தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடல் வலியை போக்கும் அன்னாசிப் பூ!

உடல் வலியை போக்கும் அன்னாசிப் பூ!

உடல் வலியை போக்கும் அன்னாசிப் பூ!


PUBLISHED ON : பிப் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பரவலாக குளிர் காய்ச்சல் பரவுகிறது. குறிப்பாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அதிகம் பாதிக்கிறது. அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடல் அசதி, தலை பாரம், தொண்டை கமறல் இவையெல்லாம் நான்கைந்து நாட்களுக்கு உள்ளது.

இதற்கு சித்த மருத்துவ தீர்வுகளை பார்க்கலாம்...

ஆரம்பத்தில் தொண்டை கமறலாகவே ஆரம்பிக்கிறது. தற்போது உள்ள பனிப் பொழிவு மோசமானதாகவே உள்ளது.

தொண்டை கமறல் லேசாக இருக்கும் போதே, கால் டீஸ்பூன் மஞ்சள், அதே அளவு நெய்யில் கலந்து இரவு துாங்கச் செல்வதற்கு முன், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது. உணவுக் குழாயில் கிரீஸ் போல நெய் படிவதால், எளிதில் கிருமி தாக்காமல் பாதுகாக்கிறது.

தொண்டை கமறல் அதிகமாக இருந்தால், மஞ்சள், நெய் கலவையை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம், இந்தப் பருவத்தில் வரும் தொண்டை தொற்று அனைத்தும் வறட்சியின் தொடர்ச்சியாக வருகிறது. எனவே, துளசி, மிளகு, ஓமம், சித்தரத்தை, பனங்கற்கண்டு இவற்றை சாப்பிடக் கூடாது; இவை, இருக்கிற பிரச்னையை அதிகப்படுத்தி விடும்.

உப்புத் தண்ணீர் வைத்து கொப்பளிக்கக் கூடாது. இது அந்த நேரத்திற்கு நன்றாக இருந்தாலும், அதன் பின் வறட்சியை அதிகப்படுத்த, தொற்றையும் அதிகமாக்கி விடும்.

உப்புக்கு பதிலாக இரண்டு, மூன்று சிட்டிகை கடுக்காய் பொடியை போட்டு கொப்பளித்தால், அதில் உள்ள துவர்ப்பு தொற்றுக்கும் நல்லது; எரிச்சலையும் குறைக்கும்.

இதன் தொடர்ச்சியாக உடல் அசதி, உடல் வலி, லேசான காய்ச்சல் இருப்பதாக சொல்கின்றனர். இதற்கு இரண்டு, மூன்று அன்னாசி பூவை லேசாக வறுத்து பொடித்து, அதிலிருந்து இரண்டு சிட்டிகை எடுத்து தேன் அல்லது வென்னீரில் கலந்து, இரண்டு முறை சாப்பிடலாம்.

இந்த மருந்துகள் அனைத்தும் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடலாம். உடல் வலி, மூக்கடைப்பு, காய்ச்சல் இவற்றிற்கு அன்னாசிப் பூ நல்லது. இதை அதிகம் சாப்பிட்டால், உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி விடும்.

தலைவலி, தலை பாரம் இருந்தால், சுக்குப் பொடியை வென்னீரில் குழைத்து, நெற்றியில் பற்று போடலாம். ஒரு சிலருக்கு காய்ச்சலின் தொடர்ச்சியாக வாந்தி, பேதி வருகிறது. இதற்கு தீர்வாக, கால் ஸ்பூன் சுக்குப் பொடியை நெய்யில் குழைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சமயத்தில், குழந்தைகளுக்கு இனிப்பு கொடுப்பதை தவிர்த்து விடவும். காரணம், இனிப்பு சாப்பிட்டதைத் தொடர்ந்தே, இந்த தொற்று எளிதாக பரவி விடுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு, எந்த வித இனிப்பும் குழந்தைகளுக்கு தர வேண்டாம்.

கபத்தை அதிகப்படுத்தி, காய்ச்சல் வரும் வாய்ப்பு உள்ளதால், இந்த சீசனில், பழங்களில் கமலா ஆரஞ்சு, பலாப் பழம் இரண்டையும் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

எந்த அளவுக்கு வயிறுக்கு எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளைத் தருகிறோமோ, அந்த அளவுக்கு குணமாவது விரைவில் நடக்கும். எனவே, காய்ச்சல் இருக்கும் இரண்டு நாட்களுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியும், ரசம் சாதமும் சாப்பிடலாம்.

சாத்துக்குடி பழச்சாறு பிழிந்து, அதே அளவு ஆறிய வென்னீர் சேர்த்து குடிக்கலாம். இரண்டு முறை தேநீர் குடிக்கலாம்; காபியை தவிர்த்து விடுவது நல்லது.

எளிதாக பரவக் கூடியதாக இந்த தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால், மற்ற குழந்தைகளுக்கு பரவாது. இன்னொரு பக்கம் இரண்டு நாள் நல்ல ஓய்வில் இருந்தால், முழுமையாக குணம் பெற்று விடலாம்.

இவையெல்லாம் செய்தும், மூன்று நாட்களுக்குள் குணம் தெரியாதபட்சத்தில், மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவது அவசியம்.

டாக்டர் மது கார்த்தீஷ்,

சித்த மருத்துவர், சென்னை.

99944 93687


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us