மனசே, மனசே குழப்பம் என்ன!: இனிக்கும் கசப்பு நிஜம்!
மனசே, மனசே குழப்பம் என்ன!: இனிக்கும் கசப்பு நிஜம்!
PUBLISHED ON : செப் 02, 2018

என், 4 வயது மகன் அயான், சிறுநீரக கேன்சரால் பாதிக்கப்பட்டது உறுதியான வினாடியில், அது குறித்து விரிவாகப் படிக்க துவங்கினேன்; அதில், வெள்ளை சர்க்கரைக்கும், கேன்சருக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது.
குழந்தைக்கு கேன்சர் என்ற போது, மொத்த குடும்பமும் நொந்து போனோம். ஏன் ஏன் என்று யோசித்து, எங்கள் வாழ்க்கை முறை முழுவதையும் மாற்ற வேண்டும் என, தீவிரமாக முடிவு செய்தோம்.
நான் படித்து, தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்கிறேன்...
சாதாரண செல்லைக் காட்டிலும், 10 - 12 மடங்கு, கூடுதலாக சர்க்கரையை ஈர்க்கும் திறன், கேன்சர் செல்லுக்கு உண்டு. சர்க்கரை கலந்த நீரை நிறைய குடிக்கச் செய்து, 'பெட்' ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், ஆரோக்கியமான செல்களை விடவும், சர்க்கரை நீரை அதிகம் குடித்த கேன்சர் செல்கள், 'பளிச்' என, தெரிந்ததாக, ஒரு டாக்டரின் அனுபவத்தை படித்தேன்.
நாம் சாப்பிடும் சர்க்கரை, எல்லா செல்களுக்கும் செல்கிறது; அதேபோல் தான், கேன்சர் செல்லுக்கும் செல்லும். இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். கேன்சர் செல்லின் வளர்ச்சியை, சர்க்கரை ஊக்கப்படுத்தும் என்பது தான் கசப்பான உண்மை.
உலகில் உள்ள அனைத்து கேன்சர் சிகிச்சை மையங்களிலும், சர்க்கரையை சாப்பிடச் சொல்லி, சிபாரிசு செய்வது வியப்பாகவே உள்ளது. என் மகனுக்கு உடல் எடை குறைந்த நேரத்தில், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையே, டாக்டர்கள் கொடுக்கச் சொன்னார்கள்; அப்போது தான், பழைய உடல் எடை வரும் என்பது அவர்கள் வாதம்.
கேன்சரிலிருந்து மீண்டு வந்த பின், மகனின், 'டயட்'டில் மட்டுமல்ல, எங்கள் அனைவரின் உணவிலும் சர்க்கரை சேர்ப்பதில்லை; அதற்கு பதிலாக, தேன், இயற்கை வெல்லம் என்று மாறி விட்டோம்.
சிகிச்சை முடிந்து, மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்தான் என் மகன். அவனது பள்ளி தலைமை ஆசிரியர், நன்றாக பதில் சொல்லும் குழந்தைக்கு, சாக்லேட் தருவதாக சொன்ன போது, அயான் உடனடியாக எழுந்து, 'வேண்டாம்... அதில் சர்க்கரை உள்ளது. சர்க்கரை, கேன்சர் செல்லை வளர்க்கும்; குழந்தைகளான எங்களுக்கு, சாக்லேட் தந்து பழக்கப்படுத்த வேண்டாம்' என்று சொன்னதைக் கேட்டு, நல்ல விஷயத்தை, அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று பெருமையாக இருந்தது.
இம்ரான் ஹாஸ்மி, பாலிவுட் நடிகர், மும்பை.
