sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்...

/

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : ஜூலை 13, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திவ்யா, மதுரை: வெண்மை நிற பற்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?

பற்களின் இயற்கையான நிறத்தில் இருந்து மாறி சிலருக்கு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக இருக்கும். சில நேரம் பற்களில் திட்டு திட்டாக நிறம் மாறியிருக்கும். இயற்கை நிறம் மாறுவதற்கான காரணங்களை இரண்டு வகையாக சொல்லலாம். ஒன்று பற்களின் வெளிப்புறத்தில் ஏற்படும் நிற மாற்றம். மற்றொன்று உட்புறத்தில் ஏற்படும் நிறமாற்றம். பெரும்பாலான பற்களில் மஞ்சள் தன்மை ஏற்படுவதற்கு காரணம் நாம் அன்றாடம் உட்கொள்ளும் காபி, டீ மற்றும் நிறம் அதிகம் கலந்த உணவுப்பொருட்கள் தான். புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்தும் போதும் பற்களில் பழுப்பு முதல் கருமை நிறம் வரை பற்களின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் ஏற்படும். பற்களின் உட்புறத்தில் இருந்து நிறம் மாறுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

பற்கள் முளைக்கும் வயதில் குடிநீர் கூட பற்களின் நிறத்தை நிர்ணயிக்கும். உடல்நலத்திற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் ஒருசில, பற்களின் தன்மையை மாற்றி நிறத்தையும் மாற்றும். மரபு வழியாக ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். கீழே விழுந்தோ அல்லது எதிலாவது பற்களை இடித்துக் கொண்டு பற்களில் அடிபட்டால் பல மாதம் கழித்து அடிபட்ட பற்கள் நிறம் மாறும். பல் தேய்க்கும் போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்தால் பற்களில் தேய்மானம் ஏற்படும். அப்போதும் பற்கள் ஒருவித பழுப்பு நிறத்தில் தெரியும்.

வெண்மையான பற்கள் அப்படியே இருப்பதற்கு அதனை சரியாக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு முறை துலக்க வேண்டும். பற்களின் நிறத்திற்கு மாற்றம் ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

வெளிப்புறத்து நிற மாற்றத்தை 'பிளீச்சிங்' எனும் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். ஒரு ரசாயன கலவையை பற்களின் மேல் குறிப்பிட்ட நேரம் தடவி ஊதா கதிர்கள் பாய்ச்சி பற்களை வெண்மையாக்கலாம். இம்முறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பாதுகாப்பானவை. பல் டாக்டர் கண்காணிப்பில் தான் அவை செய்யப்படும். உட்புறத்தில் இருந்து நிறம் மாறும் போது பற்களின் மேல் 'வெனியர்' அல்லது 'கேப்' போட்டு நிறத்தை சரிசெய்யலாம்.

-டாக்டர் ஜெ. கண்ணபெருமான், பல் சீரமைப்பு நிபுணர், மதுரை

பெ.வேலாயுதம்,சின்னாளபட்டி: 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வழிகள்?

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யலாம். பொதுவாக வைரஸ் தொற்றுகளால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. சுவாச மண்டல பிரச்னைகள், ஆஸ்துமா, மூச்சு குழாய் வளர்ச்சி போன்ற பிரச்னைகள் சளி உற்பத்தியை அதிகரிக்கலாம். காற்று மாசு காரணமாகவும் சளி ஏற்பட வாய்ப்புண்டு. தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என காரணங்களை பட்டியலிடலாம்.

குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு அளிப்பது, பழங்கள், காய்கறிகள் ,புரத உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் ,திரவ உணவுகளை அதிகமாக கொடுப்பதால் சளியை தளர்த்தி உடலின் நீர் இழப்பை தடுக்கலாம். அட்டவணை வரன்முறைப்படி குழந்தைகளுக்கு உரிய நேரங்களில் தடுப்பூசி செலுத்துவதால் சளி காய்ச்சலில் இருந்து பாதுகாக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு கிருமிகள் பரவுவதை தடுப்பது, குழந்தைகளுக்கு அடிக்கடி கைகள் கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துதல், சளி அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலக்கி இருத்தல், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் பாதுகாக்க உதவும். 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் சளி, இருமல் அறிகுறிகளை குறைக்க உதவும். பாலில் மஞ்சள் துாள் கலந்து கொடுப்பதன் மூலம் சளி, இருமல் அறிகுறிகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

