* எனக்கு பிரசவமாகி ஓராண்டு ஆகிறது. வயிற்றில், தழும்புகள் உள்ளன. எப்படி சரி செய்வது?
வெ.நிரோஷினி, மயிலாப்பூர், சென்னை.
கர்ப்ப காலத்தில், எட்டு, ஒன்பது மாதங்களில், அதிகமாக தழும்புகள் விழலாம். கருவுற்ற நான்கு மாதங்களுக்குப் பின், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட, 'கோகோ பட்டர்' கலந்த 'மாய்ஸ்சரைசர் கிரீம்களை' ஒருநாளில் நான்கு முறை பூசி வரலாம். அதனால் சருமம் ஈரப்படுத்தப்பட்டே இருப்பதால், தழும்பாக மாறும் வாய்ப்புகள், 50 சதவீதம் குறைக்கப்படும். மேலும், சிலருக்கு தழும்பு விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பூசுவோருக்கு, குழந்தை பெற்ற பின் தழும்புகள் விழுந்தாலும், அவை, 10 சதவீதம் தான் இருக்கும்.
சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக்கூடாது. ஏனெனில், சில கிரீம்களில், 'ஸ்டீராய்டு' கலந்திருப்பதால், கருவுற்ற நேரத்தில், சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எஸ். மகேஸ்வரி, சரும நோய் நிபுணர், சென்னை.
* நாம் வாங்கும் பொருட்கள் இயற்கையாக விளைந்தவை தானா என்பதை எவ்வாறு கண்டறிவது?
கே.ராஜாராமன், கொரட்டூர்
இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவங்கள் மாறுபடும். காய்கறிகள், சாக்கில் கட்டி போட்டு வரும்போது இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகளை பறித்து, ஒருநாள் வைத்திருந்தால் சுருங்கி போகும்.
வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காயில், 20 சதவீதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், மூன்றில் வண்டுகள் இருக்கும். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், விளைவிக்கப்படும்போது, பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
புதினா, கொத்தமல்லி, வெந்தயக் கீரை என்றால், அவற்றிற்கே உரிய தனித்துவமான வாசம் இருக்கிறதா என, முகர்ந்து பார்த்து வாங்கலாம். கீரைகளில், பச்சை வாசம் வீச வேண்டும். சின்ன காய்கள்கூட அதிக எடையுடன் இருந்தால், அவை இயற்கை முறையில் விளைந்தவை என, நம்பலாம்.
ரா. ஆனந்தன், இயற்கை விவசாயி, திருச்சி.
* வீட்டில் குழந்தைகளுடன் விளையாடும் போது, நினைவுத் திறனை சோதிக்கக் கூடிய, எளிமையான விளையாட்டு ஒன்றை சொல்லுங்களேன்?
எ.கோதண்டராமன், திருக்கழுகுன்றம்.
வண்ணங்களால் ஆன, இந்த எழுத்துக்களைப் பாருங்கள். ஆனால், வார்த்தைகளைப் படித்து பார்க்காமல், என்ன நிறம் என்று மட்டும் சொல்ல வேண்டும். முதலில் வரிசைப்படி, பின் வலமிருந்து இடம், கீழிருந்து மேல் என, மாற்றி மாற்றி படித்துப் பார்க்க வேண்டும்.
நீலம் - சிவப்பு - பச்சை
சிவப்பு - கறுப்பு - மஞ்சள்
பச்சை - ஊதா - நீலம்
நீலம் - கறுப்பு - சிவப்பு
கறுப்பு - சிவப்பு - நீலம்
நீலம் - பச்சை - ஊதா
ஜெ.சாம்வேல், மனநல ஆலோசகர், சென்னை.

