பதட்டம், மன அழுத்தம், தனிமை போன்ற மன நலம் தொடர்பான பிரச்னைகள்...
பதட்டம், மன அழுத்தம், தனிமை போன்ற மன நலம் தொடர்பான பிரச்னைகள்...
PUBLISHED ON : மே 26, 2021

நாடு முழுதும், கொரோனா தொற்றுக்கு நிகரான பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது, பதட்டம், மன அழுத்தம், தனிமை போன்ற மன நலம் தொடர்பான பிரச்னைகள். எல்லா நேரமும், ஒருவித எதிர்மறை எண்ணங்கள், அதிர்ச்சி, யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு.
இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு உள்ளானோர், பெங்களூருவில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்திற்கு, மனநல உதவி கேட்டு தொலைபேசியில் அழைப்பதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக வரும் அழைப்புகளை விட, இந்த, இரண்டாவது அலையில், 400 சதவீதம் கூடுதலாக அழைப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளிலும், மயானங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை, ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எதிர்மறை தகவல்களை தொடர்ந்து உள்வாங்கிக்கொள்வதும், இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
நாடு முழுதும் உள்ள மனநல மையங்களில், இதே போன்று மனநல ஆலோசனை கேட்பவர்கள் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த அழைப்புகளில், 80 சதவீதம், 18 - 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.கடந்த, 12 மாதங்களில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை, 'டிப்ரஷன்' எனப்படும் மன அழுத்தம். எந்த அளவு நம்மை நிலைகுலைய செய்துள்ளது என்பதை இது உணர்த்தும்.
பிரச்னை
பதட்டம், மன அழுத்தம், படபடப்பு போன்ற மன நல பாதிப்புகளை எப்படி கையாள்வது என விளக்குகிறார் டாக்டர் ஆர்.வெங்கடேஷ்: ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாகும் போது, மன பதட்டம், படபடப்பு, பயம், போன்ற எல்லாவித மன பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மைக்ரைன், ஆஸ்துமா கோளாறுகளை, மன அழுத்தம் அதிகப்படுத்துவது போல், மனப் பிரச்னைகளையும், ஸ்ட்ரெஸ் அதிகப்படுத்தும்.கடந்த ஒன்றரை வருடமாக வைரஸ் தொற்று பரவலால், அனைவரும் ஒருவித அழுத்தத்தில் வாழ்கிறோம். இதனால், இயல்பாகவே இதய நோய்கள், சர்க்கரை கோளாறு, மைக்ரைன், மன நோய்கள் அதிகரிக்கவே செய்யும். உடல், மன அளவில் பலவீனமாக இருப்பவர்கள், மன அழுத்தத்தில் இருந்தாலோ பதட்டம், பயம், வரவே செய்யும்.
பல மாதங்களாக அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்தும், 90 சதவீதம் கொரோனா நோயாளிகளை மட்டும் தான் கவனிக்கின்றன. அரசு மருத்துவ மையங்களில், போதுமான அளவு மனநல டாக்டர்கள், ஆலோசகர்கள் இருக்கின்றனர். அவர்களும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பொது, மனநல ஆலோசனை, உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனப் பிரச்னைகள் அதிகரிக்க இதுவும் காரணம்.
கொரோனா பாதித்த நோயாளிகள், ஒரு வார சிகிச்சைக்கு பின், பயம், பதட்டத்தோடு இருப்பது , அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், என்னிடம் நோயாளியை அனுப்புவார்கள். கொரோனா சிகிச்சை பெறுபவர்களிடம் பதற்றம், பயத்தை பார்க்க முடிகிறது. வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு, சில நாட்களில் இப்படி பயம் வந்தால், அவர்கள் மேலும் பயந்து விடுகின்றனர். இவர்கள் தான் உதவி மையத்தை அழைக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு, இரண்டு மாதங்கள் கழித்து, மனப்பதட்டம் வருகிறது.
