'கேட்ராக்ட' பழுக்கட்டும் என்று காத்திருக்க தேவையில்லை
'கேட்ராக்ட' பழுக்கட்டும் என்று காத்திருக்க தேவையில்லை
PUBLISHED ON : நவ 05, 2023

நன்கு முற்றிய, பழுத்த நிலையில் தான் அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடியும் என்று, கண்புரை எனப்படும் 'கேட்ராக்ட' குறித்து நம்மிடையே தவறான அபிப்ராயம் உள்ளது. தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தில் திறமையான அனுபவம் மிக்க டாக்டர்களால் ஆரம்ப நிலையிலேயே கேட்ராக்ட்டை அகற்ற முடியும். கண்புரை முற்றிய நிலையில், கண்கள் வீங்கி, பார்வை மங்கலாகி, சிவந்து, வாந்தி போன்ற பக்க விளைவுகள் வரும். அதன்பின், அறுவை சிகிச்சை செய்து தான் கண்புரையை அகற்ற முடியும்.
பார்வை பழைய நிலைக்கு திரும்ப இரண்டு வாரங்களுக்கு மேலாகி விடும்; மூன்று வாரங்கள் ஒய்வு, வாகனம் ஓட்டுவது கூடாது. வலி தெரியாமல் இருக்க முழுமையாக மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆரம்ப நிலையில் இருந்தால், 'ஐ டிராப் அனஸ்தீசியா' எனப்படும் கண்களில் சொட்டு மருந்து ஊற்றி மரத்து போக செய்து, நவீன அல்ட்ரா சவுண்டு தொழில்நுட்பத்தில், சுலபமாக அகற்றலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்த முறையில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்கிறேன். இதில் வலி இருக்காது; கறுப்பு கண்ணாடி போட வேண்டாம்; வெளி நோயாளியாகவே சிகிச்சை முடிந்து விடும். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் கண்புரையை அகற்றிவிடலாம்.
சொட்டு மருந்தை அவரவர்களே போட்டு கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ததே வெளியில் தெரியாது. 'டிவி' பார்ப்பது, சமைப்பது, கார் ஓட்டுவது என்று தினசரி வேலைகளை சில மணி நேரத்தில் செய்யலாம். மூன்றாவது நாளில் முகம் கழுவுவது, ஐந்தாம் நாள் தலைக்கு குளிக்கலாம். நடை பயிற்சி செய்யலாம். கடல், குளங்களில் குளிப்பது மட்டும் கூடாது.அல்ட்ரா சவுண்டு அறுவை சிகிச்சையில் வெறும் 2 மில்லி மீட்டர் அளவுதான் துளை போடுவோம்.
கண்புரையை அகற்றி, லென்ஸ் வைத்த பின், இது தானாகவே மூடி கொள்ளும். இருமினால், தும்முவதால் நுண்ணிய துளை இறுகுமே தவிர, பாதிப்பு எதுவும் இருக்காது. கண்களின் நடுவே கைகளை வைத்து அழுத்துவது தான் தவறு. கண்புரையை ஆரம்ப நிலையிலேயே அகற்றுவதால், கருவிழியின் உள்ள நீர் சுரப்பியை பாதுகாக்க முடியும்.
பொதுவாக நாம் நினைப்பது போல கண்களுக்குள் வைக்கும் லென்ஸ் மட்டும் தரமானதாக இருந்தால் போதாது. நவீன கருவிகள், அதை கையாளும் விதம், என்று அனைத்தும் மிகச்சரியாக இருக்க வேண்டியது இதில் முக்கியம். சில வகை கண்புரைகளால், பார்வையில் சில குறைபாடுகள் ஏற்படும். தரையில் தண்ணீர் இருப்பது, எதிரில் வரும் வாகன வெளிச்சம் தெரியாது. படிக்க முடியாது. சிலருக்கு கண்புரையோடு கிட்ட பார்வை, துார் பார்வை போன்ற குறைபாடுகள் இருக்கலாம். இவையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் சரி செய்ய வேண்டும்.
கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யும் போது, லேசர் தொழில்நுட்பத்தையும் இணைத்து பார்வை குறைபாடுகளை சரி செய்யலாம். உடல் ரீதியிலான எந்த பிரச்னையும் இல்லா பட்சத்தில், உதவிக்கு யாரும் தேவையில்லை.
டாக்டர் பி. காந்தாமணி,
கண் அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை95000 40702
