PUBLISHED ON : ஆக 11, 2020

இன்றைய கொரோனா சூழலில், அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், நம் வீட்டு பெண்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வேலை, 24 மணி நேரமும் இருந்தபடியே உள்ளது. வைரஸ் பயம் காரணமாக, வீட்டு வேலையில் உதவி செய்பவர்களையும் நிறுத்தி விட்டதால், வேளை பளு அதிகரித்து உள்ளது.
அதிலும், வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை செய்யும் பெண்களின் நிலை இன்னும் மோசம். தங்களின் அலுவலக வேலைக்கு நடுவில், ஒருபுறம் சமையல், மறுபுறம் குழந்தைகளுக்கான, 'ஆன் லைன்' வகுப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இடையிடையே வீட்டில் உள்ளவர்களுக்கு காபி, டீ, கபசுர குடிநீர் தயாரித்து தர வேண்டும். ஓய்வே இல்லாமல், ஒரே சமயத்தில் பல வேலைகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பொது முடக்கம் அறிவித்த முதல் இரண்டு வாரங்கள், இவற்றை ஒரு சுகமான வேலையாக கருதி வந்தவர்கள் பலரிடமும், இப்போது ஏதோ ஒருவித சலிப்புஉணர்வு ஏற்படுகிறது.
காரணம், உடலளவில் ஏற்படும் பலவீனம் மற்றும் துாக்கமின்மை இவை இரண்டும் மிக முக்கிய காரணங்கள். இந்த பதிவில், பெண்களுக்கு உடலளவில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, எளிய வைத்திய முறைகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என, எண்ணுகிறேன்.
வலி
பொதுவாக ஏற்படும் வலியைத் தாண்டி இந்த சூழலில் நிறைய பெண்கள் சொல்லும் உபாதை, இடுப்பு வலி, தோள் பட்டை வலி, மணிக்கட்டு வலி... இந்த மூன்றும் முன்பை விட சற்று அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள்... அதிக நேரம் சமையலில் ஈடுபடும் போது, மணிக்கட்டில் ஒருவித வலி ஏற்படுகிறது; சிலருக்கு இது வீக்கமாகவும் மாறும்.
இன்று பெரும்பாலான வீடுகளில், சமையல் அறையில் நின்று தான் பாத்திரம் கழுவ வேண்டும். பாத்திரம் கழுவும் மேடைக்கும், நமக்கு மான இடைவெளி சரியாக இல்லாமல் போனால், இடுப்பு வலி அதிகரிக்கும்; சிலருக்கு குதிகால் வரை வலி பரவும்.
லேப் டாப்பில் அதிக நேரம் அலுவலக வேலை செய்ய வேண்டியுள்ளது. வேலை செய்ய ஏதுவாக இருக்கைகள் இல்லாமல் இருக்கலாம். இதனால் தோள்பட்டை, கழுத்து வலி அதிகரிக்கும். இரவில் படுத்துக் கொண்டே நீண்ட நேரம் மொபைல் போன் பார்ப்பது கழுத்து வலியை அதிகரிக்ச் செய்யும்.இது போன்ற வலிகளுக்கு சிறு சிறு வைத்திய முறைகள் கை கொடுக்கும்.
மணிக்கட்டு வலி
கால் டீ ஸ்பூன் அளவு பெருங்காயத் துாள் எடுத்து, நீரில் குழைத்து, வலி இருக்கும் இடத்தில் பற்று போட்டு, 15 நிமிடங்கள் கழித்து, கழுவி விட வேண்டும்.
இடுப்பு மற்றும் மூட்டு வலி
100 மி., நல்லெண்ணெயை காய்ச்சி, அத்துடன் பொடித்த குங்கிலியத்தை கலந்து வைத்து, வலி உள்ள இடத்தில் தினமும தடவி வரலாம்.
மூட்டுகளில் வீக்கம் இருந்தால், சுக்கு பொடியுடன், பொடித்த சாம்பிராணியை நீரில் குழைத்து, பற்று போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சாம்பிராணி சிலருக்கு எரிச்சல் தரும்; தவிர்த்து விடலாம்.
