
பவித்ரா, மதுரை: எனது மகனுக்கு காக்கை வலிப்பு நோய் உள்ளது. அவனுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?
காக்கை வலிப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது சமூகத்தில் மாற்றுப் பார்வையாகவே பார்க்கப் படுகிறது. மருத்துவ ரீதியாகவும் சட்டரீதியாகவும் இந்நோய் வந்தவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரிடம் நோய் பற்றி தெரிவித்து விடுவது நல்லது. மேலும் தற்பேரும் டாக்டரிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டும். அதற்குரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
- டாக்டர் அழகவெங்கடேசன், பொது மருத்துவ நிபுணர், மதுரை அரசு மருத்துவமனை.
விக்னேஷ், திண்டுக்கல்: குழந்தைகளுக்கு கண்புரை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கண்புரை பிரச்னை என்பது பிறவியிலே குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பெண்கள் கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த ஆகாரங்களை சாப்பிடாமல் இருப்பது தான் இதற்கு காரணம். அந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசியை முறையாக செலுத்த வேண்டும். ரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும்.
குழந்தைகள் பிறக்கும் போது கண்புரை இருப்பது கண்டறியப்பட்டால் 2 மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் மன அழுத்தம் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு நலமாக இருந்தாலே வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
-டாக்டர் ரவீந்திரன், கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்.
எல்.மதிவதனா, தேனி: என் ஒன்றரை வயது பெண் குழந்தை அடிக்கடி அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு தற்கு தீர்வு என்ன?
ஒரு மாத குழந்தை என்றால் பசிக்கான அழுகையாக இருக்கலாம். ஆனால் ஒன்றரை வயது என்பதால் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்களிடம் காண் காண்பித்து என்னவென்று அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதிகம் இனிப்பு சாப்பிட்டு, குடற்பூச்சி இருக்கும் போது தொடர் அழுகை ஏற்படும். தூக்கத்தில் தொந்தரவு இருந்தாலும் இப்பிரச்னை இருக்கும். கிடைத்த பொருட்களை எல்லாம் வாயில் போட எத்தனிக்கும் வயது என்பதால் தாய்மார்கள் கவனமாக கையாள வேண்டும்.
ஒரு வேளை உடலுக்கு ஒவ்வாத பொருட்களை விழுங்கியிருந்தாலும் இதுபோன்ற அழுகை வரும்.
டாக்டர் செல்வக்குமார், தலைவர், குழந்தைகள் நல சிகிச்சைத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி.
ம. செல்வம்,காரியாபட்டி : அடிக்கடி தலைவலி ஏற்பட்டு உடல் சோர்வாக இருப்பதுடன், நாக்கு வறண்டு காணப்படுகிறது. சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
வெயில் தாக்கத்தால் உடலில் உள்ள எனர்ஜி வீணாகி தலை வலி, சோர்வு ஏற்படும். அதிக தாகம் எடுத்து, நாக்கு நாக்கு வறண்டு காணப்படும். தோல் சுருக்கம் ஏற்படும். வெளியில் செல்லும் போது குடைபிடித்து செல்லவேண் டும். கைகளில் கிளவுஸ் அணிய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், வெள்ளரி, பழ ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தினமும் இரு வேளை குளிக்க வேண்டும். சீராக வைத்துக் கொள்ளத் தவறினால் பல்வேறு நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.
- டாக்டர் பிருந்தா, காரியாபட்டி