--டாக்டர் கா.சாந்தபெரூபா, மகப்பேறு நிபுணர், சின்னாளபட்டி

டி.அருண், போடி: எனக்கு வயது 29. நான் பணிபுரியும் இடத்தில் 25 நாட்களுக்கு முன் கட்டடப் பணியில் இருக்கும் போது கல்லில் மோதி, எனது வலது காலில் இரண்டு விரல்களின் சிறிய குருத்தெலும்புகள் உடைந்தன. டாக்டரிடம் சிகிச்சை பெற்று 20 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் தாங்க முடியாத வலி உள்ளது. நாட்கள் கூடக்கூட வலி அதிகமாகி வருகிறது. காயம் சிறிதாக இருந்தாலும் இயல்பாக நடக்க முடியவில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை நாட்கள் ஆகும். தீர்வு என்ன?

இம்மாதிரியான விரல்களின் குருத்தெலும்புகள் மிக மெல்லிய வடிமைப்பில் கால்களில் அமைந்துள்ளன. வளரிளம் வருவத்தினருக்கு இது எளிதாக இணைந்து விடும். உடைந்து இருபாகங்களாக உள்ள குருத்தெலும்புகள் சிகிச்சையில் இணையும் போது, நேராக இணையாமல் மாறுபட்ட கோணங்களில் இணையும் போது, அதனை எலும்பியல் மருத்துவ சிகிச்சை முறையில் மால்யூனியன் எனக்கூறப்படுகிறது. இவ்வாறு இருந்தால் தாங்க முடியாத வலி ஏற்படும். ஆனால் உடைந்த பகுதிகளை நேராக இணைந்தால் வலி இருக்காது. விரைவில் குணமடைந்துவிடும். இம்மாதிரியான மெலிதான குருத்தெலும்பு முறிவுகளை 21 நாட்களில் இணைத்து விட வேண்டும். கூடுதல் நாட்களாக வலி இருந்தால், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களை கண்டு, பரிசோதனை செய்வது அவசியம். பிஸியோதெரபிஸ்ட் அறிவுரை குணமடைய உதவும்.

- டாக்டர் சிவபாக்கியம், தேனி

ஆர்.ரேவதி, ராமநாதபுரம்: உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். தீர்வு என்ன?

பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க பெண்கள் தினசரி 30 நமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவுகளில் கார்போ ஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டு வலியால் பாதிக்கப்படுவார்கள். இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சரியான உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உடல் எடை குறையும்.

-டாக்டர் ஆர்.கண்ணகி, அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

க.சண்முகபிரியா, சிவகங்கை: லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சிறந்ததா?

லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது கேமரா, சிறப்பு கருவிகளை கொண்டு சிறிய கீறல் மூலம் செய்யப்படும் செயல்முறை. திறந்த அறுவை சிகிச்சையை விட பல நன்மைகளை வழங்குகிறது. இந்த சிகிச்சையின் மூலம் சிறிய வெட்டுக்களே இருப்பதால் குறைவான திசு சேதம் ஏற்படுகிறது.

இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வடு குறைவாகவே காணப்படும். அதிகப்படியான ரத்தப்போக்கு, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வலியை குறைக்கிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் நோய் தொற்றுக்கான ஆபத்து குறைவாகவே காணப்படும். எனவே நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைந்து தங்கள் வழக்கமான செயல்பாடுகளுக்கு விரைவாக திரும்ப முடியும்.

- டாக்டர் த.நிதா, அறுவை சிகிச்சை நிபுணர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை



ச.கார்த்திகேயன், சாத்துார்: எனது தந்தைக்கு 55 வயது ஆகிறது. இரவு, அதிகாலை நேரத்தில் தொடர்ந்து இருமலால் அவதிப்படுகிறார். தொடர் இருமலுக்கு காரணம் என்ன. இதை எப்படி தவிர்க்கலாம்?


வைரஸ், பாக்டீரியா தொற்றாலும் ஒவ்வாமை, ஆஸ்துமா காரணமாகவும் தொடர் இருமல் ஏற்படும். மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா காரணமாகவும் தொடர் இருமல், சளி தொந்தரவு ஏற்படும். பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு தொடர் சளி, இருமல் ஏற்படும். செல்லப்பிராணிகளின் முடி, அறையில் படிந்திருக்கும் துாசி, புதிதாக பெயின்ட் அடித்ததன் காரணமாகவும் தொடர் இருமல் ஏற்படலாம். புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடித்தால் இருமல் குறையும். 8 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்.

- டாக்டர் கொண்டல் சாமி, பொது மருத்துவர், சாத்துார்






      Dinamalar
      Follow us