100 மி., நல்லெண்ணெயில், இடித்த முருங்கை பட்டையை சேர்த்து காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இதை இடுப்பு, தோள்பட்டை, மூட்டுகளில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
ஆவாரம் பூ மற்றும் கறுப்பு உளுந்து சம அளவு எடுத்து, வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடல் வலி இருப்பவர்கள், இந்த பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.
வியர்வை மற்றும் வியர்க்குரு
அதிக நேரம் வீட்டு வேலை செய்வதால், தொடர்ந்து வியர்க்கும். இதனால், வியர்க்குரு ஏற்படும். அருகம்புல் தைலத்தை உடல் முழுவதும் தடவலாம். தலைக்கும் தடவிக் கொள்ளலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, குளிக்கும் நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் குப்பைமேனி இலை சேர்த்து காய்ச்சி, அதை தடவலாம்.
உடல் எடையை குறைக்க அதிக அளவில் ஓட்ஸ் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஓட்ஸ், அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.
சிறிதளவு ஓட்சை பொடித்து நீரில் குழைத்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம். வறட்சியான தோல் இருப்பவர்கள், ஓட்ஸ் தேய்த்து குளிக்கலாம்.
மாதவிடாய் காலத்தில், நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பை தவிர்க்க, ஓட்ஸால் தேய்த்து கழுவலாம்.
உடல் சோர்வு
இரண்டாவது முறை அரிசி கழுவிய தண்ணீரில், சிறிதளவு வெல்லம் சேர்த்து குடிக்கலாம். கறுப்பு கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீரில் சிறிதளவு சீரகம், கல் உப்பு சேர்த்து குடிக்கலாம். கால் டம்ளர் அளவு சாதம் வடித்த தண்ணீரில், சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்கலாம்.
உடல் உஷ்ணம்
சமையல் அறையில் பாதி நேரமும், மீதமுள்ள நேரத்தில் அலுவலக வேலை நிமித்தமாக கைபேசி அல்லது லேப் டாப்பிலும் நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால், உடல் உஷ்ணம் அதிகரித்து, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், துாக்கமின்மை, அதிக நா வறட்சி போன்ற உபாதைகள் ஏற்படலாம். ரத்த சோகையாலும், சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்படுவதாலும், வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
உடல் உஷ்ணத்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால், துளசி விதைகள் அல்லது பாதாம் பிசினை முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்கலாம். ரத்த சோகைக்கு உலர்ந்த அத்திப்பழம், மணத்தக்காளி கீரை, பசலை கீரை, வேப்பம்பூ நல்ல பலனைக் கொடுக்கும்.
கிருமி தொற்று ஏற்பட்டால், சாதம் வடித்த நீரில், அரை டீ ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து குடிக்கலாம். மாதுளம் பழம், வெந்தயம் ஊற வைத்த தண்ணரும் நல்ல பலன் தரும். அதிக நா வறட்சி இருந்தால், அரிசி பொரியை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அரிசி, திப்பிலி இவற்றை சிறிது வாயில் போட்டு மென்றாலும் பலன் கிடைக்கும்.
துாக்கமின்மை
துாக்கமின்மை, இன்று மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் மனச்சோர்வும், மன உளைச்சலும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
நான்கு பாதாம் பருப்புடன், 1/2 டீஸ்பூன் கசகசா சேர்த்து ஊற வைத்து சாப்பிடலாம். ஜாதிக்காய் பொடியை அரை டீ ஸ்பூன் தேனில் குழைத்து, இரவு உணவுக்கு பின், 21 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
உள்ளங்கையில் நல்லெண்ணெய் தேய்ப்பது, உச்சந்தலையில் இரண்டு சொட்டு சந்தன தைலம் அல்லது பாதாம் எண்ணெய் தேய்ப்பது, உடல் சூட்டை தணித்து, ஆரோக்கியமான துாக்கத்தை உண்டு பண்ணும்.
தினமும், 20 நிமிடங்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது, காலை உணவை, 9:00 மணிக்குள் சாப்பிடுவது, பிடித்த விஷயங்களில் தினமும், 30 நிமிடங்கள் ஈடுபடுவது, பிடித்த உணவை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடுவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
எல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டில் உள்ளவர்கள், பெண்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம். பெண்களின் ஆரோக்கியம் இந்த சமூகத்தின் ஆரோக்கியம்.
டாக்டர் க.மது கார்த்தீஸ்
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687

