தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே மனசே குழப்பம் என்ன! - நடுநிசி கண்கள்!

மனசே மனசே குழப்பம் என்ன! - நடுநிசி கண்கள்!

மனசே மனசே குழப்பம் என்ன! - நடுநிசி கண்கள்!


PUBLISHED ON : நவ 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதியவர்கள் மற்றும் உடல் கோளாறு இருப்பவர்களுக்கு, இரவில் துாக்கம் வராது. மருத்துவரிடம் வரும் நேரத்தில், 'ராத்திரி நேரத்தில் துாக்கமே வர மாட்டேங்குது' என, சொல்வது வழக்கம். ஆனால், தற்போது, 30 வயதிற்குட்பட்ட, கல்லுாரி மாணவர்கள், படித்து முடித்து, புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், துாக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் வலி, ஆஸ்துமா, மூச்சு திணறல், மன சோர்வு, மனப் பதற்றம், கணவன் அல்லது மனைவி குறட்டை விடுவது, படுக்கை அறை வெளிச்சமாக இருப்பது போன்றவை, துாக்கமின்மைக்கு முக்கிய காரணங்கள்.

மென் பொருள் நிறுவனங்களில், வேலை செய்யும் இளம் வயதினர், இரவு நேரங்களில் வேலைக்கு செல்கின்றனர். இரவு, 'ஷிப்டி'ல் தொடர்ந்து வேலை செய்வதால், 'பயாலஜிக்கல் கிளாக்' எனப்படும், உயிர் கடிகாரம் மாறுகிறது.

இரண்டு வாரங்களுக்கு பின், 'ஷிப்ட்' மாறினால், அதற்கேற்ப உயிர் கடிகாரம் மாறும். இப்படி பகல், இரவு என்று மாறி மாறி பணி செய்வதால், உடலின் உள் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

இரவு, 8:00 மணியானால், சாப்பிட்டு துாங்கலாம் என்று உடம்பு பழகியிருக்கும். அந்த நேரத்தில், அலுவலகம் செல்ல வேண்டும் எனும் போது, விழிக்க வேண்டும் என்ற கட்டாயம்.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, 'ஷிப்ட்' மாறுவதால், துாக்க நேரமும் மாறுகிறது. சூரியன் மறையும் நேரத்தில் துாங்க வேண்டும் என்பதாகவே, பரிணாம வளர்ச்சியில், நம் உடம்பு மாறியிருக்கிறது.

கிராமத்தில், பகலில் வயல் வேலை செய்துவிட்டு, பின் மாலைப் பொழுதில் துாங்கி விடுவது பழக்கம். இருள் வர துவங்கினால், துாங்கி விட வேண்டும்.

மின் விளக்கு கண்டுபிடித்த பின், துாங்கும் நேரம் மாறியது; ஆனால், பாதிப்பு பெரிதாக இல்லை. காரணம், நேரடியாக மின் விளக்கை பார்த்து, எந்த வேலையையும் நாம் செய்வதில்லை. விளக்கின் கதிர்களிலிருந்து வரும், வெளிச்ச பிரதிபலிப்பின் உதவியுடனேயே, வேலைகளை செய்கிறோம்.

'டிவி', ஆண்ட்ராய்டு போன், லேப்டாப் போன்றவை அப்படி இல்லை. அவற்றிலிருந்து வரும் வெளிச்சத்தை நேரடியாக பார்க்கிறோம். அதிலிருந்து வரும் ஊதா வெளிச்சம், கண்கள் இமைப்பதை குறைத்து விடும். புத்தகம் படிக்கும் போது, மற்றவருடன் பேசும் நேரங்களில், ஒருவர் எத்தனை முறை கண்களை இமைக்கிறார் என்று பார்த்தால் இது புரியும்.

கண்கள் ஆரோக்கியமாக இருக்க, கண் சுரப்பிகள் சுரக்கும் நீர் அவசியம். இது, கண்களை ஈரப்பதமாக வைத்திருப்பதோடு, தேவையான ஊட்டச்சத்தையும் தருகிறது. கண்கள் இமைக்கும் போது தான், இந்த நீர் சுரக்கும். மின் சாதன பொருட்களை நீண்ட நேரம் பார்த்தால், கண் இமைப்பதையே மறந்து விடுவோம்.

