
சிவனேஸ்வரன், மதுரை: எனக்கு நீண்ட காலமாக ஆஸ்துமா உள்ளதால் ஊசி, இன்ஹேலர் பயன்படுத்துகிறேன். நிரந்தரமாக குணமாகவில்லை. என்ன செய்வது?
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் துாசு, குப்பை, ஒட்டடை சேராமல் சுத்தம் செய்ய வேண்டும். இவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது. அழுகிய உணவுப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சுவர்களில் பூஞ்சை சேரக்கூடாது. 'ரூம் ஸ்பிரே' பயன்படுத்த வேண்டாம்.
படுக்கை விரிப்பு, தலையணை உறையை அடிக்கடி மாற்றாவிட்டால் 'டஸ்ட் மைட்' எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் துாண்டும். கம்பளிப் போர்வை, ஊதுவத்தி, கொசுவிரட்டி, சாம்பிராணிப் புகை, கற்பூரம் ஆகியவற்றாலும் ஆஸ்துமா அதிகமாகலாம்.
டூவீலர்களில் முகக்கவசம் அணிந்து செல்லலாம். இளங்காலை நேரம் தோட்டத்து பக்கம் சென்றால் பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் துாண்டலாம். வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது.
பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளிகளின் இறகு, ரோமம், கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தும். பஞ்சு, ரைஸ்மில், சிமென்ட் புகை போன்ற இடங்களில் வேலை செய்வதையும் குடியிருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமாவைத் தடுப்பதில் உணவுக்கும் கணிசமான பங்கு உண்டு. எதைச் சாப்பிட்டால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தவிர்க்க வேண்டும். ரெடிமேட் உணவு, செயற்கை நிறம் கலந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
பிராணாயாமம், காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதுவது அல்லது ஸ்ட்ரா மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதுவது போன்ற பயிற்சிகளை தினமும் செய்தால் நுரையீரலின் ஆற்றலை அதிகப்படுத்த முடியும்; ஆஸ்துமாவைத் தள்ளி வைக்க முடியும்.
- டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்
வெங்கடேஷ், பெரியகோட்டை: எனக்கு 32 வயது ஆகிறது. எனது அம்மாவுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் எனக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பழக வேண்டும். ஆண்களுக்கு வயிறு அல்லது தொப்பையின் சுற்றளவு 94 லிருந்து102 சென்டி மீட்டர், பெண்களுக்கு 80லிருந்து 88 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். இதற்கு மேல் அதிகரிக்க விடக்கூடாது. வயிற்றின் சுற்றளவு அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் விரைவில் வர வாய்ப்புள்ளது. உயரத்திற்கு ஏற்றார் போல் உடலின் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை குறையுங்கள்.
மன அழுத்தத்தினால் ரத்தத்தில் சில ஹார்மோன்களின் அளவு அதிகமாகி சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். கொய்யாப்பழம், சாத்துக்குடி, மாதுளை, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிடலாம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க புரதச்சத்து அவசியம். தேவையான புரதச் சத்துக்களை பால் மற்றும் அதன் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். புகைப்பிடித்தல், குடிப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து கோழிக்கறி, முட்டையை சாப்பிடுவது நல்லது.
- டாக்டர் ஆசைத்தம்பி, பொதுநல மருத்துவர், ஒட்டன்சத்திரம்
பி.கிருஷ்ணமூர்த்தி, கூடலுார்: எனக்கு 60 வயது ஆகிறது. சைனஸ் பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன். நிரந்தர தீர்வுக்கு ஆலோசனை கூறுங்கள்?
