எலும்பு, தசை வளர்ச்சிக்கு பாலில் உள்ள புரதம் மிக அவசியம்!
எலும்பு, தசை வளர்ச்சிக்கு பாலில் உள்ள புரதம் மிக அவசியம்!
PUBLISHED ON : நவ 18, 2019

ஏ1, ஏ2 பால் என்பது என்ன?
ஏ1, ஏ2 என்பது, பாலில் உள்ள ஒரு வகையான புரதம். நம் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படுவது, ஏ2 பால். நாட்டு மாடுகள், ஒல்லியாகவும், அதே நேரத்தில், வலிமையுடன், சுறுசுறுப்பாகவும் இருக்கும். 'திமிலி' என்று சொல்லப்படும், முதுகில் உள்ள மேடு போன்ற அமைப்பு, சூரியனில் இருந்து நேரடியாக ஒளிக்கதிர்களை ஈர்ப்பதால், பால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இது, மூளை வளர்ச்சி, அபரிதமான நினைவாற்றலுக்கு உகந்தது.
ஐரோப்பிய நாடுகளில், வெள்ளை நஞ்சு என்று சொல்லப்படும் பால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலப்பின பசுக்களில் இருந்து பெறப்படும், ஏ1 பால். நச்சு தன்மை, கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. ஆட்டிசம், டைப் - 1 நீரிழிவு நோய், பச்சிளங் குழந்தைகளின் எதிர்பாராத இறப்பு, இதய நோய்கள், செரிமான பிரச்னை, மன பிரச்னைகள், நரம்பு கோளாறுகள் உட்பட, பல்வேறு பிரச்னைகள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு காரணம் என்ன?
இரண்டு வகை பாலிலும், 'ஆல்பா கேசின், பீட்டா கேசின்' என்ற, இரண்டு வகையான புரதங்கள் உள்ளன. இவை, பாலில், 80 சதவீதம் புரதச்சத்தை உருவாக்குபவை. ஏ1 பாலில் உள்ள கேசின் புரதங்களின் மரபணுவில், அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் உள்ள, பீட்டா கேசின் மார்பின் - 7 என்ற வேதிப்பொருள், செரிமான மண்டலத்திற்கு சென்று, பல உடல் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. ஏ2 பாலில் உள்ள இந்த வேதிப்பொருள், தனியாக குடலுக்கு செல்வதில்லை. எனவே, செரிமான பிரச்னைகள் வராது.சேமித்து வைக்கும், ஏ2 பாலில், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், ஏ1 பாலில் ஏற்படும் மாற்றம் வரும் என்று சொல்வது, நம் தோலின் நிறம், அவ்வப்போது மாறும் என்பதை போன்று மிகத் தவறானது.
பாலில் உள்ள சத்துக்கள் என்ன?
பாலில் இயற்கையாகவே கால்ஷியம் சத்து உள்ளது. இது பற்களுக்கும் எலும்புகளுக்கும் அவசியம். ஒன்று முதல், 11 வயது வரை, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு, தினமும் தேவையான, கால்ஷியம் சத்து, 200 மில்லி பாலில் உள்ளது. இது தவிர, ஏ, பி2, பி3, பி6, பி12, டி, ஈ, கே, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், துத்தநாகம், செலீனியம் போன்ற சத்துகள் உள்ளன.திசுக்கள், செல்கள் உட்பட, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான புரதம், இதில் இருக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும்?
பிறந்தது முதல், ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு வயதிற்கு மேல், பசு பால் தரலாம்; கொதிக்க வைத்து, ஆற வைத்தபின் தர வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 750 மில்லி லிட்டர் பால் தரலாம். மூன்று - ஐந்து வயது வரை, 600 மில்லி லிட்டர் தேவைப்படும். அதன்பின், 400 மில்லி தரலாம். 13 - 18 வயது வரை, 600 மில்லி லிட்டர் குடிக்க வேண்டும்.சைவ உணவு சாப்பிடுவோர், இந்த அளவை சற்று அதிகரித்துக் கொள்ள வேண்டும். எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு, பாலில் உள்ள புரதம் மிகவும் அவசியம். பருப்பு உட்பட மற்ற புரத உணவுகள் சாப்பிட வேண்டும். ஆனால், வளரும் பருவத்தில், பால் புரதம் பிரதானமாக இருப்பது அவசியம்.
லேக்டோசை செரிப்பதில் பிரச்னை உள்ளதா?
இயற்கையாக பாலில் உள்ள சர்க்கரைக்கு பெயர் லேக்டோஸ். பிறந்ததில் இருந்து, தாய்ப்பாலை குடித்து செரிமானம் செய்கிறோம். நாட்டு மாட்டு பாலையும் குடித்தே வளர்கிறோம். குறிப்பிட்ட வயதிற்கு பின், பாலின் அளவை குறைத்து, அதில், காபி, டீ என, எதையாவது கலந்து குடிக்க துவங்கியதும், பால் செரிக்காது என்ற மனநிலைக்கு வந்து விடுகிறோம்.இரண்டு வயதிற்கு மேல், பாலில் உள்ள லேக்டோசை செரிக்கும் செரிமான என்சைம்கள் குறைந்து விடுகின்றன என சொல்வதில், உண்மை இல்லை.இன்றும், காபி, டீப் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த பழக்கம் இல்லா, 70 வயதை கடந்த முதியவர்கள் கூட, தினமும், இரண்டு டம்ளர் பால் குடிக்கின்றனர். இது செரிக்காது, நல்லதல்ல என்ற மனநிலையே இதற்கு காரணம்.
தாரிணி கிருஷ்ணன்,
ஊட்டச்சத்து நிபுணர்,
சென்னை
044 - 4850 8877
dhar.krish@gmail.com