நிமிடத்திற்கு, 15 முறை கண் இமைக்க வேண்டும் எனில், மொபைல் போன் பார்க்கும் நேரத்தில், ஐந்து அல்லது ஆறு முறை தான் இருக்கும். மொபைல் பார்ப்பவர்களை கவனித்தால் இது புரியும். இரவில் துாங்கும் நேரத்தில், 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கும்.

சுற்றுப்புறம் இருட்டானவுடன், கண்களில் இருந்து நம் மூளையில் உள்ள, 'பீனியல்' சுரப்பி, 'வெளியில இருட்டாகி விட்டது. துாங்க வேண்டும்' என்ற தகவலைக் கொடுக்கும். உடனே, 'மெலடோனின்' ஹார்மோன் சுரந்து, துாக்கம் வரும்.

'ஆண்ட்ராய்டு' போன் வருவதற்கு முன், 'டிவி' பார்ப்போம். துாங்க வேண்டும் என நினைத்தால், 'டிவி'யை அணைத்து விட்டு, படுக்கையறைக்கு செல்வோம்.

இப்போது, படுக்கையின் அருகிலேயே மொபைல் போன் வைத்து, பார்த்தபடியே இருக்கிறோம். போனில் இருந்து வரும் நீல நிற ஒளி, கண்களுக்கு உள்ளே சென்று, மூளையில் 'மெலடோனின்' சுரப்பதை குறைக்கும்; தடுத்தே விடும். துாக்கம் வராது.

இவையெல்லாம் தவிர, கடந்த காலம் பற்றிய கவலை, எதிர்காலம் பற்றிய பயம் என்று தேவையில்லாத எண்ணங்கள், துாக்கத்தைக் கெடுக்கும்; இந்த இரண்டிற்கும் எல்லையே இல்லை.

துாங்குவதற்கு முன், இரண்டும் இரண்டும் எத்தனை என்று கேட்டால், நான்கு என, உடனே சொல்லி விட்டு துாங்கப் போய்விடலாம். ஆனால், நாளை என்ன நடக்கும், அடுத்த, 10 ஆண்டுகளில், உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்டால், பதிலே கிடைக்காது.

நன்றாக துாக்கம் வரும் போது மட்டும் படுக்கையில் படுக்க வேண்டும். படுக்கையில் படுத்தபடி, துாங்க முயற்சிக்க கூடாது. படுக்கையை, துாங்குவதற்கும், தாம்பத்திய உறவுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நன்றாக துாங்க என்ன செய்ய வேண்டும்?

'நாளைக்கு விடுமுறை; இன்று நீண்ட நேரம் விழிக்கலாம்; காலையில் தாமதமாக எழுந்திருக்கலாம்' என்று நினைப்பது தவறு. குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க பழக வேண்டும். விடுமுறை என்றால், வழக்கமான துாங்கும் நேரத்தை விடவும், அதிகபட்சம், இரண்டு மணி நேரம் இடைவெளி மட்டும் துாங்கவும், எழுந்திருக்கவும் இருக்கலாம்.

துாங்குவதற்கு முன் படிப்பது, சிறிது நேரம் நடப்பது, பால், வாழைப்பழம் சாப்பிடுவது ஆகியவற்றை மேற்கொண்டால், நன்கு துாக்கம் வரும். காபி, டீ, சிகரெட், மாலை, 6:00 மணிக்கு மேல் குடிக்கக் கூடாது. இவையெல்லாம் நம்மை, 'அலெர்ட்' செய்வதற்கு பயன்படுபவை. படுக்கை சுத்தமாக, படுக்கை அறை இருட்டாக, அமைதியாக இருக்க வேண்டும்.

துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். துாங்கும் நேரத்தில், கைகளுக்கு எட்டாத துாரத்தில், போனை வைப்பது இன்னும் நல்லது.

டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.பி,

மனநல மருத்துவர்,

சென்னை.

80561 56007

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us