PUBLISHED ON : மார் 16, 2025

பல ஆண்டுகளாக அறியப்பட்ட பொன்னுக்கு வீங்கி அல்லது அம்மைக்கட்டு அல்லது கூகைக்கட்டு எனும் நோய், சமீப காலமாக குழந்தைகளிடம் அதிகம் பரவுகிறது.
தமிழகத்தில் நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2021-22ல் 61, 2022-23ல் 129, 2023-24ல் 1091க்கும் மேல் என ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. பல மருத்துவமனைகளில் இந்நோய் பாதிப்பு குறித்து பதிவு செய்யாததால் கூடுதல் எண்ணிக்கை இருக்க வாய்ப்புண்டு.
காரணங்கள் என்ன
'பாராமைக்ஸோ' எனும் வைரஸ் மூலம் இந்நோய் ஏற்படுகிறது. தும்மல், இருமல், விளையாடும் போது, பாதிக்கப்பட்டவருடன் உணவருந்தும் போது, பாதிக்கப்பட்டவர் குழந்தைகளை முத்தமிடும் போது என 3 முதல் 12 வயதுடைய பள்ளி குழந்தைகளிடையே எளிதாக பரவுகிறது.
இந்த வைரஸ் தாக்கிய குழந்தைகளிடம் இருந்து 6 நாட்கள் முன்பும், 9 நாட்கள் பின்பும் மற்ற குழந்தைகளுக்கு பரவும் என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.
அறிகுறிகள்
உடல்வலி, தலைவலி, சோர்வு, பசியின்மை ஏற்படும். சில நாட்களில் இடது, வலது காதுகளுக்கு கீழ் உமிழ்நீர் சுரப்பி வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். இதனால் உணவு உட்கொள்வதில் சிரமம், வாய் வறட்சி, காய்ச்சல், மூட்டு வலி ஏற்படும். இவை இரு வாரங்களில் சரியாகும்.
20 சதவீத குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கினாலும் பாதிப்பு இருக்காது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களையும், பெரியோர்களையும் இந்நோய் அரிதாக தாக்கும். அப்போது நோயின் தாக்கமும் பக்க விளைவுகளும் அதிகம் இருக்கும்.
சிகிச்சை என்ன
இந்நோய் வைரஸ் மூலம் ஏற்படுவதால் 'ஆண்டிபயாடிக்' மருந்துகள் பலனளிக்காது. உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு 2 வாரங்களில் நோய் முற்றிலும் குணமாகும். நோயின் தாக்கத்தை குறைக்க வெந்நீர் அதிகம் குடிக்க வேண்டும். பழச்சாறு உமிழ்நீரை அதிகரித்து வலியை கூட்டும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும். எளிய உணவுகளை சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். வலி அதிகம் இருந்தால் 'பாராசிடமால்' மருந்து உட்கொள்ளலாம். வீக்கம் உள்ள இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். தேவையான துாக்கம் அல்லது ஓய்வு அவசியம்.
பக்க விளைவுகள்
12 வயது கீழ் உள்ளவர்களுக்கு பக்க விளைவுகள் அரிதாகவே காணப்படும். பெரியவர்களில் 5 சதவீதம் பேருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகும். 20 சதவீத ஆண்களுக்கு விரை வீக்கம், வலி ஏற்பட்டு ஒரு வாரத்தில் சரியாகும். 5 சதவீத பெண்களுக்கு கருமுட்டை வீக்கம், வலி ஏற்படலாம். அரிதாக மலட்டுத் தன்மை உண்டாகும். ஆறாயிரத்தில் ஒருவருக்கு மூளை, தண்டுவட பாதிப்புகள் ஏற்படலாம். 15 ஆயிரத்தில் ஒருவருக்கு செவி திறன் பாதிப்பு ஏற்படலாம். இதயம், சிறுநீரகம் பாதிப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு 12 - 16 வாரங்களில் இந்நோய் தாக்கினால் கரு கலைய வாய்ப்புள்ளது.
தடுக்கும் வழிமுறைகள்
எம்.எம்.ஆர்., எனும் தடுப்பூசி மூலம் இந்நோயை தடுக்கலாம். இத்தடுப்பூசியை குழந்தை பிறந்த 9வது, 15வது மாதங்களில் இட வேண்டும். இந்த ஊசி தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து போடப்பட்டாலும் அரசு மருத்துவமனையில் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய குழந்தை நலச்சங்கமும் தமிழக அரசும் மீண்டும் இந்நோய்க்கான தடுப்பூசியை சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். விரைவில் அமல்படுத்தினால் நோயின் தாக்கம் குறையும்.
பொதுமக்கள், குழந்தைகள் தன்சுத்தம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் கண்டறிந்தவுடன் மருத்துவமனைகள் அரசிடம் முறையாக பதிவு செய்வதன் மூலம் தற்காலிக நிலவரத்தை அரசு கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மதுரை.