சைனஸ் என்பது ஒவ்வாமையால் வரக்கூடியது. துாசி அலர்ஜியால் வரும். சளிப் பிரச்னை அதிகமாகி கண் மற்றும் மூக்குக்கு இடையில் உள்ள அறையில் நீர்கோர்த்து சைனஸ் ஆக மாறும். மூக்கின் தண்டுவடம் வளைந்து சுவாசப் பிரச்னை ஏற்படும். எதனால் வருகிறது என்பதை டாக்டரிடம் பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின் அதற்கு ஏற்றவாறு முறையான சிகிச்சை பெற வேண்டும். இதற்கு சிகிச்சை என்பதை காட்டிலும், ஒவ்வொரு ஒவ்வாமைக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளுடன் இருந்தால் நிரந்தர தீர்வு காணலாம். குளிர்காலங்களில் சுடுநீர் குடிப்பதுடன் மூக்கு காதுகளில் குளிர்ந்த காற்று செல்லாமல் பாதுகாக்க வேண்டும். துாசி அலர்ஜி உள்ளவர்கள் டூவீலர் மற்றும் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்வது நல்லது.
-- டாக்டர் மு.அனுபாக்யா, அரசு மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார்
எம்.ராதிகா, ராமநாதபுரம்: எனது 10 வயது மகளுக்கு மண்ணில் விளையாடினால் தோல் அரிப்பு ஏற்படுகிறது. சொறி சிரங்கால் சிரமப்படுகிறார். இதற்கு என்ன காரணம் எப்படி சரியாகும்?
சொறி சிரங்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால்ஏற்படும் சரும பாதிப்பு. இது சருமத்தில் தோலுரிதல், சிவந்துபோதல், கடுமையான அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.சருமத்தில் அதிகமாக தடிப்புகள் உண்டாகும்.
குழந்தைகள், சிறுவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்மென்மையான தோல் காரணமாக துாசி மண்ணில் விளையாடுவதும், சரியாக கை, கால்களை சுத்தம் செய்யாத போதும்,அழுக்கு துணியை அணியும் போதும் தோல் அரிப்பு மற்றும் சொறி சிரங்குகள் வருகிறது.
இதற்கு சித்த மருத்துவத்தில் பரங்கி பட்டை,அருகம்புல் தைலம், திரிபுலா பொடி, ஊமத்தை இலை, தாதுபொருட்கள் கலந்த தைலம் போன்றவைகளை நோயின்பாதிப்பிற்குஏற்றவாறு மருந்தாக பரிந்துரை செய்கிறோம். தொடர்ந்து ஏழுநாட்கள் பயன்படுத்தினால் சரியாகிவிடும்.
தோல் அரிப்பு, அலர்ஜி நிரந்தமாக குணமாக வேண்டும் என்றால் தினமும்காய்கறிகள், கீரைகள் அதிகளவில் சாப்பிட வேண்டும்.கத்தரிக்காய், கருவாடு, வாழைக்காய், கடலை பருப்பு ஆகியவற்றைதவிர்க்க வேண்டும். அழுக்கு இல்லாத சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும்.
- எம்.எஸ். சுஜாதா, உதவி மருத்துவ அலுவலர், சித்தா பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
தர்மராஜ், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 20 வயது ஆகிறது. தற்போதே தலைமுடி நரைக்க துவங்கியுள்ளது. இது ஏன் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இது இளநரை. பரம்பரையாக, வைட்டமின்கள், ஜிங்க் சத்து குறைபாடுகளாலும், பித்தம் அதிகரிப்பதாலும் இளநரை வரலாம். இதற்கு தீர்வாக கறிவேப்பிலையை பொடி செய்து வெண்ணையில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உடலில் ஏற்படும் பித்த அதிகரிப்பை குறைக்க வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மருதாணி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இரண்டு முறை கரிசலாங்கண்ணிக் கீரையை சமைத்து சாப்பிடலாம். நீலி பிருங்காதி தைலம், கரிசாலை தைலம் முதலிய தைலங்களை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தினமும் பயன்படுத்தலாம்.
சித்தா டாக்டர்களின் நேரடி ஆலோசனையின் படி காயகற்ப முறைகளை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
- டாக்டர் சுந்தரராஜ மன்னன், சித்தா மருத்துவர், அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்துார்