மாற்றம்
குடும்பத்தில், நண்பர்கள் யாரையாவது இழப்பது, தனிமை, வேலை இழப்பு, பொருளாதார சிக்கல், வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால், மன அழுத்தம் ஏற்படலாம். 'கொரோனா பாசிட்டிவ்'வாக இருப்பவர்கள், கடந்த பல நாட்களில், படுக்கை, ஆக்சிஜன் கிடைப்பதற்கு படாதபாடு பட்டு, அவர்கள் பிழைத்து வந்த பின்னும், இதன் பாதிப்பு தீர, சிறிது காலம் ஆகும். மனநல ஆலோசகரின் உதவி தேவைப்படும். கொரோனா வைரஸ், உள் உறுப்புகளில் வீக்கம், ரத்த உறைவு போன்ற உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துவது போன்று, நியூரோ கெமிக்கல்ஸ் எனப்படும், மூளை சுரக்கும் வேதிப் பொருட்களின் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பசி, துாக்கம் நன்றாக இருக்கிறது; எதிர்மறை எண்ணங்கள் வருவது மட்டும் பிரச்னை எனில், புத்தகம் படிப்பது, இசை கேட்பது, எதிர்காலம் பற்றி அதிகம் நினைப்பதை தவிர்த்தால் போதும். இந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி சீராக இருந்திருக்கிறது; வருமான வரி, ஜி.எஸ்.டி., கொரோனா பாதிப்புக்கு முன் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக இருந்திருக்கிறது. எனவே, வைரஸ் கட்டுக்குள் வந்து விட்டால், மற்ற அனைத்தும் சரியாகிவிடும். கொரோனா விதியை பின்பற்றி, நம்பிக்கைஉடன் இருக்க வேண்டியது அவசியம்.இயற்கையை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது.
இரண்டாவது அலை இந்த அளவு மோசமாக இருக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. இப்படி இருக்கும், அப்படி நடக்கும் என்பது எல்லாம் வெறும் கணக்கு. அதிகம் கணிப்புகள் செய்யாமல் இருந்தாலே போதும்.எதிர்மறை தகவல்கொரோனா அப்டேட் என்ற பெயரில், ஒரே செய்தியை தொடர்ந்து செய்தி சேனல்களில் பார்த்துக்கொண்டிருப்பதால், மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். எனவே, செய்திகளில் நமக்கு தேவையானதை அளவாக பார்ப்பது நல்லது. எதிர்மறை தகவல்களை அடிக்கடி பார்ப்பதை, கேட்பதை தவிர்க்கவும்.
அதிலும், கொரோனா பாதித்து தனிமையில் உள்ளவர்கள், இந்த எண்ணிக்கையில் நாமும் ஒரு கூடுதல் எண்ணாக ஆகி விடுவோமோ என்ற உணர்வு வரலாம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது உண்மை. 10 சதவீத தட்டுப்பாட்டை திரும்ப திரும்ப காட்டும் போது, இப்படித்தான் எல்லா இடத்திலும் இருக்கிறது என்ற தோற்றம் வருகிறது.
வகுப்பில், 49 குழந்தைகள் நன்றாக இருக்கும். ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டால், 49 குழந்தைகளின் பெற்றோரும் பதட்டமாகி விடுகின்றனர். அது போல தான் இதுவும். கொரோனா வைரஸ் தொற்று பாதித்தால், மனதை 'ரிலாக்ஸ்' ஆக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி மனநிலையை சார்ந்தே உள்ளது.பார்த்துக் கொள்ளலாம் என்று நேர்மையாக, தைரியமாக இருப்பவர்கள் தொற்றில் இருந்து, விரைவில் வெளியில் வந்து விடுகின்றனர். பதட்டம், பயம், மன அழுத்தம் ஆகியவை, ஆக்சிஜன் அளவு, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைத்து விடும்.
தொடர்புக்கு:73977 76331, 044-4 2271234
டாக்டர் ஆர்.வெங்கடேஷ்.
மனநல மருத்துவ ஆலோசகர்,
மேதா மருத்துவமனை,
சென்னை
