sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனசே... மனசே குழப்பம் என்ன!

/

மனசே... மனசே குழப்பம் என்ன!

மனசே... மனசே குழப்பம் என்ன!

மனசே... மனசே குழப்பம் என்ன!


PUBLISHED ON : செப் 17, 2017

Google News

PUBLISHED ON : செப் 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய பெற்றோருக்கும், பதின் பருவத்தினருக்கும் இடையிலான பிரச்னைகள் அதிகரித்து வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. குறைபாடு, பிள்ளை வளர்ப்பு முறையிலா அல்லது வெளியுலக காரணிகளா என, யோசிக்கும் போது, பெரும்பாலான பதின்பருவ பிரச்னைகள், பிள்ளை வளர்ப்பில் உள்ள கவன குறைபாட்டினாலேயே உண்டாகிறது எனலாம்.

இதன் மூலம் பெற்றோரை குற்றப்படுத்த முற்படவில்லை. அதே சமயம் பிள்ளை வளர்பில், குறிப்பாக பதின் பருவத்தினரை கையாளுவதில் அதிக கவனம் அவசியம் என்கிறேன்.

என்னிடம் சமீபத்தில் கவுன்சிலிங் வந்த, ராகவ் என்ற, 16 வயது மாணவனின் மனபாதிப்பை பற்றி பார்க்கலாம். பெற்றோர் மற்றும் பையனிடம் தனித்தனியாக பேசிப் பார்த்ததில், அது பதின் பருவ மன அழுத்தம் என்பது புரிய வந்தது.

பையனை பற்றி பெற்றோரின் குற்றச்சாட்டுகள்:

* படிப்பில் கவனமின்மை

* எதிர்த்துப் பேசி கோபப்படுதல்

* எதிலும் நாட்டமின்மை

* பள்ளிக்கு செல்ல மறுப்பு

* அதிக நேரம் நண்பர்கள் வட்டத்துடன் செலவழிப்பது

* மகிழ்ச்சியற்ற நிலை

* துரித உணவு மட்டுமே விரும்புதல்

* தூக்கமின்மை

அவன் அம்மாவின் தற்போதைய கவலை, மகனுக்கு புகை பழக்கமும் வந்துவிட்டதோ என்பது.

இதையெல்லாம் கேட்டபோது, இன்றைய பிள்ளைகளை பற்றிய கவலை வந்தது. பையனிடம் பேசிய போது, அவனுடைய புகார் வேறு மாதிரி இருந்தது.

* வீட்டில் அனைவரும் இருந்தும், தனிமையாக உணர்வது

* புதிய பள்ளி பிடிக்காததால் பள்ளி செல்ல விருப்பமின்மை

* வீட்டில் என்னை யாரும் விரும்பவில்லை.

* இனம் தெரியாத பயம் காரணமாக, சில கற்பனை எண்ணங்கள்

பெற்றோர் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருமுறை கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டதை காட்டி, 'எனக்கு வாழவே பிடிக்கவில்லை ஆன்ட்டி...' என அழுதான்.

பிரச்னை எங்கே என, பெற்றோரிடம் பேசிய போது புரிந்தது. 'ஆம், அவன் மேல் கவனம் செலுத்த முடியவில்லை தான். எனக்கு வியாபார மும்முரம். மனைவிக்கு வீட்டு விஷயங்களை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. தவறு எங்களுடையது தான்' என்றார் தந்தை.

இங்கு பெற்றோர் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் மன நிலையை கண்காணிக்க தவறுகிறோம் என்பதே அது.

அதாவது, பிள்ளைகளின் மனநிலை மாற்றங்களான, இனம் புரியாத பயம், வருத்தம், குழப்பம், பதின்பருவ ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம்

ஆகியவை... பெற்றோர் கண்டறிவது எப்படி?

இதோ அதற்கு சில டிப்ஸ்

* பெற்றோர் பிள்ளைகளுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் மிக அவசியம்

* சரியோ, தவறோ... விஷயங்களை தைரியமாக, தங்களிடம் பகிர வேண்டும் என்றும் கூற வேண்டும்

* அதிக நேரம் தனியாக இருந்தாலோ, அதிகமாக யோசித்தாலோ, கவலையுடன் காணப்பட்டாலோ, அவனை வெளியே அழைத்துச் சென்று பிடித்த உணவோ, பொருளோ வாங்கி தந்து, என்ன பிரச்னை என்று கேட்க வேண்டும். அப்போது, பிள்ளை, தன்னை அங்கீகரிப்பதாக உணர்கிறது

* தந்தையோ, தாயோ அதீத கண்டிப்பை தவிர்ப்பது முக்கியம். அது அவர்களை உங்களிடம் நெருங்க விடாது.

* கலகலப்பான குடும்ப சூழல், பிள்ளைகளின் தனிமையை தவிர்க்க உதவும்.

தனிமை மற்றும் சார்ந்திருப்பதை தவிர்க்க:

* நிறைய வீடுகளில் பிள்ளைகள் தாயிடம் மட்டும் வெளிப்படையாகவும், தந்தையிடம் விலகியும் இருப்பர். அதுவும் பையன்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. தங்கள் தேவைகளை, எதிர்ப்பார்ப்புகளை அடக்கி அடக்கி ஒருநாள் அது கோபமாக வெளிப்படலாம்

* எதற்கும் எளிதாக மனமுடைந்து விடாமல், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள, அவர்களை பழக்க வேண்டும்

* இன்றைய வளர்ப்பின் முறை நாளை பிள்ளைகளின் வாழ்வில் விளைவுகளை (சரியான / தவறான) ஏற்படுத்த வல்லது என்ற உண்மையை, பெற்றோர் உணர்ந்தே ஆக வேண்டும்.

* இவன் மட்டுமல்ல; நிறைய ராகவ்கள் மனதில் உள்ள ஏதோ ஒரு வெற்றிடமே அவர்களின் மாறுபாடான நடத்தைக்கு காரணமாகிறது. மேற்கண்டது போல பிரச்னை தீவிரமாகும் முன், உரிய நேரத்தில், அவர்களுடன் மனம் திறந்த பேச்சு, அது சாத்தியமில்லாவிட்டால், கவுன்சிலிங் போன்றவை தீர்வு தரலாம்.

டாக்டர் நளினி சந்திரசேகர்,

மனநல மருத்துவர், சென்னை

nalinijuma@yahoo.com






      Dinamalar
      Follow us