PUBLISHED ON : மே 11, 2025

கேன்சர், லுாபஸ் உட்பட நம் எதிர்ப்பணுக்களே நம் செல்களை அழிக்கும் 'ஆட்டோ இம்யூன்' கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, கரு முட்டையை முழுமையாக இழக்கும் அபாயத்தில் உள்ள 35 வயதிற்குட்பட்ட பெண்கள், தங்களின் கரு முட்டை மற்றும் கருக்குழாய் திசுக்களை பாதுகாத்து வைத்து, எதிர்காலத்திற்கு பயன்படுத்துவது தான் தற்போது மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம். இதற்கு, 'பெர்டிலிட்டி பிரிசர்வேஷன்' என்று பெயர்.
இது தவிர, 'எண்டோமெட்ரியோசிஸ், கேலக்டோசீமியா' எனப்படும் மரபியல் கோளாறுகள் போன்ற பாதிப்புகளால், கருக்குழாய் அறுவை சிகிச்சை தேவைப்படும் இளம் பெண்களுக்கு, இந்த முறை பாதுகாப்பாக இருக்கும்.
நவீன முறையில் கரு முட்டைகளை சேகரித்து, உறைநிலையில் திரவ நைட்ரஜனில் பாதுகாத்து வைக்கப்படும். 'கீமோதெரபி, ரேடியோதெரபி' போன்ற கேன்சர் சிகிச்சைக்கு பின், குழந்தை பெறும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவாக உள்ளவர்கள், சிகிச்சைக்குபின் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயல்பாக வாழ்பவர்கள், இந்த முறையில் கரு முட்டையை பாதுகாத்து வைத்து, எதிர்காலத்தில் குழந்தை பெறலாம்.
கரு முட்டையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாதுகாக்க முடியும்; இதற்கான செலவு அந்தந்த மையத்திற்கு ஏற்ப வேறுபடும். சிகிச்சை முடிந்த பின், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறலாம்.
எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை, வயிற்று பகுதியில் கதிரியக்க சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு, இந்த முறையில் கரு முட்டையை பாதுகாத்து வைக்க சிபாரிசு செய்கிறோம்.
திருமணம் ஆகாத நிலையில் பெற்றோரிடமும், திருமணம் ஆன பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கை துணையுடனும் இது பற்றி ஆலோசனை தருகிறோம்.
உடல் ரீதியில் எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில், சில பெண்கள் தாமதமாக குழந்தை பெற திட்டமிடலாம்.
சிலருக்கு பொருத்தமான துணை கிடைப்பதில் தாமதமாகலாம்; அவர்களுக்கும் இந்த முறை உதவியாக இருக்கும்.
விரும்பிய நேரத்தில் குழந்தை பெறும் சுதந்திரத்தை, நவீன மருத்துவ தொழில்நுட்பம் பெண்களுக்கு தந்தாலும், உரிய வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் அறிவுரை.
காரணம், குறிப்பிட்ட வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்கும்போது சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
டாக்டர் கிருத்திகா,
கே.எஸ்., மகப்பேறு மற்றும் இனப்பெருக்கவியல் மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
91503 08039
drkirthika123@gmail.com

