PUBLISHED ON : நவ 05, 2023

'பேக் பெயின்' எனப்படும் முதுகுவலி இரண்டு விதங்களில் வரலாம். ஒன்று, முதுகு தண்டு, அதனை சுற்றியுள்ள தசைகள், நரம்புகளில் ஏற்படும் வலி. இரண்டாவது வகை, பிற உடல் கோளாறுகளால் ஏற்படும் முதுகு வலி.
இந்த வலியானது குனியும்போது, பக்கவாட்டில் திரும்பும் போது, கால் விரல்களின் ஆதரவில் உடலை மேல் நோக்கி வளைக்கும் சமயங்களில், நின்றால், நடந்தால் என்று எப்போது வேண்டுமானாலும் வரலாம். பாதிப்பை பொறுத்து வலியின் தன்மை நபர்க்கு நபர் மாறுபடும். எரிச்சல், தசைகள் பிசையும் உணர்வு, குத்துவது, கால்களில் மரத்து போன உணர்வு வரலாம்; பாதம் வரைக்கும் வலி பரவலாம். ஓய்வு எடுத்தும், எண்ணெய் தடவி மசாஜ் செய்தும், தொடர்ந்து இரண்டு வாரங்கள் வலி குறையாமல் அப்படியே இருப்பது, கால்கள் மரத்து போவது, முழங்காலுக்கு கீழ் வலி வருவது, குத்துவது, கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது, போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இத்துடன் சிறுநீர் கழிப்பதில் சிரமம், மலச்சிக்கல், காய்ச்சல் இருந்தால், பிரச்னை மேலும் தீவிரமானதற்கான அறிகுறி. அடிபடுவது, பலமாக இடித்து கொண்டதால் முதுகில் வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.
உடற்பயிற்சி இல்லாதது, அதிக உடல் பருமன், சிகரெட் பழக்கம், மனநல நோய்கள், டெட்டனஸ், டி.பி., சிறுநீரகக் கல், சிறுநீரக் தொற்று, கேன்சர், கணைய அழற்சி, கர்ப்பப்பை கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிடாய் போன்ற காரணங்களால் தசைகள் பலவீனமாகலாம். இரும்பு சத்து மாத்திரைகள் உட்பட சில வகை மாத்திரைகள் மலச்சிக்கலை ஏற்படுத்தி, வலியை அதிகரிக்கலாம்.
ஆயுர்வேதம்
முதுகுவலிக்கு தரப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள் மிக நல்ல பலனை தருகிறது. முதலில், பஞ்சகர்மா சிகிச்சை செய்வோம். இதில், வயிறு சுத்தம் செய்யப்படும். மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, முதுகின் கீழ்ப்பகுதி நரம்புகளில் அழுத்தம் குறைந்து, வலி சரியாகலாம். கால்சியம் அளவை அதிகப்படுத்தவும், சாப்பிடும் உணவில் இருக்கும் கால்சியம் முழுதும் உறிஞ்சி கொள்ள தேவையான மருந்துகளும் தரப்படும். முதுகு தண்டின் 'டிஸ்க்' அனைத்தும் வலிமைப்படும்; வலி சரியாகிவிடும். உடனடியாக தீர்வு தருமா என்றால், குறைந்தது மூன்று மாதங்கள் பொறுமையாக அனைத்து சிகிச்சைகளும் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.
நான்காவது நிலையான எந்த அசைவும் செய்ய முடியாத அளவுக்கு வலி இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
டாக்டர் தீபா ஜெயராம்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை98413 73458, 044 42146525