்லை.

என் மீது உண்மையான அக்கறை, அன்பு கொண்ட குடும்பத்தார், சில நண்பர்கள் மட்டுமே உடன் இருந்தனர். தோள் மீது, துண்டை போர்த்த உதவியதில் துவங்கி, அவர்களின் ஒவ்வொரு உதவியும் என் மனதில் அப்படியே உள்ளது.

அதன் பின், என் வாழ்க்கையை புதியதாக மாற்றிக் கொண்டேன். தனியாக பயணம் செய்கிறேன். மனிதர்கள் அவசியம் தான்.

ஆனால், எல்லா நேரமும் கொண்டாட்டம் என்ற பெயரில், கேளிக்கை நண்பர்கள் உடன் இருந்ததில், என் மனம் முழுவதும் நஞ்சு, வாழ்க்கையை குறித்து அலட்சியம், அக்கறையின்மை, என்னை நான் உணர்ந்ததே இல்லை.

நேபாளத்தின் மலைகள், நியூயார்க்கின் பூங்காக்கள் என்று இயற்கையோடு இருக்கும் சமயங்களில், உடம்பிலும் மனதிலும் சக்தியை உணர முடிகிறது. டியர் மாயா படப்பிடிப்பு, சிம்லாவில் நடந்த போது, வழிகாட்டியின் துணையோடு, அடர்ந்த காட்டில், 'டிரக்கிங்' சென்றேன்.

ஏரிக் கரையில் அமர்ந்து புத்தகம் படிக்கிறேன். சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் ரசிக்கிறேன். வானம், பறவைகள், நெருக்கடியான நகர பூங்காக்களிலும் கூட, இயற்கை நம்மைச் சுற்றி, எத்தனை அற்புதங்களை வைத்துள்ளது என்பதை, கேன்சரில் இருந்து மீண்டு வந்த பிறகே பார்க்கிறேன்.

தேவையில்லாத, மன அழுத்தத்திற்கு நான் செல்வதில்லை. அப்படி வருவது போல உணர்ந்த வினாடியே, முட்டை, மீன் என்று எனக்குப் பிடித்த உணவை சாப்பிட்டு, 'ரிலாக்ஸ்' செய்து கொள்கிறேன். மதுவை, என் உடல் முற்றிலும் நிராகரித்து விட்டது.

தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவே, இந்த வாழ்க்கை. அனுபவம் போன்ற ஆசான் வேறு எதுவும் இல்லை. இந்த ஆண்டில், இமயமலைக்கு டிரெக்கிங் செல்லும் திட்டம் உள்ளது.

இயற்கை கொடுத்த இந்த வாழ்க்கையை, அதனோடு இணைந்து வாழ வேண்டுமே தவிர, நமக்குக் கிடைத்த சலுகையாக எடுத்துக் கொண்டு அலட்சியம் செய்யக் கூடாது.

மரணத்தின் விளிம்பிற்கு சென்று வந்தால், எதையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

மனீஷா கொய்ராலா, நடிகை, காத்மாண்டு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us